திருவருட்பா  73. சிவானந்தப் பற்று

வேதமும்  வேதத்தின்  அந்தமும்  போற்ற  விளங்கியநின் 
பாதமும்  மாமுடி  யும்கண்டு  கொள்ளும்  படிஎனக்கே 
போதமும்  போதத்  தருள்அமு  தும்தந்த  புண்ணியனே 
நாதமும்  நாத  முடியும்  கடந்த  நடத்தவனே. 
1
வண்ணப்பொன்  னம்பல  வாழ்வேஎன்  கண்ணினுள்  மாமணியே 
சுண்ணப்பொன்  நீற்றொளி  ஓங்கிய  சோதிச்  சுகப்பொருளே 
எண்ணப்ப  யின்றஎன்  எண்ணம்  எலாம்முன்னர்  ஈகஇதென் 
விண்ணப்பம்  ஏற்று  வருவாய்என்  பால்விரைந்  தேவிரைந்தே. 
2
சிற்சபை  அப்பனைக்  கண்டுகொண்  டேன்அருள்  தெள்ளமுதம் 
சற்சபை  உள்ளம்  தழைக்கஉண்  டேன்உண்மை  தான்அறிந்த 
நற்சபைச்  சித்திகள்  எல்லாம்என்  கைவசம்  நண்ணப்பெற்றேன் 
பொற்சபை  ஓங்கப்  புரிந்தாடு  தற்குப்  புகுந்தனனே. 
3
வரையற்ற  சீர்ப்பெரு  வாழ்வுதந்  தென்மனம்  மன்னிஎன்றும் 
புரையற்ற  மெய்ந்நிலை  ஏற்றிமெய்ஞ்  ஞானப்  பொதுவினிடைத் 
திரையற்ற  காட்சி  அளித்தின்  னமுதத்  தெளிவருளி 
நரையற்று  மூப்பற்  றிறப்பற்  றிருக்கவும்  நல்கியதே. 
4
தாயாகி  என்உயிர்த்  தந்தையும்  ஆகிஎன்  சற்குருவாய்த் 
தேயாப்  பெரும்பதம்  ஆகிஎன்  சத்தியத்  தெய்வமுமாய் 
வாயாரப்  பாடும்நல்  வாக்களித்  தென்உளம்  மன்னுகின்ற 
தூயா  திருநட  ராயாசிற்  றம்பலச்  சோதியனே. 
5
ஆதியும்  அந்தமும்  இல்லாத்  தனிச்சுட  ராகிஇன்ப 
நீதியும்  நீர்மையும்  ஓங்கப்  பொதுவில்  நிருத்தமிடும் 
சோதியும்  வேதியும்  நான்அறிந்  தேன்இச்  செகதலத்தில் 
சாதியும்  பேதச்  சமயமும்  நீங்கித்  தனித்தனனே. 
6
தன்னே  ரிலாத  தலைவாசிற்  றம்பலம்  தன்னில்என்னை 
இன்னே  அடைகுவித்  தின்பருள்  வாய்இது  வேதருணம் 
அன்னே  எனைப்பெற்ற  அப்பாஎன்  றுன்னை  அடிக்கடிக்கே 
சொன்னேன்முன்  சொல்லுகின்  றேன்பிற  ஏதுந்  துணிந்திலனே. 
7
தேகாதி  மூன்றும்உன்  பாற்கொடுத்  தேன்நின்  திருவடிக்கே 
மோகா  திபன்என்  றுலகவர்  தூற்ற  முயலுகின்றேன் 
நாகா  திபரும்  வியந்திட  என்எதிர்  நண்ணிஎன்றும் 
சாகா  வரந்தந்து  சன்மார்க்க  நீதியும்  சாற்றுகவே. 
8
கற்றேன்சிற்  றம்பலக்  கல்வியைக்  கற்றுக்  கருணைநெறி 
உற்றேன்எக்  காலமும்  சாகாமல்  ஓங்கும்  ஒளிவடிவம் 
பெற்றேன்  உயர்நிலை  பெற்றேன்  உலகில்  பிறநிலையைப் 
பற்றேன்  சிவானந்தப்  பற்றேஎன்  பற்றெனப்  பற்றினனே. 
9
தீமைகள்  யாவும்  தொலைத்துவிட்  டேன்இத்  தினந்தொடங்கிச் 
சேமநல்  இன்பச்  செயலே  விளங்கமெய்ச்  சித்திஎலாம் 
காமமுற்  றென்னைக்  கலந்துகொண்  டாடக்  கருணைநடத் 
தாமன்என்  உள்ளமும்  சாரவும்  பெற்றனன்  சத்தியமே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com