திருவருட்பா  58. அருண்மொழி மாலை

பொதுநின்  றருள்வீ  ரொற்றியுளீர்  பூவுந்  தியதென்  முலையென்றேன் 
இதுவென்  றறிநா  மேறுகின்ற  தென்றா  ரேறு  கின்றதுதான் 
எதுவென்  றுரைத்தே  னெதுநடுவோ  ரெழுத்திட்  டறிநீ  யென்றுரைத்தார் 
அதுவின்  றணங்கே  யென்னடியவ்  வையர்  மொழிந்த  வருண்மொழியே. 
1
மருகா  வொற்றி  வாணர்பலி  வாங்க  வகையுண்  டேயென்றேன் 
ஒருகா  லெடுத்தேன்  காணென்றா  ரொருகா  லெடுத்துக்  காட்டுமென்றேன் 
வருகா  விரிப்பொன்  னம்பலத்துள்  வந்தாற்  காட்டு  வேமென்றார் 
அருகா  வியப்பா  மென்னடியவ்  வையர்  மொழிந்த  வருண்மொழியே. 
2
விட்டொற்  றியில்வாழ்  வீரெவனிவ்  வேளை  யருள  நின்றதென்றேன் 
சுட்டுஞ்  சுதனே  யென்றார்நான்  சுட்டி  யறியச்  சொல்லுமென்றேன் 
பட்டுண்  மருங்கே  நீகுழந்தைப்  பருவ  மதனின்  முடித்ததென்றார் 
அட்டுண்  டறியா  ரென்னடியவ்  வையர்  மொழிந்த  வருண்மொழியே. 
3
வேலை  ஞாலம்  புகழொற்றி  விளங்குந்  தேவர்  நீரணியும் 
மாலை  யாதென்  றேனயன்மால்  மாலை  யகற்று  மாலையென்றார் 
சோலை  மலரன்  றேயென்றேன்  சோலை  யேநாந்  தொடுத்ததென்றார் 
ஆலு  மிடையா  யென்னடியவ்  வையர்  மொழிந்த  வருண்மொழியே. 
4
உயிரு  ளுறைவீர்  திருவொற்றி  யுள்ளீர்  நீரென்  மேற்பிடித்த 
வயிர  மதனை  விடுமென்றேன்  மாற்றா  ளலநீ  மாதேயாஞ் 
செயிர  தகற்றுன்  முலைப்பதிவாழ்  தேவ  னலவே  டெளியென்றார் 
அயிர  மொழியா  யென்னடியவ்  வையர்  மொழிந்த  வருண்மொழியே. 
5
தண்கா  வளஞ்சூழ்  திருவொற்றித்  தலத்தி  லமர்ந்த  சாமிநுங்கை 
யெண்கார்  முகமாப்  பொன்னென்றே  னிடையிட்  டறித  லரிதென்றார் 
மண்கா  தலிக்கு  மாடென்றேன்  மதிக்குங்  கணைவில்  லன்றென்றார் 
அண்கார்க்  குழலா  யென்னடியவ்  வையர்  மொழிந்த  வருண்மொழியே. 
6
அலங்கும்  புனற்செய்  யொற்றியுளீ  ரயன்மா  லாதி  யாவர்கட்கும் 
இலங்கு  மைகாணீரென்றே  னிதன்முன்  னேழ்நீ  கொண்டதென்றார் 
துலங்கு  மதுதா  னென்னென்றேன்  சுட்டென்  றுரைத்தா  ராகெட்டேன் 
அலங்கற்  குழலா  யென்னடியவ்  வையர்  மொழிந்த  வருண்மொழியே. 
7
விண்டு  வணங்கு  மொற்றியுளீர்  மென்பூ  விருந்தும்  வன்பூவில் 
வண்டு  விழுந்த  தென்றேனெம்  மலர்க்கை  வண்டும்  விழுந்ததென்றார் 
தொண்டர்க்  கருள்வீர்  நீரென்றேன்  றோகாய்  நாமே  தொண்டரென்றார் 
அண்டர்க்  கரியா  ரென்னடியவ்  வையர்  மொழிந்த  வருண்மொழியே. 
8
மட்டார்  மலர்க்கா  வொற்றியுளீர்  மதிக்குங்  கலைமேல்  விழுமென்றேன் 
எட்டா  மெழுத்தை  யெடுக்குமென்றா  ரெட்டா  மெழுத்திங்  கெதுவென்றேன் 
உட்டா  வகற்று  மந்தணர்க  ளுறையூர்  மாதே  யுணரென்றார் 
அட்டார்  புரங்க  ளென்னடியவ்  வையர்  மொழிந்த  வருண்மொழியே. 
9
ஒற்றி  நகரீர்  மனவாசி  யுடையார்க்  கருள்வீர்  நீரென்றேன் 
பற்றி  யிறுதி  தொடங்கியது  பயிலு  மவர்க்கே  யருள்வதென்றார் 
மற்றி  துணர்கி  லேனென்றேன்  வருந்தே  லுணரும்  வகைநான்கும் 
அற்றி  டென்றா  ரென்னடியவ்  வையர்  மொழிந்த  வருண்மொழியே. 
10
வான்றோய்  பொழிற்சூ  ழொற்றியுளீர்  வருந்தா  தணைவே  னோவென்றேன் 
ஊன்றோ  யுடற்கென்  றார்தெரிய  வுரைப்பீ  ரென்றே  னோவிதுதான் 
சான்றோ  ருங்கண்  மரபோர்ந்து  தரித்த  பெயர்க்குத்  தகாதென்றார் 
ஆன்றோய்  விடங்க  ரென்னடியவ்  வையர்  மொழிந்த  வருண்மொழியே. 
11
தீது  தவிர்க்கு  மொற்றியுளீர்  செல்ல  லறுப்ப  தென்றென்றேன் 
ஈது  நமக்குந்  தெரியுமென்றா  ரிறையா  மோவிங்  கிதுவென்றேன் 
ஓது  மடியர்  மனக்கங்கு  லோட்டு  மியாமே  யுணரென்றார் 
ஆது  தெரியே  னென்னடியவ்  வையர்  மொழிந்த  வருண்மொழியே. 
12
ஒண்கை  மழுவோ  டனலுடையீ  ரொற்றி  நகர்வா  ழுத்தமர்நீர் 
வண்கை  யொருமை  நாதரென்றேன்  வண்கைப்  பன்மை  நாதரென்றார் 
எண்க  ணடங்கா  வதிசயங்கா  ணென்றேன்  பொருளன்  றிதற்கென்றார் 
அண்கொ  ளணங்கே  யென்னடியவ்  வையர்  மொழிந்த  வருண்மொழியே. 
13
ஒருவ  ரெனவா  ழொற்றியுளீ  ருமக்கம்  மனையுண்  டேயென்றேன் 
இருவ  ரொருபே  ருடையவர்காண்  என்றா  ரென்னென்  றேனென்பேர் 
மருவு  மீறற்  றயலகரம்  வயங்கு  மிகர  மானதென்றார் 
அருவு  மிடையா  யென்னடியவ்  வையர்  மொழிந்த  வருண்மொழியே. 
14
பேரா  ரொற்றி  யீரும்மைப்  பெற்றா  ரெவரென்  றேனவர்தம் 
ஏரார்  பெயரின்  முன்பினிரண்  டிரண்ட  கத்தா  ரென்றாரென் 
நேரா  வுரைப்பீ  ரென்றேனீ  நெஞ்ச  நெகிழ்ந்தா  லாமென்றார் 
ஆரார்  சடைய  ரென்னடியவ்  வையர்  மொழிந்த  வருண்மொழியே. 
15
தளிநான்  மறையீ  ரொற்றிநகர்  தழைத்து  வாழ்வீர்  தனிஞான 
வொளிநா  வரைசை  யைந்தெழுத்தா  லுவரி  கடத்தி  னீரென்றேன் 
களிநா  வலனை  யீரெழுத்தாற்  கடலில்  வீழ்த்தி  னேமென்றார் 
அளிநாண்  குழலா  யென்னடியவ்  வையர்  மொழிந்த  வருண்மொழியே. 
16
ஓமூன்  றெழிலீ  ரொற்றியுளீ  ருற்றோர்க்  களிப்பீ  ரோவென்றேன் 
தாமூன்  றென்பார்க்  கயன்மூன்றுந்  தருவே  மென்றா  ரம்மமிகத் 
தேமூன்  றினநும்  மொழியென்றேன்  செவ்வா  யுறுமுன்  முறுவலென்றார் 
ஆமூன்  றறுப்பா  ரென்னடியவ்  வையர்  மொழிந்த  வருண்மொழியே. 
17
மன்னி  வளரு  மொற்றியுளீர்  மடவா  ரிரக்கும்  வகையதுதான் 
முன்னி  லொருதா  வாமென்றேன்  முத்தா  வெனலே  முறையென்றார் 
என்னி  லிதுதா  னையமென்றே  னெவர்க்குந்  தெரியு  மென்றுரைத்தார் 
அன்னி  லோதி  யென்னடியவ்  வையர்  மொழிந்த  வருண்மொழியே  . 
18
வளஞ்சே  ரொற்றி  யீருமது  மாலை  கொடுப்பீ  ரோவென்றேன் 
குளஞ்சேர்  மொழியா  யுனக்கதுமுன்  கொடுத்தே  மென்றா  ரிலையென்றேன் 
உளஞ்சேர்ந்  ததுகா  ணிலையன்றோ  ருருவு  மன்றங்  கருவென்றார் 
அளஞ்சேர்  வடிவா  யென்னடியவ்  வையர்  மொழிந்த  வருண்மொழியே. 
19
வீற்றா  ரொற்றி  யூரமர்ந்தீர்  விளங்கு  மதனன்  மென்மலரே 
மாற்றா  ரென்றே  னிலைகாணெம்  மாலை  முடிமேற்  காணென்றார் 
சாற்றாச்  சலமே  யீதென்றேன்  சடையின்  முடிமே  லன்றென்றார் 
ஆற்றா  விடையா  யென்னடியவ்  வையர்  மொழிந்த  வருண்மொழியே. 
20
புயப்பா  லொற்றி  யீரச்சம்  போமோ  வென்றே  னாமென்றார் 
வயப்பா  வலருக்  கிறையானீர்  வஞ்சிப்  பாவிங்  குரைப்பதென்றேன் 
வியப்பா  நகையப்  பாவெனும்பா  வெண்பா  கலிப்பா  வுடனென்றார் 
அயப்பா  லிடையா  யென்னடியவ்  வையர்  மொழிந்த  வருண்மொழியே. 
21
தண்ணம்  பொழிற்சூ  ழொற்றியுளீர்  சங்கங்  கையிற்சேர்த்  திடுமென்றேன் 
திண்ணம்  பலமேல்  வருங்கையிற்  சேர்த்தோ  முன்னர்  தெரியென்றார் 
வண்ணம்  பலவிம்  மொழிக்கென்றேன்  வாய்ந்தொன்  றெனக்குக்  காட்டென்றார் 
அண்ணஞ்  சுகமே  யென்னடியவ்  வையர்  மொழிந்த  வருண்மொழியே. 
22
உகஞ்சே  ரொற்றி  யூருடையீ  ரொருமா  தவரோ  நீரென்றேன் 
முகஞ்சேர்  வடிவே  லிரண்டுடையாய்  மும்மா  தவர்நா  மென்றுரைத்தார் 
சுகஞ்சேர்ந்  தனவும்  மொழிக்கென்றேன்  றோகா  யுனது  மொழிக்கென்றார் 
அகஞ்சேர்  விழியா  யென்னடியவ்  வையர்  மொழிந்த  வருண்மொழியே. 
23
ஊரா  மொற்றி  யீராசை  யுடையே  னென்றே  னெமக்கலது 
நேரா  வழக்குத்  தொடுக்கின்றாய்  நினக்கே  தென்றார்  நீரெனக்குச் 
சேரா  வணமீ  தென்றேன்முன்  சேர்த்தீ  தெழுதித்  தந்தவர்தாம் 
ஆரா  ரென்றா  ரென்னடியவ்  வையர்  மொழிந்த  வருண்மொழியே. 
24
வருத்தந்  தவரீ  ரொற்றியுளீர்  மனத்த  காத  முண்டென்றேன் 
நிருத்தந்  தருநம்  மடியாரை  நினைக்கின்  றோரைக்  கண்டதுதன் 
றிருத்தந்  தருமுன்  னெழுத்திலக்கஞ்  சேருந்  தூர  மோடுமென்றார் 
அருத்தந்  தெரியே  னென்னடியவ்  வையர்  மொழிந்த  வருண்மொழியே. 
25
மைய  லகற்றீ  ரொற்றியுளீர்  வாவென்  றுரைப்பீ  ரோவென்றேன் 
துய்ய  வதன்மேற்  றலைவைத்துச்  சொன்னாற்  சொல்வே  மிரண்டென்றார் 
உய்ய  வுரைத்தீ  ரெனக்கென்றே  னுலகி  லெவர்க்கு  மாமென்றார் 
ஐய  விடையா  யென்னடியவ்  வையர்  மொழிந்த  வருண்மொழியே. 
26
தாவென்  றருளு  மொற்றியுளீர்  தமியேன்  மோக  தாகமற 
வாவென்  றுரைப்பீ  ரென்றேன்பின்  வருமவ்  வெழுத்திங்  கிலையென்றார் 
ஓவென்  றுயர்தீர்த்  தருளுவதீ  தோவென்  றேன்பொய்  யுரைக்கின்றாய் 
ஆவென்  றுரைத்தா  ரென்னடியவ்  வையர்  மொழிந்த  வருண்மொழியே. 
27
வயலா  ரொற்றி  மேவுபிடி  வாதர்  நும்பே  ரியாதென்றேன் 
இயலா  யிட்ட  நாமமதற்  கிளைய  நாம  மேயென்றார் 
செயலார்  கால  மறிந்தென்னைச்  சேர்வீ  ரென்றேன்  சிரித்துனக்கிங் 
கயலா  ரென்றா  ரென்னடியவ்  வையர்  மொழிந்த  வருண்மொழியே. 
28
என்மே  லருள்கூர்ந்  தொற்றியுளீ  ரென்னை  யணைய  நினைவீரேற் 
பொன்மேல்  வெள்ளி  யாமென்றேன்  பொன்மேற்  பச்சை  யறியென்றார் 
மின்மேற்  சடையீ  ரீதெல்லாம்  விளையாட்  டென்றே  னன்றென்றார் 
அன்மேற்  குழலா  யென்னடியவ்  வையர்  மொழிந்த  வருண்மொழியே. 
29
நாலா  ரணஞ்சூ  ழொற்றியுளீர்  நாகம்  வாங்கி  யென்னென்றேன் 
காலாங்  கிரண்டிற்  கட்டவென்றார்  கலைத்தோல்  வல்லீர்  நீரென்றேன் 
வேலார்  விழிமாத்  தோலோடு  வியாளத்  தோலு  முண்டென்றார் 
ஆலார்  களத்த  ரென்னடியவ்  வையர்  மொழிந்த  வருண்மொழியே. 
30
முடியா  வளஞ்சூ  ழொற்றியுளீர்  முடிமே  லிருந்த  தென்னென்றேன் 
கடியா  வுள்ளங்  கையின்முதலைக்  கடிந்த  தென்றார்  கமலமென 
வடிவார்  கரத்தி  லென்னென்றேன்  வரைந்த  வதனீ  றற்றதென்றார் 
அடியார்க்  கெளியா  ரென்னடியவ்  வையர்  மொழிந்த  வருண்மொழியே. 
31

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com