திருவருட்பா  118. சிவசிவ ஜோதி

சிவசிவ  சிவசிவ  ஜோதி  -  சிவ 
சிவசிவ  சிவசிவ  சிவசிவ  ஜோதி 
சிவசிவ  சிவசிவ  ஜோதி. 
1
சிற்பர  மாம்பரஞ்  ஜோதி  -  அருட் 
சித்தெல்லாம்  வல்ல  சிதம்பர  ஜோதி 
தற்பர  தத்துவ  ஜோதி  -  என்னைத் 
தானாக்கிக்  கொண்ட  தயாநிதி  ஜோதி.  சிவசிவ 
2
சித்துரு  வாம்சுயஞ்  ஜோதி  -  எல்லாம் 
செய்திட  வல்ல  சிதம்பர  ஜோதி 
அத்துவி  தானந்த  ஜோதி  -  என்னை 
ஆட்கொண்  டருளும்சிற்  றம்பல  ஜோதி.  சிவசிவ 
3
சின்மய  மாம்பெருஞ்  ஜோதி  -  அருட் 
செல்வ  மளிக்கும்  சிதம்பர  ஜோதி 
தன்மய  மாய்நிறை  ஜோதி  -  என்னைத் 
தந்தமெய்  ஜோதி  சதானந்த  ஜோதி.  சிவசிவ 
4
ஆதிஈ  றில்லாமுற்  ஜோதி  -  அரன் 
ஆதியர்  தம்மை  அளித்தபிற்  ஜோதி 
ஓதி  உணர்வரும்  ஜோதி  -  எல்லா 
உயிர்களின்  உள்ளும்  ஒளிர்கின்ற  ஜோதி.  சிவசிவ 
5
மன்னிய  பொன்வண்ண  ஜோதி  -  சுக 
வண்ணத்த  தாம்பெரு  மாணிக்க  ஜோதி 
துன்னிய  வச்சிர  ஜோதி  -  முத்து 
ஜோதி  மரகத  ஜோதியுள்  ஜோதி.  சிவசிவ 
6
பார்முதல்  ஐந்துமாம்  ஜோதி  -  ஐந்தில் 
பக்கமேல்  கீழ்நடுப்  பற்றிய  ஜோதி 
ஓர்ஐம்  பொறியுரு  ஜோதி  -  பொறிக் 
குள்ளும்  புறத்தும்  ஒளிர்கின்ற  ஜோதி.  சிவசிவ 
7
ஐம்புல  மும்தானாம்  ஜோதி  -  புலத் 
தகத்தும்  புறத்து  மலர்ந்தொளிர்  ஜோதி 
பொய்ம்மயல்  போக்கும்உள்  ஜோதி  -  மற்றைப் 
பொறிபுலன்  உள்ளும்  புறத்துமாம்  ஜோதி.  சிவசிவ 
8
மனமாதி  எல்லாமாம்  ஜோதி  -  அவை 
வாழ  அகம்புறம்  வாழ்கின்ற  ஜோதி 
இனமான  உள்ளக  ஜோதி  -  சற்றும் 
ஏறா  திறங்கா  தியக்குமோர்  ஜோதி.  சிவசிவ 
9
முக்குணமு  மூன்றாம்  ஜோதி  -  அவை 
முன்பின்  இயங்க  முடுக்கிய  ஜோதி 
எக்குணத்  துள்ளுமாம்  ஜோதி  -  குணம் 
எல்லாம்  கடந்தே  இலங்கிய  ஜோதி.  சிவசிவ 
10
பகுதிமூன்  றாகிய  ஜோதி  -  மூலப் 
பகுதிகள்  மூன்றும்  படைத்தருள்  ஜோதி 
விகுதி  பலவாக்கும்  ஜோதி  -  சற்றும் 
விகுதிஒன்  றின்றி  விளக்கிய  ஜோதி.  சிவசிவ 
11
கால  முதற்காட்டும்  ஜோதி  -  கால 
காரணத்  தப்பால்  கடந்தொளிர்  ஜோதி 
கோலம்  பலவாகும்  ஜோதி  -  ஒன்றும் 
குறிக்கப்  படாச்சிற்  குணப்பெருஞ்  சோதி.  சிவசிவ 
12
தத்துவம்  எல்லாமாம்  ஜோதி  -  அந்தத் 
தத்துவம்  எல்லாம்  தருவிக்கும்  ஜோதி 
அத்துவி  தப்பெருஞ்  ஜோதி  -  எல்லாம் 
அருளில்  விளங்க  அமர்த்திய  ஜோதி.  சிவசிவ 
13
சத்தர்கள்  எல்லாமாம்  ஜோதி  -  அவர் 
சத்திகள்  எல்லாம்  தழைப்பிக்கும்  ஜோதி 
முத்தர்  அனுபவ  ஜோதி  -  பர 
முத்தியாம்  ஜோதிமெய்ச்  சித்தியாம்  ஜோதி.  சிவசிவ 
14
ஆறந்தத்  தேநிறை  ஜோதி  -  அவைக் 
கப்புறத்  தப்பாலும்  ஆகிய  ஜோதி 
வீறும்  பெருவெளி  ஜோதி  -  மேலும் 
வெட்ட  வெளியில்  விளங்கிய  ஜோதி.  சிவசிவ 
15
பேரருட்  ஜோதியுள்  ஜோதி  -  அண்ட 
பிண்டங்கள்  எல்லாம்  பிறங்கிய  ஜோதி 
வாரமுற்  றோங்கிய  ஜோதி  -  மன 
வாக்குக்  கெட்டாததோர்  மாமணி  ஜோதி.  சிவசிவ 
16
ஒன்றான  பூரண  ஜோதி  -  அன்பில் 
ஒன்றாத  உள்ளத்தில்  ஒன்றாத  ஜோதி 
என்றா  ஒளிர்கின்ற  ஜோதி  -  என்னுள் 
என்றும்  விளங்கிய  என்னுயிர்  ஜோதி.  சிவசிவ 
17
மெய்யேமெய்  யாகிய  ஜோதி  -  சுத்த 
வேதாந்த  வீட்டில்  விளங்கிய  ஜோதி 
துய்ய  சிவானந்த  ஜோதி  -  குரு 
துரியத்  தலத்தே  துலங்கிய  ஜோதி.  சிவசிவ 
18
சிவமய  மாம்சுத்த  ஜோதி  -  சுத்த 
சித்தாந்த  வீட்டில்  சிறந்தொளிர்  ஜோதி 
உவமையில்  லாப்பெருஞ்  சோதி  -  என 
துள்ளே  நிரம்பி  ஒளிர்கின்ற  ஜோதி.  சிவசிவ 
19
என்னைத்தா  னாக்கிய  ஜோதி  -  இங்கே 
இறந்தாரை  எல்லாம்  எழுப்புமோர்  ஜோதி 
அன்னைக்கு  மிக்கருட்  ஜோதி  -  என்னை 
ஆண்டமு  தம்தந்த  ஆனந்த  ஜோதி.  சிவசிவ 
20
சித்தம்  சிவமாக்கும்  ஜோதி  -  நான் 
செய்த  தவத்தால்  தெரிந்தஉட்  ஜோதி 
புத்தமு  தாகிய  ஜோதி  -  சுக 
பூரண  மாய்ஒளிர்  காரண  ஜோதி.  சிவசிவ 
21
தம்பத்தில்  ஏற்றிய  ஜோதி  -  அப்பால் 
சார்மணி  மேடைமேல்  தான்வைத்த  ஜோதி 
விம்பப்  பெருவெளி  ஜோதி  -  அங்கே 
வீதியும்  வீடும்  விளக்கிய  ஜோதி.  சிவசிவ 
22
சுகமய  மாகிய  ஜோதி  -  எல்லா 
ஜோதியு  மான  சொரூபஉட்  ஜோதி 
அகமிதந்  தீர்த்தருள்  ஜோதி  -  சச்சி 
தானந்த  ஜோதி  சதானந்த  ஜோதி.  சிவசிவ 
23
நித்த  பரானந்த  ஜோதி  -  சுத்த 
நிரதிச  யானந்த  நித்திய  ஜோதி 
அத்துவி  தானந்த  ஜோதி  -  எல்லா 
ஆனந்த  வண்ணமும்  ஆகிய  ஜோதி.  சிவசிவ 
24
பொய்யாத  புண்ணிய  ஜோதி  -  எல்லாப் 
பொருளும்  விளங்கப்  புணர்த்திய  ஜோதி 
நையா  தருள்செய்த  ஜோதி  -  ஒரு 
நானும்தா  னும்ஒன்றாய்  நண்ணிய  ஜோதி.  சிவசிவ 
25
கண்ணிற்  கலந்தருள்  ஜோதி  -  உளக் 
கண்ணுயிர்க்  கண்ணருட்  கண்ணுமாம்  ஜோதி 
எண்ணிற்ப  டாப்பெருஞ்  சோதி  -  நான் 
எண்ணிய  வண்ணம்  இயற்றிய  ஜோதி.  சிவசிவ 
26
விந்து  ஒளிநடு  ஜோதி  -  பர 
விந்து  ஒளிக்குள்  விளங்கிய  ஜோதி 
நம்துயர்  தீர்த்தருள்  ஜோதி  -  பர 
நாதாந்த  நாட்டுக்கு  நாயக  ஜோதி.  சிவசிவ 
27
தான்அன்றி  ஒன்றிலா  ஜோதி  -  என்னைத் 
தன்மயம்  ஆக்கிய  சத்திய  ஜோதி 
நான்இன்று  கண்டதோர்  ஜோதி  -  தானே 
நானாகி  வாழ்ந்திட  நல்கிய  ஜோதி.  சிவசிவ 
28
தன்னிகர்  இல்லதோர்  ஜோதி  -  சுத்த 
சன்மார்க்க  சங்கம்  தழுவிய  ஜோதி 
என்னுள்  நிறைந்தமெய்  ஜோதி  -  என்னை 
ஈன்றைந்  தொழில்செய்என்  றேவிய  ஜோதி.  சிவசிவ 
29
அச்சம்  தவிர்த்தமெய்  ஜோதி  -  என்னை 
ஆட்கொண்  டருளிய  அம்பல  ஜோதி 
இச்சை  எலாம்தந்த  ஜோதி  -  உயிர்க் 
கிங்குமங்  கென்னாமல்  எங்குமாம்  ஜோதி.  சிவசிவ 
30
காலையில்  நான்கண்ட  ஜோதி  -  எல்லாக் 
காட்சியும்  நான்காணக்  காட்டிய  ஜோதி 
ஞாலமும்  வானுமாம்  ஜோதி  -  என்னுள் 
நானாகித்  தானாகி  நண்ணிய  ஜோதி.  சிவசிவ 
31
ஏகாந்த  மாகிய  ஜோதி  -  என்னுள் 
என்றும்  பிரியா  திருக்கின்ற  ஜோதி 
சாகாத  வரந்தந்த  ஜோதி  -  என்னைத் 
தானாக்கிக்  கொண்டதோர்  சத்திய  ஜோதி.  சிவசிவ 
32
சுத்த  சிவமய  ஜோதி  -  என்னை 
ஜோதி  மணிமுடி  சூட்டிய  ஜோதி 
சத்திய  மாம்பெருஞ்  ஜோதி  -  நானே 
தானாகி  ஆளத்  தயவுசெய்  ஜோதி.  சிவசிவ 
33
சிவசிவ  சிவசிவ  ஜோதி  -  சிவ 
சிவசிவ  சிவசிவ  சிவசிவ  ஜோதி 
சிவசிவ  சிவசிவ  ஜோதி. 
34

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com