கொண்ட குணனே நலமேநற் கோமளம்பண்டை உருவே பகர்வாய் பவளமேமிண்டு தனமே மிடைய விடும் போதில்கண்ட கரணம் உட் செல்லக்கண் டேவிடே.
விட்டபின் கர்ப்பஉற் பத்தி விதியிலேதொட்டுறுங் காலங்கள் தோன்றக் கருதியகட்டிய வாழ்நாள் சாம்நாள் குணம் கீழ்மைசீர்ப்பட்ட நெறியிதுஎன்று எண்ணியும் பார்க்கவே.
பார்த்திட்டு வையத்துப் பரப்பற்று உருப்பெற்றுவார்ச்செற்ற கொங்கை மடந்தையை நீக்கியேசேர்த்துற்று இருதிங்கள் சேராது அகலினும்மூப்புற்றே பின்னாளில் ஆம்எல்லாம் உள்ளவே.
வித்திடு வோர்க்கு அன்றி மேலோர் விளைவில்லைவித்திடு வோர்க்கு அன்றி மிக்கோர் அறிவில்லைவித்தினில் வித்தை விதற உணர்வரேல்மத்தில் இருந்ததோர் மாங்கனி யாமே.
கருத்தினில் அக்கரம் ஆயுவும் யாவும்கருத்துளன் ஈசன் கருஉயிரோடும்கருத்தது வித்தாய்க் காரண காரியம்கருத்தறு மாறுஇவை கற்பனை தானே.
ஒழியாத விந்து வுடன்நிற்க நிற்கும்அழியாப் பிராணன் அதிபலஞ் சத்திஒழியாத புத்தி தபஞ்செப மோனம்அழியாத சித்தியுண் டாம்விந்து வற்றிலே.
வற்ற அனலைக் கொளுவி மறித்தேற்றித்துற்ற சுழியனல் சொருகிக் சுடருற்றுமுற்று மதியத்து அமுதை முறைமுறைசெற்றுண் பவரே சிவயோகி யாரே.
யோகியும் ஞானியும் உத்தம சித்தனும்யோகியும் ஞான புரந்தரன் ஆவோனும்மோகம் உறினும் முறைஅமிர்து உண்போனும்ஆகிய விந்து அழியாத அண்ணலே.
அண்ணல் உடலாகி அவ்வனல் விந்துவும்மண்ணிடை மாய்க்கும் பிராணனாம் விந்துவும்கண்ணும் கனலிடைக் கட்டிக் கலந்தெரித்துஉண்ணில் அமிர்தாகி யோகிக்கு அறிவாமே.
அறியாது அழிகின்ற ஆதலால் நாளும்பொறியால் அழிந்து புலம்புகின் றார்கள்அறிவாய் நனவில் அதீதம் புரியச்செறிவாய் இருந்து சேரவே வாயுமே.
மாதரை மாய வரும் கூற்றம் என்றுன்னக்காதலது ஆகிய காமம் கழிந்திடும்சாதலும் இல்லை சதகோடி ஆண்டினும்சோதியின் உள்ளே துரிசறும் காலமே.
காலம் கடந்தவன் காண்விந்து செற்றவன்காலம் கடந்தழிந் தான்விந்து செற்றவன்காலங் களின்விந்து செற்றுற்ற காரிகைகாலின்கண் வந்த கலப்பறி யாரே.
கலக்கு நாள் முன்னாள் தன்னிடைக் காதல்நலத்தக வேண்டில் அந் நாரி யுதரக்கலத்தின் மலத்தைத்தண் சீதத்தைப் பித்தைவிலக்கு வனசெய்து மேலணை வீரே.
மேலா நிலத்தெழு விந்துவும் நாதமும்கோலால் நடத்திக் குறிவழி யேசென்றுபாலாம் அமிர்துண்டு பற்றறப் பற்றினால்மாலா னதுமான மாளும் அவ்விந்துவே.
விந்து விளைவும் விளைவின் பயன்முற்றும்அந்த அழிவும் அடக்கத்தில் ஆக்கமும்நந்திய நாசமும் நாதத்தால் பேதமும்தந்துணர் வோர்க்குச் சயமாகும் விந்துவே.
விந்துஎன் வீசத்தை மேவிய மூலத்துநந்திய அங்கிய னாலே நயந்தெரிந்துஅந்தமில் பானுஅதிகண்ட மேலேற்றிச்சந்திரன் சார்புறத் தண்ணமு தாமே.
அமுதச் சசிவிந்து வாம்விந்து மாளஅமுதப் புனலோடி அங்கியின் மானஅமுதச் சிவயோகம் ஆதலால் சித்திஅமுதப் பலாவனம் ஆங்குறும் யோகிக்கே.
யோகம் அவ் விந்து ஒழியா வகையுணர்ந்துஆகம்இரண்டும் கலந்தாலும் ஆங்குறாப்போகம் சிவபோகம் போகிநற் போகமாமோகங் கெடமுயங் கார்மூடர் மாதர்க்கே.
மாதர் இடத்தே செலுத்தினும் அவ்விந்துகாதலி னால்விடார் யோகம் கலந்தவர்மாதர் உயிராசை கைக்கொண்ட வாடுவர்காதலர் போன்றங்ஙன் காதலாம் சாற்றிலே.
சாற்றிய விந்து சயமாகும் சத்தியால்ஏற்றிய மூலத் தழலை எழமூட்டிநாற்றிசை ஓடா நடுநாடி நாதத்தோடுஆற்றி அமுதம்அருந்தவித் தாமே.
விந்துவும் நாதமும் மேலக் கனல்மூலவந்த அனல் மயிர்க் கால்தோறும் மன்னிடச்சிந்தனை மாறச் சிவம்அக மாகவேவிந்துவும் மாளும்மெய்க் காயத்தில் வித்திலே.
வித்துக்குற் றுண்பான் விளைவுஅறி யாதவன்வித்துக்குற் றுண்ணாமல் வித்துச் சுட்டு உண்பான்வித்துகுற் றுண்பானில் வேறலன் ஈற்றவன்வித்துக்குற் றுண்ணாமல் வித்துவித்தான் அன்றே.
அன்னத்தில் விந்து அடங்கும் படிகண்டுமன்னப் பிராணனாம் விந்து மறித்திட்டுமின்னொத்த விந்துநா தாந்தத்து விட்டிடவன்னத் திருவிந்து மாயும் கா யத்திலே.
அன்னம் பிராணன்என் றார்க்கும் இருவிந்துதன்னை அறிந்துண்டு சாதிக்க வல்லார்க்குச்சொன்ன மாம்உருத் தோன்றும்எண் சித்தியாம்அன்னவர் எல்லாம் அழிவற நின்றதே.
நின்ற சிகாரம் நினைக்கும் பிராணனாய்ஒன்றும் மகாரம் ஒருமூன்றோடு ஒன்றவைசென்று பராசக்தி விந்து சயந்தன்னைஒன்ற உரைக்க உபதேசம் தானே.
தானே உபதேசம் தானல்லாது ஒன்றில்லைவானே உயர்விந்து வந்த பதினான்குமானேர் அடங்க அதன்பின்பு புத்தியும்தானே சிவகதி தன்மையும் ஆமே.
விந்துவும் நாதமும் விளைய விளைந்ததுவந்தஇப் பல்லுயிர் மன்னுயி ருக்கெலாம்அந்தமும் ஆதியும் ஆம்மந் திரங்களும்விந்து அடங்க விளையும் சிவோகமே.
வறுக்கின்ற வாறும் மனத்துலா வெற்றிநிறுக்கின்ற வாறும் அந் நீள்வரை ஒட்டிப்பொறிக்கின்ற வாறும்அப் பொல்லா வினையைஅறுக்கின்ற வாறும்அப் பொல்லா வினையை
விந்துவும் நாதமும் மேவியுடன் கூடிப்சந்திர னோடே தலைப்படு மாயிடில்சுந்தர வானத்து அமுதம்வந்து ஊறிடும்அங்குஉதி மந்திரம் ஆகுதி யாகுமே.
மனத்தொடு சத்து மனஞ்செவி யென்னஇனத்தெழு வார்கள் இசைந்தன நாடிமனத்தில் எழுகின்ற வாக்கு வசனம்கனத்த இரதம் அக் காமத்தை நாடிலே.
சத்தமும் சத்த மனமும் மனக்கருத்துஒத்துஅறி கின்ற இடமும் அறிகிலர்மெய்த்து அறிகின்ற இடம்அறி வாளர்க்குஅத்தன் இருப்பிடம் அவ்விடம் தானே.
உரம்அடி மேதினி உந்தியில் அப்பாம்விரவிய தன்முலை மேவிய கீழ்அங்கிகருமலை மீமிசை கைக்கீழிற் காலாம்விரவிய சுந்தரம் மேல்வெளி யாமே.
செஞ்சுட ரோன்முத லாகிய தேவர்கள்மஞ்சுடை மேரு வலம்வரு காரணம்எஞ்சுடர் ஈசன் இறைவன் இணையடிதஞ்சுட ராக வணங்கும் தவமே.
பகலவன் மாலவன் பல்லுயிர்க்கு எல்லாம்புகலவ னாய்நின்ற புண்ணிய நாதன்இகலற ஏழுல கும்உற வோங்கும்பகலவன் பல்லுயிர்க்கு ஆதியும் ஆமே.
ஆதித்தன் அன்பினோடு ஆயிர நாமமும்சோதியின் உள்ளே சுடரொளி யாய்நிற்கும்வேதியர் வேண்டினும் விண்ணவர் சொல்லினும்ஆதியில் அன்பு பழுக்கின்ற வாறே.
தானே உலகுக்குத் தத்துவனாய் நிற்கும்தானே உலகுக்குத் தையலு மாய்நிற்கும்தானே உலகுக்குச் சம்புவு மாய்நிற்கும்தானே உலகுக்குத் தண்சுட ராகுமே.
வவையமுக் கோணம் வட்டம் அறுகோணம்துலையிரு வட்டம் துய்ய விதம்எட்டில்அலையுற்ற வட்டத்தில் ஈர்எட்டு இதழாம்மலைவுற்று உதித்தனன் ஆதித்தன் ஆமே.
ஆதித்தன் உள்ளி லானமுக் கோணத்தில்சோதித்து இலங்கும்நற் சூரியன் நாலாம்கேத முறுங்கேணி சூரியன் எட்டில்சோதிதன் நீட்டில் சோடசம் தானே.
ஆதித்த னோடே அவனி இருண்டதுபேதித்த நாலும் பிதற்றிக் கழிந்ததுசோதிக்குள் நின்று துடியிடை செய்கின்றவேதப் பொருளை விளங்குகி லீரே.
பாருக்குக் கீழே பகலோன் வரும்வழியாருக்கும் காணஒண் ணாத அரும்பொருள்நீருக்கும் தீக்கும் நடுவே உதிப்பவன்ஆருக்கும் எட்டாத ஆதித்தன் தானே.
மண்ணை இடந்துஅதின் கீழொடும்விண்ணை இடந்து வெளிசெய்து நின்றிடும்கண்ணை இடந்து களிதந்த ஆனந்தம்எண்ணும் கிழமைக்கு இசைந்து நின்றானே.
பாரை இடந்து பகலோன் வரும்வழியாரும் அறியார் அருங்கடை நூலவர்தீரன் இருந்த திருமலை சூழ்என்பர்ஊரை உணர்ந்தார் உணர்ந்திருந் தாரே.
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும்கன்றாய நந்திக் கருத்துள் இருந்தனன்கொன்று மலங்கன் குழல்வழி ஓடிடவென்று விளங்கும் விரிசுடர் காணுமே.
ஆதித்தன் ஓடி அடங்கும் இடங்கண்டுசாதிக்க வல்லவர் தம்மை யுணர்ந்தவர்பேதித்து உலகம் பிதற்றும் பிதற்றெல்லாம் ஆதித்தனோடே அடங்குகின் றாரே.
உருவிப் புறப்பட்டு உலகை வலம்வந்துசொருகிக் கிடக்கும் துறையறி வார்இல்லைசொருகிக் கிடக்கும் துறையறி வாளர்க்குஉருகிக் கிடக்கும்என் உள்ளன்பு தானே.
எறிகதிர் ஞாயிறு மின்பனி சோரும்எறிகதிர் சோமன் எதிர்நின்று எறிப்பவிரிகதிர் உள்ளே இயங்கும் என் ஆவிஒருகதிர் ஆகில் உலாஅது ஆமே.
சந்திரன் சூரியன் தான்வரின் பூசனைமுந்திய பானுவில் இந்துவந்து ஏய்முறைஅந்த இரண்டும் உபய நிலத்தில்சிந்தை தெளிந்தார் சிவமாயி னரே.
ஆகும் கலையோடு அருக்கன் அனல்மதிஆகும் கலையிடை நான்குஎன லாம்என்பர்ஆகும் அருக்கன் அனல்மதி யோடுஒன்றஆகும்அப் பூரணை யாம்என்று அறியுமே.
ஈர் அண்டத்து அப்பால் இயங்கிய அவ்வொளிஓர் அண்டத் தார்க்கும் உணரா உணர்வதுபேர்அண்டத்து ஊடே பிறங்கொளி யாய்நின்றுஆர் அண்டத் தக்கார் அறியத்தக் காரே.
ஒன்பதின் மேவி உலகம் வலம்வரும்ஒன்பதும் ஈசன் இயல்அறி வார்இல்லைமுன்புஅதின் மேவி முதல்வன் அருளிலார்இன்பம் இலார்இருள் சூழநின் றாரே.
மூலப்பாடல் மட்டும் · original verses only



