திருவருட்பா  41. நாள்எண்ணி வருந்தல்

இன்னும்  எத்தனை  நாள்செலும்  ஏழையேன்  இடர்க்கடல்  விடுத்தேற 
மின்னும்  வேற்படை  மிளிர்தரும்  கைத்தல  வித்தகப்  பெருமானே 
துன்னும்  நற்றணி  காசலத்  தமர்ந்தருள்  தோன்றலே  மயில்ஏறி 
மன்னும்  உத்தம  வள்ளலே  நின்திரு  மனக்கருத்  தறியேனே. 
1
ஈறி  லாதநின்  அருள்பெற  எனக்கினும்  எத்தனை  நாட்செல்லும் 
மாறி  லாதவர்  மனத்தொளிர்  சோதியே  மயில்மிசை  வரும்வாழ்வே 
து‘றி  லாவளச்  சோலைசூழ்  தணிகைவாழ்  சுத்தசின்  மயத்தேவே 
ஊறி  லாப்பெரு  நிலையஆ  னந்தமே  ஒப்பிலான்  அருட்பேறே. 
2
கூழை  மாமுகில்  அனையவர்  முலைத்தலைக்  குளித்துழன்  றலைகின்ற 
ஏழை  நெஞ்சினேன்  எத்தனை  நாள்செல்லும்  இடர்க்கடல்  விடுத்தேற 
மாழை  மேனியன்  வழுத்துமா  ணிக்கமே  வாழ்த்துவா  ரவர்பொல்லா 
ஊழை  நீக்கிநல்  அருள்தருந்  தெய்வமே  உத்தமச்  சுகவாழ்வே. 
3
ஐய  இன்னும்நான்  எத்தனை  நாள்செலும்  அல்லல்விட்  டருள்மேவத் 
துய்ய  நன்னெறி  மன்னிய  அடியர்தம்  துயர்தவிர்த்  தருள்வோனே 
வெய்ய  நெஞ்சினர்  எட்டொணா  மெய்யனே  வேல்கொளும்  கரத்தோனே 
செய்ய  மேனிஎஞ்  சிவபிரான்  பெற்றநற்  செல்வனே  திறலோனே. 
4
பாவி  யேன்  இன்னும்  எத்தனை  நாள்செலும்  பருவரல்  விடுத்துய்யக் 
கூவி  யேஅன்பர்க்  கருள்தரும்  வள்ளலே  குணப்பெருங்  குன்றேஎன் 
ஆவி  யேஎனை  ஆள்குரு  வடிவமே  ஆனந்தப்  பெருவாழ்வே 
வாவி  ஏர்தரும்  தணிகைமா  மலைமிசை  மன்னிய  அருள்தேனே. 
5
எளிய  னேன்இன்னும்  எத்தனை  நாள்செலும்  இடர்க்கடல்  விடுத்தேற 
ஒளிஅ  னேகமாய்த்  திரண்டிடும்  சிற்பர  உருவமே  உருவில்லா 
வெளிய  தாகிய  வத்துவே  முத்தியின்  மெய்ப்பயன்  தருவித்தே 
அளிய  தாகிய  நெஞ்சினர்க்  கருள்தரும்  ஆறுமா  முகத்தேவே. 
6
தொண்ட  னேன்இன்னும்  எத்தனை  நாள்செலும்  துயர்க்கடல்  விடுத்தேற 
அண்ட  னேஅண்டர்க்  கருள்தரும்  பரசிவன்  அருளிய  பெருவாழ்வே 
கண்ட  னேகர்வந்  தனைசெய  அசுரனைக்  களைந்தருள்  களைகண்ணே 
விண்ட  னேர்புகுஞ்  சிகரிசூழ்  தணிகையில்  விளங்கிய  வேலோனே. 
7
வீண  னேன்இன்னும்  எத்தனை  நாள்செல்லும்  வெந்துயர்க்  கடல்நீந்தக் 
காண  வானவர்க்  கரும்பெருந்  தலைவனே  கருணையங்  கண்ணானே 
தூண  நேர்புயச்  சுந்தர  வடிவனே  துளக்கிலார்க்  கருள்ஈயும் 
ஏண  னேஎனை  ஏன்றுகொள்  தேசிக  இறைவனே  இயலோனே. 
8
கடைய  னேன்இன்னும்  எத்தனை  நாள்செலும்  கடுந்துயர்க்  கடல்நீந்த 
விடையின்  ஏறிய  சிவபிரான்  பெற்றருள்  வியன்திரு  மகப்பேறே 
உடைய  நாயகிக்  கொருபெருஞ்  செல்வமே  உலகெலாம்  அளிப்போனே 
அடைய  நின்றவர்க்  கருள்செயுந்  தணிகைவாழ்  ஆனந்தத்  தெளிதேனே. 
9
பேய  னேன்இன்னும்  எத்தனை  நாள்செலும்  பெருந்துயர்க்  கடல்நீந்த 
மாய  னேமுதல்  வானவர்  தமக்கருள்  மணிமிடற்  றிறையோர்க்குச் 
சேய  னேஅகந்  தெளிந்தவர்க்  கினியனே  செல்வனே  எனைக்காக்குந் 
தாய  னேஎன்றன்  சற்குரு  நாதனே  தணிகைமா  மலையானே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com