
அஞ்சா தே நெஞ்சே அஞ்சா தே
அஞ்சா தே நெஞ்சே அஞ்சா தே.
வஞ்சமி லார்நாம் வருந்திடில் அப்போதே
அஞ்சலென் பார்இதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
துய்யர் அருட்பெருஞ் ஜோதியார் நம்முடை
அய்யர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
மண்ணில் நமையாண்ட வள்ளலார் நம்முடை
அண்ணல் இதோதிரு வம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
இப்புவி யில்நம்மை ஏன்றுகொண் டாண்டநம்
அப்பர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
சித்தர் எலாம்வல்ல தேவர் நமையாண்ட
அத்தர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
சோதி அருட்பெருஞ் சோதியார் நம்முடை
ஆதி இதோதிரு வம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
தாண்டவ னார்என்னைத் தான்தடுத் தாட்கொண்ட
ஆண்டவ னார்இதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
வன்பர் மனத்தை மதியா தவர்நம
தன்பர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
தெருளுடை யார்எலாஞ் செய்யவல் லார்திரு
அருளுடை யார்இதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
நம்மை ஆட்கொள்ள நடம்புரி வார்நம
தம்மை யினோடிதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
தன்னைஒப் பார்சிற் சபைநடஞ் செய்கின்றார்
அன்னைஒப் பார்இதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
பாடுகின் றார்க்கருட் பண்பினர் ஞானக்கூத்
தாடுகின் றார்இதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
காதரிப் பார்கட்குக் காட்டிக் கொடார்நம்மை
ஆதரிப் பார்இதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
நீளவல் லார்க்குமேல் நீளவல்லார் நம்மை
ஆளவல் லார்இதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
இன்புடை யார்நம் இதயத் தமர்ந்தபே
ரன்புடை யார்இதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
உபய பதத்தைநம் உச்சிமேற் சூட்டிய
அபயர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
வேண்டுகொண் டார்என்னை மேல்நிலைக் கேற்றியே
ஆண்டுகொண் டார்இதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
எச்சம்பெ றேல்மக னேஎன்றென் னுள்உற்ற
அச்சம் தவிர்த்தவர் அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
நமுதன் முதற்பல நன்மையு மாம்ஞான
அமுதர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
செடிகள் தவிர்த்தருட் செல்வ மளிக்கின்ற
அடிகள் இதோதிரு வம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
விரசுல கெல்லாம் விரித்தைந் தொழில்தரும்
அரசுடை யார்இதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
செறிவுடை யார்உளத் தேநடஞ் செய்கின்ற
அறிவுரு வார்இதோ அம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே நெஞ்சே அஞ்சா தே
அஞ்சா தே நெஞ்சே அஞ்சா தே



