திருவருட்பா  131. சின்னம் பிடி

அம்பலவர்  வந்தார்என்று  சின்னம்  பிடி 
அற்புதம்செய்  கின்றார்என்று  சின்னம்  பிடி 
செம்பலன்  அளித்தார்என்று  சின்னம்  பிடி 
சித்திநிலை  பெற்றதென்று  சின்னம்  பிடி. 
1
சிற்சபையைக்  கண்டோம்என்று  சின்னம்  பிடி 
சித்திகள்செய்  கின்றோம்என்று  சின்னம்  பிடி 
பொற்சபை  புகுந்தோம்என்று  சின்னம்  பிடி 
புந்திமகிழ்  கின்றோம்என்று  சின்னம்  பிடி. 
2
ஞானசித்திபுரம்என்று  சின்னம்  பிடி 
நாடகம்செய்  இடம்என்று  சின்னம்  பிடி 
ஆனசித்தி  செய்வோம்என்று  சின்னம்  பிடி 
அருட்சோதி  பெற்றோம்என்று  சின்னம்  பிடி. 
3
கொடிகட்டிக்கொண்டோம்என்று  சின்னம்  பிடி 
கூத்தாடு  கின்றோம்என்று  சின்னம்  பிடி 
அடிமுடியைக்  கண்டோம்என்று  சின்னம்  பிடி 
அருளமுதம்  உண்டோம்என்று  சின்னம்  பிடி. 
4
அப்பர்வரு  கின்றார்என்று  சின்னம்  பிடி 
அற்புதம்செய்  வதற்கென்று  சின்னம்  பிடி 
செப்பநிலை  பெற்றதென்று  சின்னம்  பிடி 
சித்திபுரம்இடமென்று  சின்னம்  பிடி. 
5
தானேநான்  ஆனேன்என்று  சின்னம்  பிடி 
சத்தியம்சத்  தியம்என்று  சின்னம்  பிடி 
ஊனே  புகுந்ததென்று  சின்னம்  பிடி 
ஒளிவண்ணம்  ஆனதென்று  சின்னம்  பிடி. 
6
வேகாதகால்உணர்ந்து  சின்னம்  பிடி 
வேகாத  நடுத்தெரிந்து  சின்னம்  பிடி 
சாகாததலைஅறிந்து  சின்னம்  பிடி 
சாகாத  கல்விகற்றுச்  சின்னம்  பிடி. 
7
மீதான  நிலைஏறிச்  சின்னம்  பிடி 
வெட்டவெளி  நடுநின்று  சின்னம்  பிடி 
வேதாக  மம்கடந்து  சின்னம்  பிடி 
வேதாந்தச்  சித்தாந்த  சின்னம்  பிடி. 
8
பன்மார்க்க  மும்கடந்து  சின்னம்  பிடி 
பன்னிரண்டின்  மீதுநின்று  சின்னம்  பிடி 
சன்மார்க்கம்  மார்க்கம்என்று  சின்னம்  பிடி 
சத்தியம்செய்  கின்றோம்என்று  சின்னம்  பிடி. 
9
சித்தாடு  கின்றார்என்று  சின்னம்  பிடி 
செத்தார்  எழுவார்என்று  சின்னம்  பிடி 
இத்தா  ரணியில்என்று  சின்னம்  பிடி 
இதுவே  தருணம்என்று  சின்னம்  பிடி. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com