திருவருட்பா  104. வெண்ணிலா

தன்னையறிந்  தின்பமுற  வெண்ணிலா  வே  -  ஒரு 
தந்திரநீ  சொல்லவேண்டும்  வெண்ணிலா  வே. 
1
நாதமுடி  மேலிருந்த  வெண்ணிலா  வே  -  அங்கே 
நானும்வர  வேண்டுகின்றேன்  வெண்ணிலா  வே. 
2
சச்சிதானந்  தக்கடலில்  வெண்ணிலா  வே  -  நானுந் 
தாழ்ந்துவிழ  வேண்டுகின்றேன்  வெண்ணிலா  வே. 
3
இராப்பகலில்  லாவிடத்தே  வெண்ணிலா  வே  -  நானும் 
இருக்கவெண்ணி  வாடுகின்றேன்  வெண்ணிலா  வே. 
4
தேசுநிற  மாய்நிறைந்த  வெண்ணிலா  வே  -  நானுஞ் 
சிவமயம  தாய்விழைந்தேன்  வெண்ணிலா  வே. 
5
போதநடு  வூடிருந்த  வெண்ணிலா  வே  -  மலப் 
போதமற  வேண்டுகின்றேன்  வெண்ணிலா  வே. 
6
ஆருமறி  யாமலிங்கே  வெண்ணிலா  வே  -  அரு 
ளாளர்வரு  வாரோசொல்லாய்  வெண்ணிலா  வே. 
7
அந்தரங்க  சேவைசெய்ய  வெண்ணிலா  வே  -  யெங்கள் 
ஐயர்வரு  வாரோசொல்லாய்  வெண்ணிலா  வே. 
8
வேதமுடி  மேலிருந்த  வெண்ணிலா  வே  -  மல 
வேதையுள  வேதுசொல்லாய்  வெண்ணிலா  வே. 
9
குண்டலிப்பால்  நின்றிலங்கும்  வெண்ணிலா  வே  -  அந்தக் 
குண்டலிப்பால்  வேண்டுகின்றேன்  வெண்ணிலா  வே. 
10
ஆதியந்த  மென்றுரைத்தார்  வெண்ணிலா  வே  -  அந்த 
ஆதியந்த  மாவதென்ன  வெண்ணிலா  வே. 
11
வித்திலாம  லேவிளைந்த  வெண்ணிலா  வே  -  நீதான் 
விளைந்தவண்ண  மேதுசொல்லாய்  வெண்ணிலா  வே. 
12
முப்பொருளு  மொன்றதென்பார்  வெண்ணிலா  வே  -  அந்த 
மூன்றுமொன்றாய்  முடிந்ததென்ன  வெண்ணிலா  வே. 
13
நானதுவாய்  நிற்கும்வண்ணம்  வெண்ணிலா  வே  -  ஒரு 
ஞானநெறி  சொல்லுகண்டாய்  வெண்ணிலா  வே. 
14
ஞானமய  மாய்விளங்கும்  வெண்ணிலா  வே  -  என்னை 
நானறியச்  சொல்லுகண்டாய்  வெண்ணிலா  வே. 
15
வாசிவாசி  யென்றுரைத்தார்  வெண்ணிலா  வே  -  அந்த 
வாசியென்ன  பேசுகண்டாய்  வெண்ணிலா  வே. 
16
ஐந்தலைப்பாம்  பாட்டுகின்றார்  வெண்ணிலா  வே  -  அவர் 
அம்பலத்தில்  நின்றதென்ன  வெண்ணிலா  வே. 
17
ஓரெழுத்தி  லைந்துண்டென்பார்  வெண்ணிலா  வே  -  அது 
ஊமையெழுத்  தாவதென்ன  வெண்ணிலா  வே. 
18
அம்பலத்தில்  ஆடுகின்றார்  வெண்ணிலா  வே  -  அவர் 
ஆடுகின்ற  வண்ணமென்ன  வெண்ணிலா  வே. 
19
அந்தரத்தில்  ஆடுகின்றார்  வெண்ணிலா  வே  -  அவர் 
ஆடும்வகை  எப்படியோ  வெண்ணிலா  வே. 
20
அணுவிலணு  வாயிருந்தார்  வெண்ணிலா  வே  -  எங்கும் 
ஆகிநின்ற  வண்ணமென்ன  வெண்ணிலா  வே. 
21
அண்டபகி  ரண்டமெல்லாம்  வெண்ணிலா  வே  -  ஐயர் 
ஆட்டமென்று  சொல்வதென்ன  வெண்ணிலா  வே. 
22
அம்பரத்தி  லாடுகின்றார்  வெண்ணிலா  வே  -  என்னை 
ஆட்டுகின்றார்  இம்பரத்தே  வெண்ணிலா  வே. 
23

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com