
தண்மதி யொண்முகப் பெண்மணி யே - உன்னைத்
தான்கொண்ட நாயக ராரே டி
அண்மையிற் பொன்னணி யம்பலத் தாடல்செய்
ஐய ரமுத ரழக ரடி.
செங்கயற் கண்மட மங்கைநல் லாய் - உன்றன்
செங்கை பிடித்தவ ராரே டி
அங்கய லாரன்று பொன்னம்ப லத்தெங்கள்
ஆனந்தத் தாண்டவ ராஜ னடி.
கன்னற் சுவைமொழி மின்னிடை யாய் - உன்னைக்
கன்னி யழித்தவ ராரே டி
உன்னற் கரியபொன் னம்பலத் தாடல்செய்
உத்தம ரானந்த சித்த ரடி.
தீமையி லாதபெண் மாமயி லே - உன்னைச்
சேர்ந்து கலந்தவ ராரே டி
தாமமு டிக்கணிந் தம்பலத் தேயின்பத்
தாண்டவஞ் செய்யுஞ் சதுர ரடி.
அன்னந டைப்பெண்க ளாரமு தே - உன்னை
அன்பிற் புணர்ந்தவ ராரே டி
துன்ன லுடையின ரம்பலத் தேநின்ற
தூய திருநட ராய ரடி.
காரள கப்பெண் சிகாமணி யே - உன்றன்
கற்பை யழித்தவ ராரே டி
பேரள வைக்கடந் தம்பலத் தேநின்ற
பித்தர் பரானந்த நித்த ரடி.



