திருவருட்பா  130. ஊதூது சங்கே

கைவிட  மாட்டான்என்று  ஊதூது  சங்கே 
கனக  சபையான்என்று  ஊதூது  சங்கே 
பொய்விடச்  செய்தான்என்று  ஊதூது  சங்கே 
பூசைப  லித்ததென்று  ஊதூது  சங்கே. 
1
தூக்கம்  தொலைத்தான்என்று  ஊதூது  சங்கே 
துன்பம்  தவிர்த்தான்என்று  ஊதூது  சங்கே 
ஏக்கம்  கெடுத்தான்என்று  ஊதூது  சங்கே 
ஏம  சபையான்என்று  ஊதூது  சங்கே. 
2
பொன்னடி  தந்தான்என்று  ஊதூது  சங்கே 
பொன்னம்  பலத்தான்என்று  ஊதூது  சங்கே 
இன்னல்  அறுத்தான்என்று  ஊதூது  சங்கே 
என்னுள்  அமர்ந்தான்என்று  ஊதூது  சங்கே. 
3
அச்சம்  தவிர்த்தான்என்று  ஊதூது  சங்கே 
அம்பல  வாணன்என்று  ஊதூது  சங்கே 
இச்சை  அளித்தான்என்று  ஊதூது  சங்கே 
இன்பம்  கொடுத்தான்என்று  ஊதூது  சங்கே. 
4
என்உயிர்  காத்தான்என்று  ஊதூது  சங்கே 
இன்பம்  பலித்ததென்று  ஊதூது  சங்கே 
பொன்உருத்  தந்தான்என்று  ஊதூது  சங்கே 
பொற்சபை  அப்பன்என்று  ஊதூது  சங்கே. 
5
சிவமாக்கிக்கொண்டான்என்று  ஊதூது  சங்கே 
சிற்றம்  பலத்தான்என்று  ஊதூது  சங்கே 
நவநோக்  களித்தான்  என்று  ஊதூது  சங்கே 
நான்அவன்  ஆனேன்என்று  ஊதூது  சங்கே. 
6
நாத  முடியான்என்று  ஊதூது  சங்கே 
ஞானசபையான்என்று  ஊதூது  சங்கே 
பாத  மளித்தான்என்று  ஊதூது  சங்கே 
பலித்தது  பூசைஎன்று  ஊதூது  சங்கே. 
7
தெள்ளமு  தானான்என்று  ஊதூது  சங்கே 
சிற்சபை  அப்பன்என்று  ஊதூது  சங்கே 
உள்ளம்  உவந்தான்என்று  ஊதூது  சங்கே 
உள்ள  துரைத்தான்என்று  ஊதூது  சங்கே. 
8
என்னறி  வானான்என்று  ஊதூது  சங்கே 
எல்லாம்செய்  வல்லான்என்று  ஊதூது  சங்கே 
செந்நிலை  தந்தான்என்று  ஊதூது  சங்கே 
சிற்சபை  அப்பன்என்று  ஊதூது  சங்கே. 
9
இறவாமை  ஈந்தான்என்று  ஊதூது  சங்கே 
எண்ணம்  பலித்ததென்று  ஊதூது  சங்கே 
திறமே  அளித்தான்என்று  ஊதூது  சங்கே 
சிற்றம்  பலத்தான்என்று  ஊதூது  சங்கே. 
10
கரவு  தவிர்ந்ததென்று  ஊதூது  சங்கே 
கருணை  கிடைத்ததென்று  ஊதூது  சங்கே 
இரவு  விடிந்ததென்று  ஊதூது  சங்கே 
எண்ணம்  பலித்ததென்று  ஊதூது  சங்கே. 
11
எல்லாம்செய்  வல்லான்என்று  ஊதூது  சங்கே 
எல்லார்க்கும்  நல்லான்என்று  ஊதூது  சங்கே 
எல்லாம்  உடையான்என்று  ஊதூது  சங்கே 
எல்லாமும்  ஆனான்என்று  ஊதூது  சங்கே. 
12
கருணா  நிதியர்என்று  ஊதூது  சங்கே 
கடவுள்  அவனேஎன்று  ஊதூது  சங்கே 
அருள்நா  டகத்தான்என்று  ஊதூது  சங்கே 
அம்பலச்  சோதிஎன்று  ஊதூது  சங்கே. 
13
தன்னிகர்  இல்லான்என்று  ஊதூது  சங்கே 
தலைவன்  அவனேஎன்று  ஊதூது  சங்கே 
பொன்னியல்  வண்ணன்என்று  ஊதூது  சங்கே 
பொதுநடம்  செய்வான்என்று  ஊதூது  சங்கே. 
14
ஆனந்த  நாதன்என்று  ஊதூது  சங்கே 
அருளுடை  அப்பன்என்று  ஊதூது  சங்கே 
தானந்தம்  இல்லான்என்று  ஊதூது  சங்கே 
தத்துவச்  சோதிஎன்று  ஊதூது  சங்கே. 
15
பொய்விட்  டகன்றேன்என்று  ஊதூது  சங்கே 
புண்ணியன்  ஆனேன்என்று  ஊதூது  சங்கே 
மெய்தொட்டு  நின்றேன்என்று  ஊதூது  சங்கே 
மேல்வெளி  கண்டேன்என்று  ஊதூது  சங்கே. 
16

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com