
இதுநல்ல தருணம் - அருள்செய்ய
இதுநல்ல தருணம்.
பொதுநல்ல நடம்வல்ல புண்ணிய ரேகேளும்
பொய்யேதும் சொல்கிலேன் மெய்யே புகல்கின்றேன். இதுநல்ல
மதித்த சமயமத வழக்கெல்லா மாய்ந்தது
வருணாச் சிரமம்எனு மயக்கமும் சாய்ந்தது
கொதித்த லோகாசாரக் கொதிப்பெல்லாம் ஒழிந்தது
கொலையும் களவுமற்றைப் புலையும் அழிந்தது. இதுநல்ல
குறித்த வேதாகமக் கூச்சலும் அடங்கிற்று
குதித்த மனமுருட்டுக் குரங்கு முடங்கிற்று
வெறித்தவெவ் வினைகளும் வெந்து குலைந்தது
விந்தைசெய் கொடுமாயைச் சந்தையும் கலைந்தது. இதுநல்ல
கோபமும் காமமும் குடிகெட்டுப் போயிற்று
கொடியஓர் ஆங்காரம் பொடிப்பொடி ஆயிற்று
தாபமும் சோபமும் தான்தானே சென்றது
தத்துவம் எல்லாம்என் றன்வசம் நின்றது. இதுநல்ல
கரையா எனதுமனக் கல்லும் கரைந்தது
கலந்து கொளற்கென் கருத்தும் விரைந்தது
புரையா நிலையில்என் புந்தியும் தங்கிற்று
பொய்படாக் காதல் ததும்பிமேல் பொங்கிற்று.
இதுநல்ல தருணம் - அருள்செய்ய
இதுநல்ல தருணம்.



