திருவருட்பா  119. ஜோதியுள் ஜோதி

ஜோதியுள்  ஜோதியுள்  ஜோதி  -  சுத்த 
ஜோதி  சிவஜோதி  ஜோதியுள்  ஜோதி 
ஜோதியுள்  ஜோதியுள்  ஜோதி. 
1
சிவமே  பொருளென்று  தேற்றி  -  என்னைச் 
சிவவெளிக்  கேறும்  சிகரத்தில்  ஏற்றிச் 
சிவமாக்கிக்  கொண்டது  பாரீர்  -  திருச் 
சிற்றம்  பலத்தே  திருநட  ஜோதி.  ஜோதி 
2
வித்தெல்லாம்  ஒன்றென்று  நாட்டி  -  அதில் 
விளைவு  பலபல  வேறென்று  காட்டிச் 
சித்தெல்லாம்  தந்தது  பாரீர்  -  திருச் 
சிற்றம்  பலத்தே  திருநட  ஜோதி.  ஜோதி 
3
சொல்வந்த  அந்தங்கள்  ஆறும்  -  ஒரு 
சொல்லாலே  ஆமென்றச்  சொல்லாலே  வீறும் 
செல்வம்  கொடுத்தது  பாரீர்  -  திருச் 
சிற்றம்  பலத்தே  திருநட  ஜோதி.  ஜோதி 
4
தங்கோல்  அளவெனக்  கோதிச்  -  சுத்த 
சமரச  சத்திய  சன்மார்க்க  நீதிச் 
செங்கோல்  அளித்தது  பாரீர்  -  திருச் 
சிற்றம்  பலத்தே  திருநட  ஜோதி.  ஜோதி 
5
ஆபத்தை  நீக்கி  வளர்த்தே  -  சற்றும் 
அசையாமல்  அவியாமல்  அடியேன்  உளத்தே 
தீபத்தை  வைத்தது  பாரீர்  -  திருச் 
சிற்றம்  பலத்தே  திருநட  ஜோதி.  ஜோதி 
6
மெய்யொன்று  சன்மார்க்க  மேதான்  -  என்றும் 
விளங்கப்  படைப்பாதி  மெய்த்தொழில்  நீதான் 
செய்யென்று  தந்தது  பாரீர்  -  திருச் 
சிற்றம்  பலத்தே  திருநட  ஜோதி.  ஜோதி 
7
என்பால்  வருபவர்க்  கின்றே  -  அருள் 
ஈகின்றேன்  ஈகின்றேன்  ஈகின்றேன்  என்றே 
தென்பால்  இருந்தது  பாரீர்  -  திருச் 
சிற்றம்  பலத்தே  திருநட  ஜோதி.  ஜோதி 
8
துரியத்  தலமூன்றின்  மேலே  -  சுத்த 
துரியப்  பதியில்  அதுஅத  னாலே 
தெரியத்  தெரிவது  பாரீர்  -  திருச் 
சிற்றம்  பலத்தே  திருநட  ஜோதி.  ஜோதி 
9
பரைதூக்கிக்  காட்டிய  காலே  -  ஆதி 
பரைஇவர்க்  கப்பால்அப்  பால்என்று  மேலே 
திரைதூக்கிக்  காட்டுதல்  பாரீர்  -  திருச் 
சிற்றம்  பலத்தே  திருநட  ஜோதி.  ஜோதி 
10
தற்பர  மேவடி  வாகி  -  அது 
தன்னைக்  கடந்து  தனிஉரு  வாகிச் 
சிற்பரத்  துள்ளது  பாரீர்  -  திருச் 
சிற்றம்  பலத்தே  திருநட  ஜோதி.  ஜோதி 
11
நவவெளி  நால்வகை  யாதி  -  ஒரு 
நடுவெளிக்  குள்ளே  நடத்திய  நீதிச் 
சிவவெளி  யாம்இது  பாரீர்  -  திருச் 
சிற்றம்  பலத்தே  திருநட  ஜோதி.  ஜோதி 
12
மேருவெற்  புச்சியின்  பாலே  -  நின்று 
விளங்குமோர்  தம்பத்தின்  மேலுக்கு  மேலே 
சேருமோர்  மேடைமேல்  பாரீர்  -  திருச் 
சிற்றம்  பலத்தே  திருநட  ஜோதி.  ஜோதி 
13
ஆரண  வீதிக்  கடையும்  -  சுத்த 
ஆகம  வீதிகள்  அந்தக்  கடையும் 
சேர  நடுக்கடை  பாரீர்  -  திருச் 
சிற்றம்  பலத்தே  திருநட  ஜோதி.  ஜோதி 
14
பாடல்  மறைகளோர்  கோடி  -  அருட் 
பாத  உருவ  சொரூபங்கள்  பாடி 
தேட  இருந்தது  பாரீர்  -  திருச் 
சிற்றம்  பலத்தே  திருநட  ஜோதி.  ஜோதி 
15
நீடு  சிவாகமங்  கோடி  -  அருள் 
நேருறப்  பாடியும்  ஆடியும்  ஓடித் 
தேட  இருந்தது  பாரீர்  -  திருச் 
சிற்றம்  பலத்தே  திருநட  ஜோதி.  ஜோதி 
16
பத்தி  நெறியில்  செழித்தே  -  அன்பில் 
பாடுமெய்  யன்பர்  பதியில்  பழுத்தே 
தித்தித்  திருப்பது  பாரீர்  -  திருச் 
சிற்றம்  பலத்தே  திருநட  ஜோதி.  ஜோதி 
17
பித்தாடு  மாயைக்கு  மேலே  -  சுத்தப் 
பிரம  வெளியினில்  பேரரு  ளாலே 
சித்தாடு  கின்றது  பாரீர்  -  திருச் 
சிற்றம்  பலத்தே  திருநட  ஜோதி.  ஜோதி 
18
தருநெறி  எல்லாம்உள்  வாங்கும்  -  சுத்த 
சன்மார்க்கம்  என்றோர்  தனிப்பேர்கொண்  டோங்கும் 
திருநெறிக்  கேசென்று  பாரீர்  -  திருச் 
சிற்றம்  பலத்தே  திருநட  ஜோதி.  ஜோதி 
19
எம்பொருள்  எம்பொருள்  என்றே  -  சொல்லும் 
எல்லாச்  சமயத்துள்  எல்லார்க்கும்  ஒன்றே 
செம்பொருள்  என்பது  பாரீர்  -  திருச் 
சிற்றம்  பலத்தே  திருநட  ஜோதி.  ஜோதி 
20
சைவ  முதலாக  நாட்டும்  -  பல 
சமயங்கள்  எல்லாம்  தனித்தனிக்  காட்டும் 
தெய்வம்  இதுவந்து  பாரீர்  -  திருச் 
சிற்றம்  பலத்தே  திருநட  ஜோதி.  ஜோதி 
21
எள்ளலில்  வான்முதல்  மண்ணும்  -  அமு 
தெல்லாம்  இதிலோர்  இறையள  வென்னும் 
தெள்ளமு  தாம்இது  பாரீர்  -திருச் 
சிற்றம்  பலத்தே  திருநட  ஜோதி.  ஜோதி 
22
எத்தாலும்  ஆகாதே  அம்மா  -  என்றே 
எல்லா  உலகும்  இயம்புதல்  சும்மா 
செத்தாரை  மீட்பது  பாரீர்  -  திருச் 
சிற்றம்  பலத்தே  திருநட  ஜோதி.  ஜோதி 
23
பிறந்து  பிறந்துழன்  றேனை  -  என்றும் 
பிறவா  திறவாப்  பெருமைதந்  தூனைச் 
சிறந்தொளிர்  வித்தது  பாரீர்  -  திருச் 
சிற்றம்  பலத்தே  திருநட  ஜோதி.  ஜோதி 
24
வருவித்த  வண்ணமும்  நானே  -  இந்த 
மாநிலத்  தேசெயும்  வண்ணமும்  தானே 
தெரிவித்  தருளிற்றுப்  பாரீர்  -  திருச் 
சிற்றம்  பலத்தே  திருநட  ஜோதி.  ஜோதி 
25
பாரிடம்  வானிட  மற்றும்  -  இடம் 
பற்றிய  முத்தர்கள்  சித்தர்கள்  முற்றும் 
சேரிட  மாம்இது  பாரீர்  -  திருச் 
சிற்றம்  பலத்தே  திருநட  ஜோதி.  ஜோதி 
26
உய்பிள்ளை  பற்பலர்  ஆவல்  -  கொண்டே 
உலகத்  திருப்பஇங்  கென்னைத்தன்  ஏவல் 
செய்பிள்ளை  ஆக்கிற்றுப்  பாரீர்  -  திருச் 
சிற்றம்  பலத்தே  திருநட  ஜோதி.  ஜோதி 
27
உருவும்  உணர்வும்செய்  நன்றி  -  அறி 
உளமும்  எனக்கே  உதவிய  தன்றித் 
திருவும்  கொடுத்தது  பாரீர்  -  திருச் 
சிற்றம்  பலத்தே  திருநட  ஜோதி.  ஜோதி 
28
எண்ணிய  எண்ணங்கள்  எல்லாம்  -  நான் 
எண்ணிய  வாறே  இனிதுதந்  தென்னைத் 
திண்ணியன்  ஆக்கிற்றுப்  பாரீர்  -  திருச் 
சிற்றம்  பலத்தே  திருநட  ஜோதி.  ஜோதி 
29
பேருல  கெல்லாம்  மதிக்கத்  -  தன் 
பிள்ளைஎன்  றென்னைப்  பெயரிட்  டழைத்தே 
சீருறச்  செய்தது  பாரீர்  -  திருச் 
சிற்றம்  பலத்தே  திருநட  ஜோதி.  ஜோதி 
30
ஜோதியுள்  ஜோதியுள்  ஜோதி  -  சுத்த 
ஜோதி  சிவஜோதி  ஜோதியுள்  ஜோதி 
ஜோதியுள்  ஜோதியுள்  ஜோதி. 
31

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com