திருமூலர் அருளிய திருமந்திரம்
ஆகமச் சிறப்பு

பாயிரம் பாடல் 57–66 (10 பாடல்கள்)

அஞ்சன மேனி அரிவைஓர் பாகத்தன்அஞ்சொ டிருபத்து மூன்றுள ஆகமம்அஞ்சலி கூப்பி அறுபத் தறுவரும்அஞ்சா முகத்தில் அரும்பொருள் கேட்டதே.

அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்எண்ணில் இருபத்தெண் கோடிநூ றாயிரம்விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்எண்ணிநின் றன்பொருள் ஏத்துவன் யானே.

பண்டித ராவார் பதினெட்டுப் பாடையும்கண்டவர் கூறும் கருத்தறிவார் என்கபண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும்அண்ட முதலான் அரன்சொன்ன வாறே.

அண்ணல் அருளால் அருளும்திவ் யாகமம்விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரிதுஎண்ணில் எழுபது கோடிநூ றாயிரம்எண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே.

பரனாய்ப் பராபரம் காட்டி உலகின்தரனாய்ச் சிவதன்மம் தானேசொல் காலத்துஅரனாய் அமரர்கள் அர்ச்சிக்கும் நந்திஉரனாய் ஆகமம் ஓங்கிநின் றானே.

சிவமாம் பரத்தினில் சத்தி சதாசிவம்உவமா மகேசர் உருத்திர தேவர்தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்றநவஆ கமம்எங்கள் நந்திபெற் றானே.

பெற்றநல் ஆகமம் காரணம் காமிகம்உற்றநல் வீரம் உயர்சித்தம் வாதுளம்மற்றவ் வியாமள மாகுங்கா லோத்தரம்துற்றநற் சுப்பிரம் சொல்லும் மகுடமே.

அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்எண்ணிலி கோடி தொகுத்திடு மாயினும்அண்ணல் அறைந்த அறிவறி யாவிடின்என்ணிலி கோடியும் நீர்மேல் எழுத்தே.

மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்றுஏரியும் நின்றங் கிளைக்கின்ற காலத்துஆரிய மும்தமி ழும்உட னேசொல்லிக்காரிகை யார்க்குக் கருணைசெய் தானே.

அவிழ்க்கின்ற வாறும் அதுகட்டு மாறும்சிமிழ்த்தலைப் பட்டுயிர் போகின்ற வாறும்தமிழ்ச்சொல் வடசொல் எனும்இவ் விரண்டும்உணர்த்தும் அவனை உணரலு மாமே.

திருமந்திரம் பாடல் #57

1 / 10

0:000:00
ஆகமச் சிறப்புபாடல் 57

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout