
மூடர்கள் தமக்குள் முற்படுங் கொடிய
முறியனேன் தனக்குநின் அடியாம்
ஏடவிழ் கமலத் திருநற வருந்த
என்றுகொல் அருள்புரிந் திடுவாய்
ஆடர வணிந்தே அம்பலத் தாடும்
ஐயருக் கொருதவப் பேறே
கோடணி தருக்கள் குலவும்நற் றணிகைக்
குன்றமர்ந் திடுகுணக் குன்றே
கற்றவர் புகழ்நின் திருவடி மலரைக்
கடையனேன் முடிமிசை அமர்த்தி
உற்றஇவ் வுலக மயக்கற மெய்மை
உணர்த்தும்நாள் எந்தநாள் அறியேன்
நற்றவர் உணரும் பரசிவத் தெழுந்த
நல்அருட் சோதியே நவைதீர்
கொற்றவேல் உகந்த குமரனே தணிகைக்
குன்றமர்ந் திடுகுணக் குன்றே.
ஞாலவாழ் வெனும்புன் மலமிசைந் துழலும்
நாயினும் கடையஇந் நாய்க்குன்
சீலவாழ் வளிக்கும் திருவடிக் கமலத்
தேன்தரு நாளும்ஒன் றுண்டோ
ஆலவாய் உகந்த ஒருசிவ தருவில்
அருள்பழுத் தளிந்தசெங் கனியே
கோலவா னவர்கள் புகழ்திருத் தணிகைக்
குன்றமர்ந் திடுகுணக் குன்றே.
பவம்எனுங் கடற்குள் வீழ்ந்துழன் றேங்கும்
பாவியேன் தன்முகம் பார்த்திங்
கெவையும்நா டாமல் என்னடி நிழற்கீழ்
இருந்திடென் றுரைப்பதெந் நாளோ
சிவம்எனும் தருமக் கடல்அகத் தெழுந்த
தெள்ளிய அமுதமே தேனே
குவிமுலை வல்லிக் கொடியொடுந் தணிகைக்
குன்றமர்ந் திடுகுணக் குன்றே.
முலைமுகங் காட்டி மயக்கிடும் கொடியார்
முன்புழன் றேங்கும்இவ் எளியேன்
நிலைமுகங் காட்டும் நின்திருப் பாத
நீழல்வந் தடையும்நாள் என்றோ
மலைமுகம் குழைய வளைத்திடும் தெய்வ
மணிமகிழ் கண்ணினுள் மணியே
கொலைமுகம் செல்லார்க் கருள்தருந் தணிகைக்
குன்றமர்ந் திடுகுணக் குன்றே.
வருபயன் அறியா துழன்றிடும் ஏழை
மதியினேன் உய்ந்திடும் வண்ணம்
ஒருவரும் நினது திருவடிப் புகழை
உன்னும்நாள் எந்தநாள் அறியேன்
அருவுரு ஆகும் சிவபிரான் அளித்த
அரும்பெறல் செல்வமே அமுதே
குருவுரு ஆகி அருள்தரும் தணிகைக்
குன்றமர்ந் திடுகுணக் குன்றே.
அழிதரும் உலக வாழ்வினை மெய்யென்
றலைந்திடும் பாவியேன் இயற்றும்
பழிதரும் பிழையை எண்ணுறேல் இன்று
பாதுகாத் தளிப்பதுன் பரமே
மொழிதரும் முக்கட் செங்கரும் பீன்ற
முத்தமே முக்தியின் முதலே
கொழிதரும் அருவி பொழிதருந் தணிகைக்
குன்றமர்ந் திடுகுணக் குன்றே.
நின்நிலை அறியா வஞ்சகர் இடத்தில்
நின்றுநின் றலைதரும் எளியேன்
தன்நிலை அறிந்தும் ஐயகோ இன்னும்
தயைஇலா திருந்தனை என்னே
பொன்நிலைப் பொதுவில் நடஞ்செயும் பவளப்
பொருப்பினுள் மலர்ந்திடும் பூவே
கொல்நிலை வேல்கைக் கொளும்திருத் தணிகைக்
குன்றமர்ந் திடுகுணக் குன்றே.
பாடிநின் திருச்சீர் புகழ்ந்திடாக் கொடிய
பதகர்பால் நாள்தொறும் சென்றே
வாடிநின் றேங்கும் ஏழையேன் நெஞ்ச
வாட்டம்இங் கறிந்திலை என்னே
ஆடிநீ றாடி அருள்செயும் பரமன்
அகம்மகிழ் அரும்பெறல் மருந்தே
கோடிலங் குயர்வான் அணிதிருத் தணிகைக்
குன்றமர்ந் திடுகுணக் குன்றே.
வன்பொடு செருக்கும் வஞ்சர்பால் அலையா
வண்ணம்இன் றருள்செயாய் என்னில்
துன்பொடு மெலிவேன் நின்திரு மலர்த்தாள்
துணைஅன்றித் துணைஒன்றும் காணேன்
அன்பொடும் பரமன் உமைகையில் கொடுக்க
அகமகிழ்ந் தணைக்கும்ஆர் அமுதே
கொன்பெறும் இலைவேல் கரத்தொடும் தணிகைக்
குன்றமர்ந் திடுகுணக் குன்றே.



