திருவருட்பா  127. அற்புதம் அற்புதமே

அற்புதம்  அற்புத  மே  -  அருள் 
அற்புதம்  அற்புத  மே. 
1
சிற்பதம்  பொற்பதஞ்  சீரே  சிறந்தது 
சித்தாடு  கின்ற  திருநாள்  பிறந்தது 
கற்பத  நெஞ்சக்  கரிசு  துறந்தது 
கற்றபொய்ந்  நூல்கள்  கணத்தே  மறந்தது  அற்புதம் 
2
செத்தார்  எழுகின்ற  திருநாள்  அடுத்தது 
சிவநெறி  ஒன்றே  எங்கும்தலை  எடுத்தது 
இத்தா  ரணிமுதல்  வானும்  உடுத்தது 
இறவா  வரந்தான்  எனக்குக்  கொடுத்தது  அற்புதம் 
3
ஆனந்த  நாடகம்  ஆடுதல்  சார்ந்தது 
அடுத்த  தருணம்  இதுவாக  நேர்ந்தது 
ஈனந்த  மாயை  இருள்வினை  சோர்ந்தது 
என்னருட்  சோதிஎன்  உள்ளத்தில்  ஆர்ந்தது  அற்புதம் 
4
சத்திய  ஞான  சபைஎன்னுள்  கண்டனன் 
சன்மார்க்க  சித்தியை  நான்பெற்றுக்  கொண்டனன் 
நித்திய  ஞான  நிறையமு  துண்டனன் 
நிந்தை  உலகியற்  சந்தையை  விண்டனன்  அற்புதம் 
5
வஞ்சகர்  அஞ்சினர்  வாய்மூடிச்  சென்றனர் 
வந்து  திரும்பவும்  வாயிலில்  நின்றனர் 
தஞ்சம்  எமக்கருள்  சாமிநீ  என்றனர் 
சன்மார்க்க  சங்கத்  தவர்களே  வென்றனர்  அற்புதம் 
6
புறங்கூறி  னாரெல்லாம்  புல்லெனப்  போயினர் 
பொற்படிக்  கீழ்ப்புற  மீளவு  மேயினர் 
மறங்கூறி  னோம்என்செய்  வோம்என்று  கூயினர் 
வாழிய  என்றுசொல்  வாயினர்  ஆயினர்  அற்புதம் 
7
வெவ்வினைக்  காடெலாம்  வேரொடு  வெந்தது 
வெய்ய  மாமாயை  விரிவற்று  நொந்தது 
செவ்விய  ஞானம்  சிறப்புற  வந்தது 
சித்திகள்  யாவையும்  செய்திடத்  தந்தது  அற்புதம் 
8
சாதி  சமயச்  சழக்கெலாம்  அற்றது 
சன்மார்க்க  ஞான  சபைநிலை  பெற்றது 
மேதியிற்  சாகாத  வித்தையைக்  கற்றது 
மெய்யருட்  சோதிஎன்  உள்ளத்தில்  உற்றது  அற்புதம் 
9
அற்புதம்  அற்புத  மே  -  அருள் 
அற்புதம்  அற்புத  மே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com