
வன்மூட்டைப் பூச்சியும் புன்சீலைப் பேனும்தம் வாய்க்கொள்ளியால்
என்மூட்டைத் தேகம் சுறுக்கிட வேசுட் டிராமுழுதும்
தொன்மூட் டையினும் துணியினும் பாயினும் சூழ்கின்றதோர்
பொன்மூட்டை வேண்டிஎன் செய்கேன் அருள்முக்கட் புண்ணியனே.
மான்முடிமே லும்கமலத் தான்முடிமே லும்தேவர்
கோன்முடிமே லும்போய்க் குலாவுமே - வான்முடிநீர்
ஊர்ந்துவலம் செய்தொழுகும் ஒற்றியூர்த் தியாகரைநாம்
சார்ந்துவலம் செய்கால்கள் தாம்.
சத்திமான் என்பர்நின் தன்னை ஐயனே
பத்திமான் தனக்கலால் பகர்வ தெங்ஙனே.
படியே அளந்த மாலவனும் பழைய மறைசொற் பண்ணவனும்
முடியீ றறியா முதற்பொருளே மொழியும் ஒற்றி நகர்க்கிறையே
அடியார் களுக்கே இரங்கிமுனம் அடுத்த சுரநோய் தடுத்ததுபோல்
படிமீ தடியேற் குறுபிணிபோம் படிநீ கடைக்கண் பார்த்தருளே.
மன்றாடும் மாமணியே நின்பொற் பாத
மலர்த்துணையே துணையாக வாழ்கின் றோர்க்கு
ஒன்றாலும் குறைவில்லை ஏழை யேன்யான்
ஒன்றுமிலேன் இவ்வுலகில் உழலா நின்றேன்
இன்றாக நாட்கழியில் என்னே செய்கேன்
இணைமுலையார் மையலினால் இளைத்து நின்றேன்
என்றாலும் சிறிதெளியேற் கிரங்கல் வேண்டும்
எழில்ஆரும் ஒற்றியூர் இன்ப வாழ்வே.
சோறு வேண்டினும் துகிலணி முதலாம்
சுகங்கள் வேண்டினும் சுகமலாச் சுகமாம்
வேறு வேண்டினும் நினைஅடைந் தன்றி
மேவொ ணாதெனும் மேலவர் உரைக்கோர்
மாறு வேண்டிலேன் வந்துநிற் கின்றேன்
வள்ளலே உன்றன் மனக்குறிப் பறியேன்
சேறு வேண்டிய கயப்பணைக் கடற்சார்
திகழும் ஒற்றியூர்ச் சிவபரஞ் சுடரே.



