
வேல்கொளும் கமலக் கையனை எனையாள்
மெய்யனை ஐயனை உலக
மால்கொளும் மனத்தர் அறிவரும் மருந்தை
மாணிக்க மணியினை மயில்மேல்
கால்கொளும் குகனை எந்தையை எனது
கருத்தனை அயன்அரி அறியாச்
சால்கொளும் கடவுள் தனிஅருள் மகனைத்
தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
கண்ணனை அயனை விண்ணவர் கோனைக்
காக்கவைத் திட்டவேற் கரனைப்
பண்ணனை அடியர் பாடலுக் கருளும்
பதியினை மதிகொள்தண் அருளாம்
வண்ணனை எல்லா வண்ணமும் உடைய
வரதன்ஈன் றெடுத்தருள் மகனைத்
தண்ணனை எனது கண்ணனை யவனைத்
தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
என்னுடை உயிரை யான்பெறும் பேற்றை
என்னுடைப் பொருளினை எளியேன்
மன்னுடைக் குருவின் வடிவினை என்கண்
மணியினை அணியினை வரத்தை
மின்னுடைப் பவள வெற்பினில் உதித்த
மிளிர்அருள் தருவினை அடியேன்
தன்னுடைத் தேவைத் தந்தையைத் தாயைத்
தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
பரங்கிரி அமருங் கற்பகத் தருவைப்
பராபரஞ் சுடரினை எளியேற்
கிரங்கிவந் தருளும் ஏரகத் திறையை
எண்ணுதற் கரியபேர் இன்பை
உரங்கிளர் வானோர்க் கொருதனி முதலை
ஒப்பிலா தோங்கிய ஒன்றைத்
தரங்கிளர் அருண கிரிக்கருள் பவனைத்
தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
அரும்பெறல் மணியை அமுதினை அன்பர்
அன்பினுக் கெளிவரும் அரசை
விரும்புமா தவத்தோர் உள்ளகத் தொளிரும்
விளக்கினை அளக்கரும் பொருளைக்
கரும்பினை என்னுட் கனிந்திடும் கனியை
முனிந்திடா தருள்அருட் கடலைத்
தரும்பர சிவத்துள் கிளர்ந்தொளிர் ஒளியைத்
தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
மாரனை எரித்தோன் மகிழ்திரு மகனை
வாகையம் புயத்தனை வடிவேல்
தீரனை அழியாச் சீரனை ஞானச்
செல்வனை வல்வினை நெஞ்சச்
சூரனைத் தடிந்த வீரனை அழியாச்
சுகத்தனைத் தேன்துளி கடப்பந்
தாரனைக் குகன்என் பேருடை யவனைத்
தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
வேதனைச் சிறைக்குள் வேதனை படச்செய்
விமலனை அமலனை அற்பர்
போதனைக் கடங்காப் போதனை ஐந்தாம்
பூதனை மாதவர் புகழும்
பாதனை உமையாள் பாலனை எங்கள்
பரமனை மகிழ்விக்கும் பரனைத்
தாதனை உயிர்க்குள் உயிரனை யவனைத்
தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
குழகனை அழியாக் குமரனை அட்ட
குணத்தனைக் குறித்திடல் அறிதாம்
அழகனைச் செந்தில் அப்பனை மலைதோ
றாடல்வாழ் அண்ணலைத் தேவர்
கழகனைத் தண்டைக் காலனைப் பிணிக்கோர்
காலனை வேலனை மனதில்
சழகிலார்க் கருளும் சாமிநா தனைத்தென்
தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
முத்தனை முத்திக் கொருதனி வித்தை
முதல்வனை முருகனை முக்கண்
பித்தனை அத்தன் எனக்கொளும் செல்வப்
பிள்ளையைப் பெரியவர் உளஞ்சேர்
சுத்தனைப் பத்தி வலைப்படும் அவனைத்
துரியனைத் துரியமும் கடந்த
சத்தனை நித்த நின்மலச் சுடரைத்
தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
வள்அயில் கரங்கொள் வள்ளலை இரவில்
வள்ளிநா யகிதனைக் கவர்ந்த
கள்ளனை அடியர் உள்ளகத் தவனைக்
கருத்தனைக் கருதும்ஆ னந்த
வெள்ளம்நின் றாட அருள்குரு பரனை
விருப்புறு பொருப்பனை வினையைத்
தள்ளவந் தருள்செய் திடுந்தயா நிதியைத்
தணிகையில் கண்டிறைஞ் சுவனே.



