
கொம்மிய டிப்பெண்கள் கொம்மி யடி - இரு
கொங்கைகு லுங்கவே கொம்மி யடி.
நம்மை யாளும்பொன் னம்பல வாணனை
நாடிக் கொம்மிய டியுங்க டி - பதம்
பாடிக் கொம்மிய டியுங்க டி. - கொம்மி
காம மகற்றிய தூய னடி - சிவ
காம சவுந்தரி நேய னடி
மாமறை யோதுசெவ் வாய னடி - மணி
மன்றெனு ஞானவா காய னடி. - கொம்மி
ஆனந்தத் தாண்டவ ராஜ னடி - நமை
ஆட்கொண் டருளிய தேஜ னடி
வானந்த மாமலை மங்கை மகிழ் - வடி
வாளன டிமண வாள னடி. - கொம்மி
கல்லைக் கனிவிக்குஞ் சுத்த னடி - முடி
கங்கைக் கருளிய கர்த்த னடி
தில்லைச்சி தம்பர சித்த னடி - தேவ
சிங்கம டியுயர் தங்க மடி. - கொம்மி
பெண்ணொரு பால்வைத்த மத்த னடி - சிறு
பிள்ளைக் கறிகொண்ட பித்த னடி
நண்ணி நமக்கரு ளத்த னடி - மிக
நல்லன டியெல்லாம் வல்ல னடி.. - கொம்மி
அம்பலத் தாடல்செய் ஐய னடி - அன்பர்
அன்புக் கெளிதரு மெய்ய னடி
தும்பை முடிக்கணி தூய னடி - சுயஞ்
சோதிய டிபரஞ் சோதி யடி. - கொம்மி
கொம்மிய டிப்பெண்கள் கொம்மி யடி - இரு
கொங்கைகு லுங்கவே கொம்மி யடி.



