திருவருட்பா  128. ஆணிப்பொன்னம்பலக் காட்சி

ஆணிப்பொன்  னம்பலத்  தேகண்ட  காட்சிகள் 
அற்புதக்  காட்சிய  டி  -  அம்மா 
அற்புதக்  காட்சிய  டி. 
1
ஜோதி  மலைஒன்று  தோன்றிற்  றதில்ஒரு 
வீதிஉண்  டாச்சுத  டி  -  அம்மா 
வீதிஉண்  டாச்சுத  டி.  ஆணி 
2
வீதியில்  சென்றேன்அவ்  வீதி  நடுஒரு 
மேடை  இருந்தத  டி  -  அம்மா 
மேடை  இருந்தத  டி.  ஆணி 
3
மேடைமேல்  ஏறினேன்  மேடைமேல்  அங்கொரு 
கூடம்  இருந்தத  டி  -  அம்மா 
கூடம்  இருந்தத  டி.  ஆணி 
4
கூடத்தை  நாடஅக்  கூடமேல்  ஏழ்நிலை 
மாடம்  இருந்தத  டி  -  அம்மா 
மாடம்  இருந்தத  டி.  ஆணி 
5
ஏழ்நிலைக்  குள்ளும்  இருந்த  அதிசயம் 
என்னென்று  சொல்வன  டி  -  அம்மா 
என்னென்று  சொல்வன  டி.  ஆணி 
6
ஓர்நிலை  தன்னில்  ஒளிர்முத்து  வெண்மணி 
சீர்நீலம்  ஆச்சுத  டி  -  அம்மா 
சீர்நீலம்  ஆச்சுத  டி.  ஆணி 
7
பாரோர்  நிலையில்  கருநீலம்  செய்ய 
பவளம  தாச்சுத  டி  -  அம்மா 
பவளம  தாச்சுத  டி.  ஆணி 
8
மற்றோர்  நிலையில்  மரகதப்  பச்சைசெம் 
மாணிக்கம்  ஆச்சுத  டி  -  அம்மா 
மாணிக்கம்  ஆச்சுத  டி.  ஆணி 
9
பின்னோர்  நிலையில்  பெருமுத்து  வச்சிரப் 
பேர்மணி  ஆச்சுத  டி  -  அம்மா 
பேர்மணி  ஆச்சுத  டி.  ஆணி 
10
வேறோர்  நிலையில்  மிகும்பவ  ளத்திரள் 
வெண்மணி  ஆச்சுத  டி  -  அம்மா 
வெண்மணி  ஆச்சுத  டி.  ஆணி 
11
புகலோர்  நிலையில்  பொருந்திய  பன்மணி 
பொன்மணி  ஆச்சுத  டி  -  அம்மா 
பொன்மணி  ஆச்சுத  டி.  ஆணி 
12
பதியோர்  நிலையில்  பகர்மணி  எல்லாம் 
படிகம  தாச்சுத  டி  -  அம்மா 
படிகம  தாச்சுத  டி.  ஆணி 
13
ஏழ்நிலை  மேலே  இருந்ததோர்  தம்பம் 
இசைந்தபொற்  றம்பம  டி  -  அம்மா 
இசைந்தபொற்  றம்பம  டி.  ஆணி 
14
பொற்றம்பம்  கண்டேறும்  போதுநான்  கண்ட 
புதுமைஎன்  சொல்வன  டி  -  அம்மா 
புதுமைஎன்  சொல்வன  டி.  ஆணி 
15
ஏறும்போ  தங்கே  எதிர்ந்த  வகைசொல 
என்னள  வல்லவ  டி  -  அம்மா 
என்னள  வல்லவ  டி.  ஆணி 
16
ஆங்காங்கே  சத்திகள்  ஆயிரம்  ஆயிரம் 
ஆகவந்  தார்கள  டி  -  அம்மா 
ஆகவந்  தார்கள  டி.  ஆணி 
17
வந்து  மயக்க  மயங்காமல்  நான்அருள் 
வல்லபம்  பெற்றன  டி  -  அம்மா 
வல்லபம்  பெற்றன  டி.  ஆணி 
18
வல்லபத்  தால்அந்த  மாதம்பத்  தேறி 
மணிமுடி  கண்டேன  டி  -  அம்மா 
மணிமுடி  கண்டேன  டி.  ஆணி 
19
மணிமுடி  மேலோர்  கொடுமுடி  நின்றது 
மற்றது  கண்டேன  டி  -  அம்மா 
மற்றது  கண்டேன  டி.  ஆணி 
20
கொடுமுடி  மேல்ஆயி  ரத்தெட்டு  மாற்றுப்பொற் 
கோயில்  இருந்தத  டி  -  அம்மா 
கோயில்  இருந்தத  டி.  ஆணி 
21
கோயிலைக்  கண்டங்கே  கோபுர  வாயிலில் 
கூசாது  சென்றன  டி  -  அம்மா 
கூசாது  சென்றன  டி.  ஆணி 
22
கோபுர  வாயிலுள்  சத்திகள்  சத்தர்கள் 
கோடிபல்  கோடிய  டி  -  அம்மா 
கோடிபல்  கோடிய  டி.  ஆணி 
23
ஆங்கவர்  வண்ணம்வெள்  வண்ணம்செவ்  வண்ணமுன் 
ஐவண்ணம்  ஆகும  டி  -  அம்மா 
ஐவண்ணம்  ஆகும  டி.  ஆணி 
24
அங்கவ  ரெல்லாம்இங்  கார்இவர்  என்னவும் 
அப்பாலே  சென்றன  டி  -  அம்மா 
அப்பாலே  சென்றன  டி.  ஆணி 
25
அப்பாலே  சென்றேன்அங்  கோர்திரு  வாயிலில் 
ஐவர்  இருந்தார  டி  -  அம்மா 
ஐவர்  இருந்தார  டி.  ஆணி 
26
மற்றவர்  நின்று  வழிகாட்ட  மேலோர் 
மணிவாயில்  உற்றேன  டி  -  அம்மா 
மணிவாயில்  உற்றேன  டி.  ஆணி 
27
எண்ணும்அவ்  வாயிலில்  பெண்ணோ  டாணாக 
இருவர்  இருந்தார  டி  -  அம்மா 
இருவர்  இருந்தார  டி.  ஆணி 
28
அங்கவர்  காட்ட  அணுக்கத்  திருவாயில் 
அன்பொடு  கண்டேன  டி  -  அம்மா 
அன்பொடு  கண்டேன  டி.  ஆணி 
29
அத்திரு  வாயிலில்  ஆனந்த  வல்லிஎன் 
அம்மை  இருந்தாள  டி  -  அம்மா 
அம்மை  இருந்தாள  டி.  ஆணி 
30
அம்மையைக்  கண்டேன்  அவளருள்  கொண்டேன் 
அமுதமும்  உண்டேன  டி  -  அம்மா 
அமுதமும்  உண்டேன  டி.  ஆணி 
31
தாங்கும்  அவளரு  ளாலே  நடராஜர் 
சந்நிதி  கண்டேன  டி  -  அம்மா 
சந்நிதி  கண்டேன  டி.  ஆணி 
32
சந்நிதி  யில்சென்று  நான்பெற்ற  பேறது 
சாமி  அறிவார  டி  -  அம்மா 
சாமி  அறிவார  டி. 
33
ஆணிப்பொன்  னம்பலத்  தேகண்ட  காட்சிகள் 
அற்புதக்  காட்சிய  டி  -  அம்மா 
அற்புதக்  காட்சிய  டி. 
34

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com