திருவருட்பா · 56சண்முகர் வருகை

வாரும் வாரும்தெய்வ வடிவேல் முருகரே
வள்ளி மணாளரே வாரும்
புள்ளி மயிலோரே வாரும்.
1
சங்கம் ஒலித்தது தாழ்கடல் விம்மிற்று
சண்முக நாதரே வாரும்
உண்மை வினோதரே வாரும்.
2
பொழுது விடிந்தது பொற்கோழி கூவிற்று
பொன்னான வேலரே வாரும்
மின்னார்முந் நூலரே வாரும்.
3
காகம் கரைந்தது காலையும் ஆயிற்று
கண்ணுதல் சேயரே வாரும்
ஒண்ணுதல் நேயரே வாரும்.
4
செங்கதிர் தோன்றிற்றுத் தேவர்கள் சூழ்ந்தனர்
செங்கல்வ ராயரே வாரும்
எங்குரு நாதரே வாரும்.
5
அருணன் உதித்தனன் அன்பர்கள் சூழ்ந்தனர்
ஆறுமுகத் தோரே வாரும்
மாறில்அகத் தோரே வாரும்.
6
சூரியன் தோன்றினன் தொண்டர்கள் சூழ்ந்தனர்
சூரசங் காரரே வாரும்
வீரசிங் காரரே வாரும் .
7
வீணை முரன்றது வேதியர் சூழ்ந்தனர்
வேலாயுதத் தோரே வாரும்
காலாயுதத் தோரே வாரும்.
8
சேவல் ஒலித்தது சின்னம் பிடித்தனர்
தேவர்கள் தேவரே வாரும்
மூவர் முதல்வரே வாரும்.
9
பத்தர்கள் சூழ்ந்தனர் பாடல் பயின்றனர்
பன்னிரு தோளரே வாரும்
பொன்மலர்த் தாளரே வாரும்.
10
மாலை கொணர்ந்தனர் மஞ்சனம் போந்தது
மாமயில் வீரரே வாரும்
தீமையில் தீரரே வாரும்.
11
தொண்டர்கள் நாடினர் தோத்திரம் பாடினர்
சுப்பிர மணியரே வாரும்
வைப்பின் அணியரே வாரும்.
12

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com