திருவருட்பா · 39கூடல் விழைதல்

சகம்ஆ றுடையார் அடையா நெறியார்
சடையார் விடையார் தனிஆனார்
உகமா ருடையார் உமைஓர் புடையார்
உதவும் உரிமைத் திருமகனார்
முகம்ஆ றுடையார் முகம்மா றுடையார்
எனவே எனது முன்வந்தார்
அகமா ருடையேன் பதியா தென்றேன்
அலைவாய் என்றார் அஃதென்னே.
1
விதுவாழ் சடையார் விடைமேல் வருவார்
விதிமால் அறியா விமலனார்
மதுவாழ் குழலாள் புடைவாழ் உடையார்
மகனார் குகனார் மயில்ஊர்வார்
முதுவாழ் வடையா தவமே அலைவேன்
முன்வந் திடயான் அறியாதே
புதுவாழ் வுடையார் எனவே மதிபோய்
நின்றேன் அந்தோ பொல்லேனே.
2
காயோ டுடனாய் கனல்கை ஏந்திக்
காடே இடமாக் கணங்கொண்ட
பேயோ டாடிப் பலிதேர் தரும்ஓர்
பித்தப் பெருமான் திருமகனார்
தாயோ டுறழும் தணிகா சலனார்
தகைசேர் மயிலார் தனிவேலார்
வேயோ டுறழ்தோள் பாவையர் முன்என்
வெள்வளை கொண்டார் வினவாமே.
3
பொன்னார் புயனார் புகழும் புகழார்
புலியின் அதளார் புயம்நாலார்
தென்னார் சடையார் கொடிமேல் விடையார்
சிவனார் அருமைத் திருமகனார்
என்நா யகனார் என்னுயிர் போல்வார்
எழின்மா மயிலார் இமையோர்கள்
தந்நா யகனார் தணிகா சலனார்
தனிவந் திவண்மால் தந்தாரே.
4
கல்லால் அடியார் கல்லடி உண்டார்
கண்டார் உலகங் களைவேதம்
செல்லா நெறியார் செல்லுறும் முடியார்
சிவனார் அருமைத் திருமகனார்
எல்லாம் உடையார் தணிகா சலனார்
என்நா யகனார் இயல்வேலார்
நல்லார் இடைஎன் வெள்வளை கொடுபின்
நண்ணார் மயில்மேல் நடந்தாரே.
5
காரூர் சடையார் கனலார் மழுவார்
கலவார் புரமூன் றெரிசெய்தார்
ஆரூர் உடையார் பலிதேர்ந் திடும்எம்
அரனார் அருமைத் திருமகனார்
போரூர் உறைவார் தணிகா சலனார்
புதியார் எனஎன் முனம்வந்தார்
ஏரூர் எமதூ ரினில்வா என்றார்
எளியேன் ஏமாந் திருந்தேனே.
6
கண்ணார் நுதலார் விடமார் களனார்
கரமார் மழுவார் களைகண்ணார்
பெண்ணார் புயனார் அயன்மாற் கரியார்
பெரியார் கைலைப் பெருமானார்
தண்ணார் சடையார் தருமா மகனார்
தணிகா சலனார் தனிவேலார்
எண்ணார் எளியாள் இவள்என் றெனையான்
என்செய் கேனோ இடர்கொண்டே.
7
மழுவார் தருகைப் பெருமான் மகனார்
மயில்வா கனனார் அயில்வேலார்
தழுவார் வினையைத் தணியார் அணியார்
தணிகா சலனார் தம்பாதம்
தொழுவார் அழுவார் விழுவார் எழுவார்
துதியா நிற்பார் அவர்நிற்கப்
புழுவார் உடலோம் பிடும்என் முனர்வந்
தருள்தந் தருளிப் போனாரே.
8
நிருத்தம் பயின்றார் கடல்நஞ் சயின்றார்
நினைவார் தங்கள் நெறிக்கேற்க
அருத்தம் பகர்வார் அருமைப் புதல்வர்
அறுமா முகனார் அயில்வேலார்
திருத்தம் பெறுவார் புகழும் தணிகைத்
திருமா மலையார் ஒருமாதின்
வருத்தம் பாரார் வளையும் தாரார்
வாரார் அவர்தம் மனம்என்னே.
9
பிரமன் தலையில் பலிகொண் டெருதில்
பெயரும் பிச்சைப் பெருமானார்
திரமன் றினிலே நடனம் புரிவார்
சிவனார் மகனார் திறல்வேலார்
தரமன் றலைவான் பொழில்சார் எழில்சேர்
தணிகா சலனார் தமியேன்முன்
வரமன் றவும்மால் கொளநின் றனனால்
மடவார் அலரால் மனநொந்தே.
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com