திருவருட்பா · 145வேத சிகாமணியே

வேத சிகாமணியே போத சுகோதயமே
மேதகு மாபொருளே ஓதரும் ஓர்நிலையே
நாத பராபரமே சூத பராவமுதே
ஞான சபாபதியே ஞான சபாபதியே.
1
ஏக சதாசிவமே யோக சுகாகரமே
ஏம பராநலமே காம விமோசனமே
நாக விகாசனமே நாத சுகோடணமே
ஞான சபாபதியே ஞான சபாபதியே.
2
தூய சதாகதியே நேய சதாசிவமே
சோம சிகாமணியே வாம உமாபதியே
ஞாய பராகரமே காய புராதரமே
ஞான சபாபதியே ஞான சபாபதியே.
3
ஆரண ஞாபகமே பூரண சோபனமே
ஆதிஅ னாதியனே வேதிய னாதியனே
நாரண னாதரமே காரண மேபரமே
ஞான சபாபதியே ஞான சபாபதியே.
4
ஆகம போதகமே யாதர வேதகமே
ஆமய மோசனமே ஆரமு தாகரமே
நாக நடோதயமே நாத புரோதயமே
ஞான சபாபதியே ஞான சபாபதியே.
5
ஆடக நீடொளியே நேடக நாடளியே
ஆதி புராதனனே வேதி பராபரனே
நாடக நாயகனே நானவ னானவனே
ஞான சபாபதியே ஞான சபாபதியே.
6
ஆரிய னேசிவனே ஆரண னேபவனே
ஆலய னேஅரனே ஆதர னேசுரனே
நாரிய னேவரனே நாடிய னேபரனே
ஞான சபாபதியே ஞான சபாபதியே.
7
ஆதர வேதியனே ஆடக ஜோதியனே
ஆரணி பாதியனே ஆதர வாதியனே
நாத விபூதியனே நாம வனாதியனே
ஞான சபாபதியே ஞான சபாபதியே.
8
தேவ கலாநிதியே ஜீவ தயாநிதியே
தீன சகாநிதியே சேகர மாநிதியே
நாவல ரோர்பதியே நாரி உமாபதியே
ஞான சபாபதியே ஞான சபாபதியே.
9
ஆடிய நாடகனே ஆலமர் ஆதியனே
ஆகம மேலவனே ஆரண நாலவனே
நாடிய காரணனே நீடிய பூரணனே
ஞான சபாபதியே ஞான சபாபதியே.
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout