திருவருட்பா  71. அந்தோ பத்து

நானந்த  மடையாதெந்  நாளினும்உள்  ளவனாகி  நடிக்கும்  வண்ணம் 
ஆனந்த  நடம்புரிவான்  ஆனந்த  அமுதளித்தான்  அந்தோ  அந்தோ. 
1
சாதிமதம்  சமயமுதற்  சங்கற்ப  விகற்பம்எலாம்  தவிர்ந்து  போக 
ஆதிநடம்  புரிகின்றான்  அருட்சோதி  எனக்களித்தான்  அந்தோ  அந்தோ. 
2
துரியபதம்  அடைந்தபெருஞ்  சுத்தர்களும்  முத்தர்களும்  துணிந்து  சொல்லற் 
கரியபதம்  எனக்களித்தான்  அம்பலத்தில்  ஆடுகின்றான்  அந்தோ  அந்தோ. 
3
மருட்பெருஞ்சோ  தனைஎனது  மட்டுமிலா  வணங்கருணை  வைத்தே  மன்றில் 
அருட்பெருஞ்சோ  திப்பெருமான்  அருளமுதம்  எனக்களித்தான்  அந்தோ  அந்தோ. 
4
துன்பமெலாம்  ஒருகணத்தில்  தொலைத்தருளி  எந்நாளும்  சுகத்தில்  ஓங்க 
அன்புடையான்  அம்பலத்தான்  அருட்சோதி  எனக்களித்தான்  அந்தோ  அந்தோ. 
5
பந்தமெலாம்  தவிர்த்தருளிப்  பதந்தருயோ  காந்தமுதல்  பகரா  நின்ற 
அந்தமெலாம்  கடந்திடச்செய்  தருளமுதம்  எனக்களித்தான்  அந்தோ  அந்தோ. 
6
பேராலும்  அறிவாலும்  பெரியரெனச்  சிறப்பாகப்  பேச  நின்றோர் 
ஆராலும்  பெறலரிய  தியாததனைப்  பெறுவித்தான்  அந்தோ  அந்தோ. 
7
தினைத்தனையும்  அறிவறியாச்  சிறியனென  நினையாமல்  சித்தி  யான 
அனைத்துமென்றன்  வசமாக்கி  அருளமுதம்  எனக்களித்தான்  அந்தோ  அந்தோ. 
8
பொதுவாகிப்  பொதுவில்நடம்  புரிகின்ற  பேரின்பப்  பொருள்தான்  யாதோ 
அதுநானாய்  நான்அதுவாய்  அத்துவிதம்  ஆகின்றேன்  அந்தோ  அந்தோ. 
9
மருள்வடிவே  எஞ்ஞான்றும்  எவ்விடத்தும்  எதனாலு  மாய்வி  லாத 
அருள்வடிவாய்  இம்மையிலே  அடைந்திடப்பெற்  றாடுகின்றேன்  அந்தோ  அந்தோ. 
10
எக்கரையும்  காணாதே  இருட்கடலில்  கிடந்தேனை  எடுத்தாட்  கொண்டு 
அக்கரைசேர்த்  தருளெனுமோர்  சர்க்கரையும்  எனக்களித்தான்  அந்தோ  அந்தோ. 
11

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com