
திருவருட்பா · 147அனுபவ மாலை
அம்பலத்தே திருநடஞ்செய் அடிமலர்என் முடிமேல்
அணிந்துகொண்டேன் அன்பொடும்என் ஆருயிர்க்கும் அணிந்தேன்
எம்பரத்தே மணக்கும்அந்த மலர்மணத்தைத் தோழி
என்உரைப்பேன் உரைக்கஎன்றால் என்னளவன் றதுவே
வம்பிசைத்தேன் அன்றடிநீ என்அருகே இருந்துன்
மணிநாசி அடைப்பதனைத் திறந்துமுகந் தறிகாண்
நம்புறுபார் முதல்நாத வரையுளநாட் டவரும்
நன்குமுகந் தனர்வியந்தார் நன்மணம்ஈ தெனவே.
கண்உறங்கேன் உறங்கினும்என் கணவரொடு கலக்கும்
கனவேகண் டுளமகிழ்வேன் கனவொன்றோ நனவும்
எண்அடங்காப் பெருஞ்ஜோதி என்இறைவர் எனையே
இணைந்திரவு பகல்காணா தின்புறச்செய் கின்றார்
மண்உறங்கும் மலைஉறங்கும் வளைகடலும் உறங்கும்
மற்றுளஎல் லாம்உறங்கும் மாநிலத்தே நமது
பெண்உறங்காள் எனத்தாயர் பேசிமகிழ் கின்றார்
பெண்கள்எலாம் கூசுகின்றார் பெருந்தவஞ்செய் கிலரே.
எல்லாஞ்செய் வல்லதுரை என்னைமணம் புரிந்தார்
எவ்வுலகில் யார்எனக்கிங் கீடுரைநீ தோழீ
நல்லாய்மீக் கோளுடையார் இந்திரர்மா முனிவர்
நான்முகர்நா ரணர்எல்லாம் வான்முகராய் நின்றே
பல்லாரில் இவள்புரிந்த பெருந்தவத்தை நம்மால்
பகர்வரிதென் கின்றார்சிற் பதியில்நடம் புரியும்
வல்லானை மணந்திடவும் பெற்றனள்இங் கிவளே
வல்லாள்என் றுரைக்கின்றார் நல்லார்கள் பலரே.
இச்சைஎலாம் வல்லதுரை என்னைமணம் புரிந்தார்
யான்செய்தவம் யார்செய்தார் இதுகேள்என் தோழி
எச்சமயத் தேவரையும் சிற்றுரும்பென் றேனும்
எண்ணுவனோ புண்ணியரை எண்ணுமனத் தாலே
பிச்சிஎன நினைத்தாலும் நினையடிநீ அவரைப்
பிரிவேனோ பிரிவென்று பேசுகினும் தரியேன்
விச்சைநடம் கண்டேன்நான் நடங்கண்டால் பேயும்
விடத்துணியா தென்பர்கள்என் விளைவுரைப்ப தென்னே.
வஞ்சமிலாத் தலைவருக்கே மாலைமகிழ்ந் தணிந்தேன்
மறைகளுடன் ஆகமங்கள் வகுத்துவகுத் துரைக்கும்
எஞ்சலுறா வாழ்வனைத்தும் என்னுடைய வாழ்வே
எற்றோநான் புரிந்ததவம் சற்றேநீ உரையாய்
அஞ்சுமுகம் காட்டியஎன் தாயர்எலாம் எனக்கே
ஆறுமுகம் காட்டிமிக வீறுபடைக் கின்றார்
பஞ்சடிப்பா வையர்எல்லாம் விஞ்சடிப்பால் இருந்தே
பரவுகின்றார் தோழிஎன்றன் உறவுமிக விழைந்தே.
அன்னம்உண அழைக்கின்றாய் தோழிஇங்கே நான்தான்
அம்பலத்தே ஆடுகின்ற அண்ணல்அடி மலர்த்தேன்
உன்னைநினைத் துண்டேன்என் உள்ளகத்தே வாழும்
ஒருதலைமைப் பெருந்தலைவ ருடையஅருட் புகழாம்
இன்னமுதில் என்னுடைஅன் பென்னும்நறுங் கனியின்
இரதமும்என் தனிக்கணவர் உருக்காட்சி எனும்ஓர்
கன்னல்உளே தனித்தெடுத்த தேம்பாகும் கலந்தே
களித்துண்டேன் பசிசிறிதும் கண்டிலன்உள் ளகத்தே.
பொதுநடஞ்செய் துரைமுகத்தே தளதளஎன் றொளிரும்
புன்னகையே ஒருகோடிப் பொன்பெறும்என் றுரைப்பார்
இதுவரையோ பலகோடி என்னினும்ஓர் அளவோ
எண்இறந்த அண்டவகை எத்தனைகோ டிகளும்
சதுமறைசொல் அண்டவகை தனித்தனியே நடத்தும்
சத்தர்களும் சத்திகளும் சற்றேனும் பெறுமோ
துதிபெறும்அத் திருவாளர் புன்னகையை நினைக்குந்
தோறும்மனம் ஊறுகின்ற சுகஅமுதம் பெறுமே.
கண்கலந்த கணவர்எனைக் கைகலந்த தருணம்
கண்டறியேன் என்னையும்என் கரணங்கள் தனையும்
எண்கலந்த போகம்எலாம் சிவபோகம் தனில்ஓர்
இறைஅளவென் றுரைக்கின்ற மறைஅளவின் றறிந்தேன்
விண்கலந்த திருவாளர் உயிர்கலந்த தருணம்
வினைத்துயர்தீர்ந் தடைந்தசுகம் நினைத்திடுந்தோ றெல்லாம்
உண்கலந்த ஆனந்தப் பெரும்போகம் அப்போ
துற்றதென எனைவிழுங்கக் கற்றதுகாண் தோழி.
மாடமிசை ஓங்குநிலா மண்டபத்தே எனது
மணவாளர் கொடுத்ததிரு அருளமுதம் மகிழ்ந்தே
ஏடவிழ்பூங் குழலாய்நான் உண்டதொரு தருணம்
என்னைஅறிந் திலன்உலகம் தன்னையும்நான் அறியேன்
தேடறிய நறும்பாலும் தேம்பாகும் நெய்யும்
தேனும்ஒக்கக் கலந்ததெனச் செப்பினும்சா லாதே
ஈடறியாச் சுவைபுகல என்னாலே முடியா
தென்னடியோ அவ்வமுதம் பொன்னடிதான் நிகரே.
கற்பூரம் மணக்கின்ற தென்னுடம்பு முழுதும்
கணவர்திரு மேனியிலே கலந்தமணம் அதுதான்
இற்பூத மணம்போலே மறைவதன்று கண்டாய்
இயற்கைமணம் துரியநிறை இறைவடிவத் துளதே
பொற்பூவும் நறுமணமும் கண்டறியார் உலகர்
புண்ணியனார் திருவடிவில் நண்ணியவா றதுவே
நற்பூதி அணிந்ததிரு வடிவுமுற்றும் தோழி
நான்கண்டேன் நான்புணர்ந்தேன் நான்அதுஆ னேனே.
மன்னுதிருச் சபைநடுவே வயங்குநடம் புரியும்
மணவாளர் திருமேனி வண்ணங்கண் டுவந்தேன்
என்னடிஇத் திருமேனி இருந்தவண்ணம் தோழி
என்புகல்வேன் மதிஇரவி இலங்கும்அங்கி உடனே
மின்னும்ஒன்றாய்க் கூடியவை எண்கடந்த கோடி
விளங்கும்வண்ணம் என்றுரைக்கோ உரைக்கினும்சா லாதே
அன்னவண்ணம் மறைமுடிவும் அறைவரிதே அந்த
அரும்பெருஞ்சோ தியின்வண்ணம் யார்உரைப்பர் அந்தோ.
கள்ளுண்டாள் எனப்புகன்றார் கனகசபை நடுவே
கண்டதுண்டு சிற்சபையில் உண்டதும்உண் டடிநான்
எள்ளுண்ட பலவிடயத் திறங்குங்கள் அன்றே
என்றும்இற வாநிலையில் இருத்துங்கள் உலகர்
உள்ளுண்ட போதுமயக் குற்றிடுங்கள் அலவே
உள்ளமயக் கனைத்தினையும் ஒழித்திடுங்கள் மடவாய்
அள்ளுண்ட பிறரும்எனை அடுத்தடுத்துக் கண்டால்
அறிவுதரும் அவர்க்கும்இங்கே யான்உண்ட கள்ளே.
காரிகைநீ என்னுடனே காணவரு வாயோ
கனகசபை நடுநின்ற கணவர்வடி வழகை
ஏரிகவாத் திருவடிவை எண்ணமுடி யாதேல்
இயம்பமுடிந் திடுமோநாம் எழுதமுடிந் திடுமோ
பேரிகவா மறைகளுடன் ஆகமங்கள் எல்லாம்
பின்னதுமுன் முன்னதுபின் பின்முன்னா மயங்கிப்
பாரிகவா தின்றளவும் மிகஎழுதி எழுதிப்
பார்க்கின்ற முடிவொன்றும் பார்த்தநிலை அம்மா.
கண்ணாறு படும்எனநான் அஞ்சுகின்றேன் பலகால்
கணவர்திரு வடிவழகைக் கண்டுகண்டு களிக்கில்
எண்ணாஎன் ஆசைவெள்ளம் என்சொல்வழி கேளா
தெனைஈர்த்துக் கொண்டுசபைக் கேகுகின்ற தந்தோ
பெண்ணாசை பெரிதென்பர் விண்ணாளும் அவர்க்கும்
பெண்ணாசை பெரிதலகாண் ஆணாசை பெரிதே
உண்ணாடிப் பற்பலகால் கண்ணாறு கழிக்கல்
உறுகின்றேன் தோழிநின்னால் பெறுகின்ற படியே.
கற்பூரம் கொணர்ந்திடுக தனித்தோழி எனது
கணவர்வரு தருணம்இது கண்ணாறு கழிப்பாம்
எற்பூத நிலைஅவர்தம் திருவடித்தா மரைக்கீழ்
இருப்பதடி கீழிருப்ப தென்றுநினை யேல்காண்
பற்பூத நிலைகடந்து நாதநிலைக் கப்பால்
பரநாத நிலைஅதன்மேல் விளங்குகின்ற தறிநீ
இற்பூவை அவ்வடிக்குக் கண்ணாறு கழித்தால்
எவ்வுலகத் தெவ்வுயிர்க்கும் இனிதுநலந் தருமே.
மனைஅணைந்து மலர்அணைமேல் எனைஅணைந்த போது
மணவாளர் வடிவென்றும் எனதுவடி வென்றும்
தனைநினைந்து பிரித்தறிந்த தில்லையடி எனைத்தான்
சற்றுமறி யேன்எனில்யான் மற்றறிவ தென்னே
தினைஅளவா யினும்விகற்ப உணர்ச்சிஎன்ப திலையே
திருவாளர் கலந்தபடி செப்புவதெப் படியோ
உனைஅணைந்தால் இவ்வாறு நான்கேட்பேன் அப்போ
துன்னறிவும் என்னறிவும் ஓரறிவாம் காணே.
தாழ்குழலாய் எனைச்சற்றே தனிக்கவிட்டால் ஞான
சபைத்தலைவர் வருகின்ற தருணம்இது நான்தான்
வாழ்வடைபொன் மண்டபத்தே பளிக்கறையி னூடே
மலரணையை அலங்கரித்து வைத்திடுதல் வேண்டும்
சூழுறநான் அலங்கரிப்பேன் என்கின்றாய் தோழி
துரைக்குமனம் இல்லைஅது துணிந்தறிந்தேன் பலகால்
ஏழ்கடலில் பெரிதன்றோ நான்அடைந்த சுகம்இங்
கிதைவிடநான் செய்பணிவே றெப்பணிநீ இயம்பே.
தனித்தலைவர் வருகின்ற தருணம்இது தோழி
தனிக்கஎனை விடுநீயும் தனித்தொருபால் இருத்தி
இனித்தசுவைத் திரள்கலந்த திருவார்த்தை நீயும்
இன்புறக்கேட் டுளங்களிப்பாய் இதுசாலும் நினக்கே
மனித்தர்களோ வானவரோ மலர்அயனோ மாலோ
மற்றையரோ என்புகல்வேன் மகேசுரர்ஆ தியரும்
தனித்தஒரு திருவார்த்தை கேட்பதற்கே கோடித்
தவஞ்செய்து நிற்கின்றார் நவஞ்செய்த நிலத்தே.
மணவாளர் வருகின்ற தருணம்இது மடவாய்
மாளிகையின் வாயல்எலாம் வளம்பெறநீ புனைக
குணவாளர் அணையும்மலர் அணைஅகத்தை நானே
குலவுமணி விளக்கத்தால் அலங்கரிக்கப் புகுவேன்
தணவாத சுகந்தரும்என் தனிக்கணவர் வரிலோ
சற்றுமயல் வாதனைகள் உற்றிடுதல் ஆகா
அனவாத மனத்தவரைப் புறப்பணிக்கே விடுக
அன்புடையார் களுக்கிடுக அகப்பணிசெய் திடவே.
அரும்பொன்அனை யார்எனது கணவர்வரு தருணம்
ஆயிழைஈ தாதலினால் வாயல்முகப் பெல்லாம்
விரும்புறுதோ ரணம்கொடிகள் பழுத்தகுலை வாழை
விரைக்கமுகு தெங்கிளநீர் எனைப்பலவும் புனைக
கரும்புநெல்லின் முளைநிறைநீர்க் குடம்இணைந்த கயலும்
கண்ணாடி கவரிமுதல் உண்ணாடி இடுக
இரும்பொடுகல் ஒத்தமனங் களும்கனிய உருக்கும்
இறைவர்திரு வரவெதிர்கொண் டேத்துவதற் கினிதே.
பதிவரும்ஓர் தருணம்இது தருணம்இது தோழீ
பராக்கடையேல் மணிமாடப் பக்கமெலாம் புனைக
அதிகநலம் பெறுபளிக்கு மணிமேடை நடுவே
அணையைஅலங் கரித்திடநான் புகுகின்றேன் விரைந்தே
கதிதருவார் நல்வரவு சத்தியம்சத் தியம்நீ
களிப்பினொடு மணிவிளக்கால் கதிர்பரவ நிரைத்தே
புதியநவ மணிகுயின்ற ஆசனங்கள் இடுக
புண்ணியனார் நல்வரவை எண்ணிஎண்ணி இனிதே.
மன்றாடும் கணவர்திரு வரவைநினைக் கின்றேன்
மகிழ்ந்துநினைத் திடுந்தோறும் மனங்கனிவுற் றுருகி
நன்றாவின் பால்திரளின் நறுநெய்யும் தேனும்
நற்கருப்பஞ் சாறெடுத்த சர்க்கரையும் கூட்டி
இன்றார உண்டதென இனித்தினித்துப் பொங்கி
எழுந்தெனையும் விழுங்குகின்ற தென்றால்என் தோழி
இன்றாவி அன்னவரைக் கண்டுகொளும் தருணம்
என்சரிதம் எப்படியோ என்புகல்வேன் அந்தோ.
கூடியஎன் தனிக்கணவர் நல்வரத்தை நானே
குறிக்கின்ற தோறும்ஒளி எறிக்கின்ற மனந்தான்
நீடியபொன் மலைமுடிமேல் வாழ்வடைந்த தேவர்
நீள்முடிமேல் இருக்கின்ற தென்றுரைக்கோ அன்றி
ஆடியபொற் சபைநடுவே சிற்சபையின் நடுவே
ஆடுகின்ற அடிநிழற்கீழ் இருக்கின்ற தென்கோ
ஏடவிழ்பூங் குழலாய்என் இறைவரைக்கண் ணுற்றால்
என்மனத்தின் சரிதம்அதை யார்புகல்வார் அந்தோ.
அருளாளர் வருகின்ற தருணம்இது தோழி
ஆயிரம்ஆ யிரங்கோடி அணிவிளக்கேற் றிடுக
தெருளாய பசுநெய்யே விடுகமற்றை நெய்யேல்
திருமேனிக் கொருமாசு செய்தாலும் செய்யும்
இருள்ஏது காலைவிளக் கேற்றிடவேண் டுவதோ
என்னாதே மங்கலமா ஏற்றுதலாங் கண்டாய்
மருளேல்அங் கவர்மேனி விளக்கமதெண் கடந்த
மதிகதிர்செங் கனல்கூடிற் றென்னினும்சா லாதே.
என்னிருகண் மணிஅனையார் என்னுயிர்நா யகனார்
என்உயிருக் கமுதானார் எல்லாஞ்செய் வல்லார்
பொன்அணிபொற் சபையாளர் சிற்சபையார் என்னைப்
புறம்புணர்ந்தார் அகம்புணர்ந்தார் புறத்தகத்தும் புணர்ந்தார்
அன்னியர்அல் லடிஅவரே எனதுகுல தெய்வம்
அருந்தவத்தால் கிடைத்தகுரு வாகும்அது மட்டோ
மன்னுறும்என் தனித்தாயும் தந்தையும்அங் கவரே
மக்கள்பொருள் மிக்கதிரு ஒக்கலும்அங் கவரே.
தந்தைஎன்றாய் மகன்என்றாய் மணவாளன் என்றாய்
தகுமோஇங் கிதுஎன்ன வினவுதியோ மடவாய்
சிந்தைசெய்து காணடிநீ சிற்சபையில் நடிக்கும்
திருவாளர் எனைப்புணர்ந்த திருக்கணவர் அவர்தம்
அந்தநடு முதலில்லா அரும்பெருஞ்சோ தியதே
அண்டசரா சரங்கள்எலாம் கண்டதுவே றிலையே
எந்தவகை பொய்புகல்வேன் மற்றையர்போல் அம்மா
வீறுமவர் திருமேனி நானும்என அறியே.
எல்லாமுஞ் செயவல்ல தனித்தலைவர் பொதுவில்
இருந்துநடம் புரிகின்ற அரும்பெருஞ்சோ தியினார்
நல்லாய்நல் நாட்டார்கள் எல்லாரும் அறிய
நண்ணிஎனை மணம்புரிந்தார் புண்ணியனார் அதனால்
இல்லாமை எனக்கில்லை எல்லார்க்கும் தருவேன்
என்னுடைய பெருஞ்செல்வம் என்புகல்வேன் அம்மா
செல்லாத அண்டமட்டோ அப்புறத்தப் பாலும்
சிவஞானப் பெருஞ்செல்வம் சிறப்பதுகண் டறியே.
வான்கண்ட பிரமர்களும் நாரணரும் பிறரும்
மாதவம்பன் னாட்புரிந்து வருந்துகின்றார் அந்தோ
நான்கண்ட காட்சியவர் கண்டிலரே உலகில்
நான்ஒருபெண் செய்ததவம் எத்தவமோ அறியேன்
கோன்கண்ட குடிக்கொன்றும் குறைவிலையேல் அண்ட
கோடிஎலாம் தனிப்பெருஞ்செங் கோல்நடத்தும் இறைவர்
தான்கண்ட குடியானேன் குறைகளெலாம் தவிர்ந்தேன்
தனித்தவள மாடமிசை இனித்திருக் கின்றேனே.
என்கணவர் பெருந்தன்மை ஆறந்த நிலைக்கே
எட்டிநின்று பார்ப்பவர்க்கும் எட்டாதே தோழி
பொன்கணவர் கலைமடந்தை தன்கணவர் முதலோர்
புனைந்துரைக்கும் கதைபோல நினைந்துரைக்கப் படுமோ
புன்கணவர் அறியாதே புலம்புகின்றார் அவர்போல்
புகல்மறையும் ஆகமமும் புலம்புகின்ற தம்மா
உன்கணவர் திறம்புகல்என் றுரைக்கின்றாய் நீதான்
உத்தமனார் அருட்சோதி பெற்றிடமுன் விரும்பே.
ஈங்குசிலர் உண்ணுகஎன் றென்னைஅழைக் கின்றார்
என்தோழி நான்இவர்கட் கென்புகல்வேன் அம்மா
ஓங்குநிலா மண்டபத்தே என்கணவ ருடனே
உவட்டாத தெள்ளமுதம் உண்டுபசி தீர்ந்தேன்
தேங்குழல்இங் கினிஎனக்குப் பசிவரில்அப் போது
செப்புகின்றேன் இப்போது சிலுகிழைத்தல் வேண்டா
ஏங்கல்அற நீஅவர்க்குத் தெளிவிப்பாய் மற்றை
இருந்தவரும் விருந்தவரும் இனிதுபுசித் திடற்கே.
ஐயர்எனை ஆளுடையார் அரும்பெருஞ்சோ தியினார்
அம்பலத்தே நடம்புரியும் ஆனந்த வடிவர்
மெய்யர்எனை மணம்புரிந்த தனிக்கணவர் துரிய
வெளியில்நிலா மண்டபத்தே மேவிஅமு தளித்தென்
கையகத்தே ஒருபசும்பொற் கங்கணமும் புனைந்தார்
கங்கணத்தின் தரத்தைஎன்னால் கண்டுரைக்கப் படுமோ
வையகமும் வானகமும் கொடுத்தாலும் அதற்கு
மாறாக மாட்டாதேல் மதிப்பரிதாம் அதுவே.
தன்வடிவம் தானாகும் திருச்சிற்றம் பலத்தே
தனிநடஞ்செய் பெருந்தலைவர் பொற்சபைஎங் கணவர்
பொன்வடிவம் இருந்தவண்ணம் நினைத்திடும்போ தெல்லாம்
புகலரும்பே ரானந்த போகவெள்ளம் ததும்பி
என்வடிவில் பொங்குகின்ற தம்மாஎன் உள்ளம்
இருந்தபடி என்புகல்வேன் என்அளவன் றதுதான்
முன்வடிவம் கரைந்தினிய சர்க்கரையும் தேனும்
முக்கனியும் கூட்டிஉண்ட பக்கமும்சா லாதே.
இவ்வுலகில் எனைப்போல்வார் ஓர்அனந்தம் கோடி
என்னில்உயர்ந் திருக்கின்றார் எத்தனையோ கோடி
அவ்வுலகில் சிறந்துநின்றார் அளவிறந்த கோடி
அத்தனைபேர் களும்அந்தோ நித்தம்வருந் திடவும்
எவ்வுலகும் உணர்வரிய திருச்சிற்றம் பலத்தே
இனிதமர்ந்த தலைவர்இங்கே என்னைமணம் புரிந்தார்
நவ்விவிழி மடமாதே கீழ்மேல்என் பதுதான்
நாதர்திரு அருட்சோதி நாடுவதொன் றிலையே.
திருவாளர் பொற்சபையில் திருநடஞ்செய் தருள்வார்
சிற்சபையார் என்தனக்குத் திருமாலை கொடுத்தார்
உருவாளர் அருவாகி ஒளியாகி வெளியாய்
ஓங்குகின்றார் என்னுடைய உயிர்த்துணைவர் அவர்தம்
பெருவாய்மைத் திருவருளே பெருவாழ்வென் றுணர்ந்தோர்
பேசியமெய் வாசகத்தின் பெருமையைஇன் றுணர்ந்தேன்
துருவாத எனக்கிங்கே அருள்நினைக்கும் தோறும்
சொல்லளவல் லாதசுகம் தோன்றுவதென் தோழி.
அருளாளர் பொற்பொதுவில் ஆனந்த நடஞ்செய்
ஆனந்த வண்ணர்எனை ஆளுடையார் நான்தான்
தெருளாத பருவத்தே தெருட்டிமணம் புரிந்த
திருவாளர் அவர்பெருமைத் திறத்தைஎவர் புகல்வார்
மருளாத ஆகமங்கள் மாமறைகள் எல்லாம்
மருண்டனவேல் என்னடிநம் மனவாக்கின் அளவோ
இருளாமை என்றுறுமோ அன்றுசிறி துரைப்பாம்
என்னவும்நாண் ஈர்ப்பதிதற் கென்புரிவேன் தோழி.
செம்பவளத் திருமலையோ மாணிக்க விளக்கோ
தெய்வமர கதத்திரளோ செழுநீலப் பொருப்போ
பம்புமணி ஒளியோநற் பசும்பொன்னின் சுடரோ
படிகவண்ணப் பெருங்காட்சி தானோஎன் றுணர்ந்தே
எம்பரமன் றெம்பெருமான் புறவண்ணம் யாதோ
என்பாரேல் அகவண்ணம் யார்உரைக்க வல்லார்
தம்பரமென் றென்னைஅன்று மணம்புரிந்தார் ஞான
சபைத்தலைவர் அவர்வண்ணம் சாற்றுவதென் தோழி.
தேவர்களோ முனிவர்களோ சிறந்தமுத்தர் தாமோ
தேர்ந்தசிவ யோகிகளோ செம்பொருள் கண்டோரோ
மூவர்களோ ஐவர்களோ முதற்பரையோ பரமோ
முன்னியஎன் தனித்தலைவர் தம்இயலை உணர்ந்தார்
யாவர்களும் அல்லஎன்றால் யான்உணர்ந்து மொழிதற்
கமையுமோ ஒருசிறிதும் அமையாது கண்டாய்
ஆவலொடும் அன்பர்தொழச் சிற்சபையில் நடிப்பார்
அவர்பெருமை அவர்அறிவர் அவரும்அறிந் திலரே.
திருச்சிற்றம் பலத்தின்பத் திருவுருக்கொண் டின்பத்
திருநடஞ்செய் தருள்கின்ற திருவடிக்கே தொழும்பாய்
அருச்சிக்கும் பேரன்பர் அறிவின்கண் அறிவாய்
அவ்வறிவில் விளைந்தசிவா னந்தஅமு தாகிப்
பரிச்சிக்கும் அவ்வமுதின் நிறைந்தசுவை யாகிப்
பயனாகிப் பயத்தின்அனு பவமாகி நிறைந்தே
உருச்சிக்கும் எனமறைகள் ஆகமங்கள் எல்லாம்
ஓதுகின்ற எனில்அவர்தம் ஒளிஉரைப்ப தெவரே.
வெடித்தளிந்த முக்கனியின் வடித்தரசந் தனிலே
விரும்புறஉட் பிழிந்தெடுத்த கரும்பிரதம் கலந்த
தடித்தசெழும் பாற்பெய்து கோற்றேன்விட் டதனைத்
தனித்தபர அமுதத்தில் தான்கலந்துண் டாற்போல்
இடித்திடித்தென் உளமுழுதும் தித்திக்கும் வார்த்தை
இனிதுரைத்து மணம்புரிந்த என்னுயிர்நா யகர்வான்
பொடித்திருமே னியர்அவரைப் புணரவல்லேன் அவர்தம்
புகழ்உரைக்க வல்லேனோ அல்லேன்காண் தோழீ.
கன்னிஎனை மணந்தபதி கனிதருசிற் சபைக்கே
கலந்ததனிப் பதிவயங்கு கனகசபா பதிவான்
பன்னியருக் கருள்புரிந்த பதிஉலக மெல்லாம்
படைத்தபதி காத்தருளும் பசுபதிஎவ் வுயிர்க்கும்
அன்னியம்அல் லாதகத்தும் புறத்தும்அகப் புறத்தும்
அருட்செங்கோல் செலுத்துகின்ற அதிபதியாம் அதனால்
என்னியல்போல் பிறர்இயலை எண்ணியிடேல் பிறரோ
என்பதிபால் அன்பதிலார் அன்புளரேல் எண்ணே.
என்னியல்போல் பிறர்இயலை எண்ணேல்என் றுரைத்தேன்
இறுமாப்பால் உரைத்தனன்என் றெண்ணியிடேல் மடவாய்
பன்னியநான் என்பதியின் பற்றலது வேறோர்
பற்றறியேன் உற்றவரும் மற்றவரும் பொருளும்
உன்னியஎன் உயிரும்என துடலும்என துணர்வும்
உயிர்உணர்வால் அடைசுகமும் திருச்சிற்றம் பலத்தே
மன்னியதா தலில்நான்பெண் மகளும்அலேன் வரும்ஆண்
மகனும்அலேன் அலியும்அலேன் இதுகுறித்தென் றறியே.
பார்முதலாப் பரநாதப் பதிகடந்தப் பாலும்
பாங்குடைய தனிச்செங்கோல் ஓங்கநடக் கின்ற
சீர்தெரிந்தார் ஏத்துதொறும் ஏத்துதற்கோ எனது
திருவாளர் அருள்கின்ற தன்றுமனங் கனிந்தே
ஆர்தருபே ரன்பொன்றே குறித்தருளு கின்றார்
ஆதலினால் அவரிடத்தே அன்புடையார் எல்லாம்
ஓர்தரும்என் உறவினராம் ஆணைஇது நீயும்
உறவான தவர்அன்பு மறவாமை குறித்தே.
நாதாந்த வரையும்எங்கள் நாயகனார் செங்கோல்
நடக்கின்ற தென்கின்றார் நாதாந்த மட்டோ
போதாந்த நிலையும்உயர் யோகாந்த நிலையும்
புனிதகலாந் தப்பதியும் புகல்கின்றார் புகலும்
வேதாந்த வெளியும்மிகு சித்தாந்த வெளியும்
விளங்கும்இவற் றப்பாலும் அதன்மேல்அப் பாலும்
வாதாந்தத் ததன்மேலும் அதன்மேல்அப் பாலும்
மன்றாடி அருட்செங்கோல் சென்றாடல் அறியே.
புண்ணியனார் என்உளத்தே புகுந்தமர்ந்த தலைவர்
பொதுவிளங்க நடிக்கின்ற திருக்கூத்தின் திறத்தை
எண்ணியநான் எண்ணுதொறும் உண்டுபசி தீர்ந்தே
இருக்கின்றேன் அடிக்கடிநீ என்னைஅழைக் கின்றாய்
பண்ணுறும்என் தனிக்கணவர் கூத்தடுஞ் சபையைப்
பார்த்தாலும் பசிபோமே பார்த்திடல்அன் றியுமே
அண்ணுறும்அத் திருச்சபையை நினைக்கினும்வே சாறல்
ஆறுமடி ஊறுமடி ஆனந்த அமுதே.
கூசுகின்ற தென்னடிநான் அம்பலத்தே நடிக்கும்
கூத்தாடிக் கணவருக்கே மாலையிட்டாய் எனவே
ஏசுகின்றார் ஆரடியோ அண்டபகி ரண்டத்
திருக்கின்ற சத்தர்களும் சத்திகளும் பிறரும்
பேசுகின்ற வார்த்தைஎலாம் வள்ளல்அருட் கூத்தின்
பெருமையலால் வேறொன்றும் பேசுகின்ற திலையே
வீசுகின்ற பெருஞ்சோதித் திருக்கூத்தின் திறமே
வேதமுடன் ஆகமங்கள் விளம்புகின்ற தன்றே.
குலமறியார் புலமறியார் அம்பலத்தே நடிக்கும்
கூத்தாடி ஐயருக்கே மாலையிட்டாய் எனவே
புலமறியார் போல்நீயும் புகலுதியோ தோழி
புலபுலஎன் றளப்பதெலாம் போகவிட்டிங் கிதுகேள்
அலகறியாத் திருக்கூத்தென் கணவர்புரி யாரேல்
அயன்அரியோ டரன்முதலாம் ஐவர்களும் பிறரும்
விலகறியா உயிர்பலவும் நீயும்இங்கே நின்று
மினுக்குவதும் குலுக்குவதும் வெளுத்துவிடும் காணே.
கொடிஇடைப்பெண் பேதாய்நீ அம்பலத்தே நடிக்கும்
கூத்தாடி என்றெனது கொழுநர்தமைக் குறித்தாய்
படிஇடத்தே வான்இடத்தே பாதலத்தே அண்ட
பகிரண்ட கோடியிலே பதிவிளக்கம் எல்லாம்
அடிமலர்கொண் டையர்செய்யும் திருக்கூத்தின் விளக்கம்
ஆகும்இது சத்தியம்என் றருமறைஆ கமங்கள்
கெடியுறவே பறையடித்துத் திரிகின்ற அவற்றைக்
கேட்டறிந்து கொள்வாய்நின் வாட்டமெலாம் தவிர்ந்தே.
இன்பவடி வந்தருதற் கிறைவர் வருகின்றார்
எல்லாஞ்செய் வல்லசித்தர் இங்குவரு கின்றார்
அன்பர்உளத் தேஇனிக்கும் அமுதர்வரு கின்றார்
அம்பலத்தே நடம்புரியும் ஐயர்வரு கின்றார்
என்புருப்பொன் உருவாக்க எண்ணிவரு கின்றார்
என்றுதிரு நாதஒலி இசைக்கின்ற தம்மா
துன்பமறத் திருச்சின்ன ஒலிஅதனை நீயும்
சுகம்பெறவே கேளடிஎன் தோழிஎனைச் சூழ்ந்தே.
துரியபதம் கடந்தபெருஞ் சோதிவரு கின்றார்
சுகவடிவந் தரஉயிர்க்குத் துணைவர்வரு கின்றார்
பெரியபிர மாதியர்க்கும் அரியர் வருகின்றார்
பித்தர்என மறைபுகலும் சித்தர்வரு கின்றார்
இரிவகல்சிற் சபைநடஞ்செய் இறைவர்வரு கின்றார்
என்றுதிரு நாதஒலி இசைக்கின்ற தம்மா
உரிமைபெறும் என்தோழி நீயும்இங்கே சின்ன
ஒலிகேட்டுக் களித்திடுவாய் உளவாட்டம் அறவே.
ஈசர்என துயிர்த்தலைவர் வருகின்றார் நீவிர்
எல்லீரும் புறத்திருமின் என்கின்றேன் நீதான்
ஏசறவே அகத்திருந்தால் என்எனக்கேட் கின்றாய்
என்கணவர் வரில்அவர்தாம் இருந்தருளும் முன்னே
ஆசைவெட்கம் அறியாது நான்அவரைத் தழுவி
அணைத்துமகிழ் வேன்அதுகண் டதிசயித்து நொடிப்பார்
கூசறியாள் இவள்என்றே பேசுவர்அங் கதனால்
கூறியதல் லதுவேறு குறித்ததிலை தோழீ.



