திருவருட்பா  72. சன்மார்க்க நிலை

சித்திபுரத்தே  தினந்தோறும்  சீர்கொளருள் 
சத்திவிழா  நீடித்  தழைத்தோங்க  -  எத்திசையில் 
உள்ளவரும்  வந்தே  உவகை  உறுகமதத் 
துள்ளல்  ஒழிக  தொலைந்து. 
1
ஒன்றே  சிவம்என்  றுணர்ந்திவ்  வுலகமெலாம் 
நன்றே  ஒருமையுற்று  நண்ணியே  -  மன்றே 
நடம்புரியும்  பாத  நளினமலர்க்  குள்ளம் 
இடம்புரிக  வாழ்க  இசைந்து. 
2
சிற்சபையும்  பொற்சபையும்  சித்தி  விளக்கத்தால் 
நற்சகமேல்  நீடூழி  நண்ணிடுக  -  சற்சபையோர் 
போற்றிவரம்  பெற்றுவகை  பூரிக்க  வாழ்ந்திடுக 
நாற்றிசையும்  வாழ்க  நயந்து. 
3
அச்சந்  தவிர்த்தே  அருளிற்  செலுத்துகின்ற 
விச்சை  அரசே  விளங்கிடுக  -  நச்சரவம் 
ஆதிக்  கொடியஉயிர்  அத்தனையும்  போய்ஒழிக 
நீதிக்  கொடிவிளங்க  நீண்டு. 
4
கருணைஇலா  ஆட்சி  கடுகி  ஒழிக 
அருள்நயந்த  நன்மார்க்கர்  ஆள்க  -  தெருள்நயந்த 
நல்லோர்  நினைத்த  நலம்பெறுக  நன்றுநினைத் 
தெல்லோரும்  வாழ்க  இசைந்து. 
5
புல்லொழுக்கம்  எல்லாம்  புணரியிடைப்  போய்ஒழிக 
நல்லொழுக்கம்  ஒன்றே  நலம்பெறுக  -  இல்லொழுக்கில் 
செத்தார்கள்  எல்லாம்  திரும்ப  எழுந்துமனம் 
ஒத்தாராய்  வாழ்க  உவந்து. 
6
செத்தார்  எழுக  சிவமே  பொருள்என்றே 
இத்தா  ரணியில்  இருந்தொளிர்க  -  சுத்தசிவ 
சன்மார்க்கம்  ஒன்றே  தழைக்க  தயவறியாத் 
துன்மார்க்கம்  போக  தொலைந்து. 
7
செத்தவர்கள்  எல்லாம்  திரும்ப  எழுந்துவரச் 
சித்தம்வைத்துச்  செய்கின்ற  சித்தியனே  -  சுத்தசிவ 
சன்மார்க்க  சங்கத்  தலைவனே  நிற்போற்றும் 
என்மார்க்கம்  நின்மார்க்க  மே. 
8
நல்லாரும்  என்னை  நயந்தாரும்  நன்மைசொல 
வல்லாரும்  என்னை  வளர்த்தாரும்  -  எல்லாரும் 
நீஎன்  றிருக்கின்றேன்  நின்மலனே  நீபெற்ற 
சேய்என்  றிருக்கின்றேன்  சேர்ந்து. 
9
ஆடஎடுத்  தான்என்  றறைகின்றீர்  என்தலைமேல் 
சூடஎடுத்  தான்என்று  சொல்கின்றேன்  -  நாடறிய 
இவ்வழக்கை  யார்பால்  இசைத்தறுத்துக்  கொள்கிற்பாம் 
கவ்வைஅற்ற  அம்பலத்தான்  கால். 
10
நோவாது  நோன்பெனைப்போல்  நோற்றவரும்  எஞ்ஞான்றும் 
சாவா  வரம்எனைப்போல்  சார்ந்தவரும்  -  தேவாநின் 
பேரருளை  என்போலப்  பெற்றவரும்  எவ்வுலகில் 
யார்உளர்நீ  சற்றே  அறை. 
11

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com