திருவருட்பா  102. ஆனந்த களிப்பு

நல்ல  மருந்திம்  மருந்து  -  சுகம் 
நல்கும்  வைத்திய  நாத  மருந்து. 
1
அருள்வடி  வான  மருந்து  -  நம்முள் 
அற்புத  மாக  அமர்ந்த  மருந்து 
இருளற  வோங்கும்  மருந்து  -  அன்பர்க் 
கின்புரு  வாக  இருந்த  மருந்து.  -  நல்ல 
2
சஞ்சலந்  தீர்க்கும்  மருந்து  -  எங்குந் 
தானோதா  னாகித்  தழைக்கும்  மருந்து 
அஞ்சலென்  றாளும்  மருந்து  -  சச்சி 
தானந்த  மாக  அமர்ந்த  மருந்து.  -  நல்ல 
3
வித்தக  மான  மருந்து  -  சதுர் 
வேத  முடிவில்  விளங்கு  மருந்து 
தத்துவா  தீத  மருந்து  -  என்னைத் 
தானாக்கிக்  கொண்ட  தயாள  மருந்து.  -  நல்ல 
4
பிறப்பை  யொழிக்கு  மருந்து  -  யார்க்கும் 
பேசப்  படாத  பெரிய  மருந்து 
இறப்பைத்  தவிர்க்கும்  மருந்து  -  என்னுள் 
என்று  மதுரித்  தினிக்கு  மருந்து.  -  நல்ல 
5
நானது  வாகு  மருந்து  -  பர 
ஞான  வெளியில்  நடிக்கு  மருந்து 
மோந  வடிவா  மருந்து  -  சீவன் 
முத்த  ருளத்தே  முடிக்கு  மருந்து.  -  நல்ல 
6
புத்தமு  தாகு  மருந்து  -  பார்த்த 
போதே  பிணிகளைப்  போக்கு  மருந்து 
பத்த  ரருந்து  மருந்து  -  அநு 
பானமுந்  தானாம்  பரம  மருந்து.  -  நல்ல 
7
மாலயன்  தேடு  மருந்து  -  முன்ன 
மார்க்கண்ட  ரைக்காக்க  வந்த  மருந்து 
காலனைச்  சாய்த்த  மருந்து  -  தேவர் 
காணுங்  கனவினுங்  காணா  மருந்து.  -  நல்ல 
8
தற்பர  யோக  மருந்து  -  உப 
சாந்த  ருளத்திடைச்  சார்ந்த  மருந்து 
சிற்பர  யோக  மருந்து  -  உயர் 
தேவரெல்  லாந்தொழுந்  தெய்வ  மருந்து.  -  நல்ல 
9
அம்பலத்  தாடு  மருந்து  -  பர 
மாநந்த  வெள்ளத்  தழுத்து  மருந்து 
எம்பல  மாகு  மருந்து  -  வேளூர் 
என்னுந்  தலத்தி  லிருக்கு  மருந்து.  -  நல்ல 
10
சேதப்ப  டாத  மருந்து  -  உண்டால் 
தேன்போ  லினிக்குந்  தெவிட்டா  மருந்து 
பேதப்ப  டாத  மருந்து  -  மலைப் 
பெண்ணிடங்  கொண்ட  பெரிய  மருந்து.  -  நல்ல 
11
ஆர்க்கு  மரிதா  மருந்து  -  தானே 
ஆதி  யநாதியு  மான  மருந்து 
சேர்க்கும்  புநித  மருந்து  -  தன்னைத் 
தேடுவோர்  தங்களை  நாடு  மருந்து.  -  நல்ல 
12
புண்ணியர்க்  கான  மருந்து  -  பரி 
பூரண  மாகப்  பொருந்து  மருந்து 
எண்ணிய  வின்ப  மருந்து  -  எம 
தெண்ணமெல்  லாமுடித்  திட்ட  மருந்து.  -  நல்ல 
13
பால்வண்ண  மாகு  மருந்து  -  அதில் 
பச்சை  நிறமும்  படர்ந்த  மருந்து 
நூல்வண்ண  நாடு  மருந்து  -  உள்ளே 
நோக்குகின்  றோர்களை  நோக்கு  மருந்து.  -  நல்ல 
14
பார்க்கப்  பசிபோ  மருந்து  -  தன்னைப் 
பாராத  வர்களைச்  சேரா  மருந்து 
கூர்க்கத்  தெரிந்த  மருந்து  -  அநு 
கூல  மருந்தென்று  கொண்ட  மருந்து.  -  நல்ல 
15
கோதிலா  தோங்கு  மருந்து  -  அன்பர் 
கொள்ளைகொண்  டுண்ணக்  குலாவு  மருந்து 
மாதொரு  பாக  மருந்து  -  என்னை 
வாழ்வித்த  என்கண்  மணியா  மருந்து.  -  நல்ல 
16
ஏக  வுருவா  மருந்து  -  மிக்க 
ஏழைக  ளுக்கும்  இரங்கு  மருந்து 
சோகந்  தவிர்க்கு  மருந்து  -  பரஞ் 
சோதியென்  றன்பர்  துதிக்கு  மருந்து.  -  நல்ல 
17
கோமளங்  கூடு  மருந்து  -  நலங் 
கொடுக்கத்  துசங்கட்டிக்  கொண்ட  மருந்து 
நாமள  வாத  மருந்து  -  நம்மை 
நாமறி  யும்படி  நண்ணு  மருந்து.  -  நல்ல 
18
செல்வந்  தழைக்கு  மருந்து  -  என்றுந் 
தீரா  வினையெலாந்  தீர்த்த  மருந்து 
நல்வந்  தனைகொள்  மருந்து  -  பர 
நாதாந்த  வீட்டினுள்  நண்ணு  மருந்து.  -  நல்ல 
19
வாய்பிடி  யாத  மருந்து  -  மத 
வாதமும்  பித்தமு  மாய்க்கு  மருந்து 
நோய்பொடி  யாக்கு  மருந்து  -  அன்பர் 
நோக்கிய  நோக்கினுள்  நோக்கு  மருந்து.  -  நல்ல 
20
பெண்ணாசை  தீர்க்கு  மருந்து  -  பொருட் 
பேராசை  யெல்லாம்  பிளக்கு  மருந்து 
மண்ணாசை  தீர்க்கு  மருந்து  -  எல்லாம் 
வல்ல  மருந்தென்று  வாழ்த்து  மருந்து.  -  நல்ல 
21
என்றுங்  கெடாத  மருந்து  -  வரும் 
எல்லாப்  பிணிக்கு  மிதுவே  மருந்து 
துன்றுஞ்  சிவோக  மருந்து  -  நம்மைச் 
சூழ்ந்திரு  மைக்குந்  துணையா  மருந்து.  -  நல்ல 
22
கண்ணொளி  காட்டு  மருந்து  -  அம்மை 
கண்டு  கலந்து  களிக்கு  மருந்து 
விண்ணொளி  யாரு  மருந்து  -  பர 
வீடு  தருங்கங்கை  வேணி  மருந்து.  -  நல்ல 
23
காயாம்பூ  வண்ண  மருந்து  -  ஒரு 
கஞ்ச  மலர்மிசைக்  காணு  மருந்து 
தாயாங்  கருணை  மருந்து  -  சிற் 
சதாசிவ  மானமெஞ்  ஞாந  மருந்து.  -  நல்ல 
24
அளவைக்  கடந்த  மருந்து  -  யார்க்கும் 
அருமை  யருமை  யருமை  மருந்து 
உளவிற்  கிடைக்கு  மருந்து  -  ஒன்றும் 
ஒப்புயர்  வில்லா  துயர்ந்த  மருந்து.  -  நல்ல 
25
தன்மய  மாகு  மருந்து  -  சிவ 
சாதனர்  நெஞ்சில்  தழைக்கு  மருந்து 
சின்மய  ஜோதி  மருந்து  -  அட்ட 
சித்தியு  முத்தியுஞ்  சேர்க்கு  மருந்து.  -  நல்ல 
26
மறந்தா  லொளிக்கு  மருந்து  -  தன்னை 
மறவா  தவருள்  வழங்கு  மருந்து 
இறந்தா  லெழுப்பு  மருந்து  -  எனக் 
கென்றுந்  துணையா  யிருக்கு  மருந்து.  -  நல்ல 
27
கரும்பி  லினிக்கு  மருந்து  -  கடுங் 
கண்டகர்க்  கெல்லாங்  கசக்கு  மருந்து 
இரும்பைக்  குழைக்கு  மருந்து  -  பே 
ரின்ப  வெள்ளத்தே  யிழுக்கு  மருந்து.  -  நல்ல 
28
அணிமணி  கண்ட  மருந்து  -  அருள் 
ஆநந்த  சுத்த  வகண்ட  மருந்து 
பிணிதவி  ரின்ப  மருந்து  -  யார்க்கும் 
பேசா  மருந்தென்று  பேசு  மருந்து.  -  நல்ல 
29
மூவர்க்  கரிய  மருந்து  -  செல்வ 
முத்துக்  குமாரனை  யீன்ற  மருந்து 
நாவிற்  கினிய  மருந்து  -  தையல் 
நாயகி  கண்டு  தழுவு  மருந்து. 
30
நல்ல  மருந்திம்  மருந்து  -  சுகம் 
நல்கும்  வைத்திய  நாத  மருந்து. 
31

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com