
திருவருட்பா · 123வருவார் அழைத்துவாடி
Oliyaan
வருவார ழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே
வந்தாற் பெறலாம்நல்ல வரமே.
திருவார்பொன் னம்பலத்தே செழிக்குங்குஞ் சிதபாதர்
சிவசிதம் பரபோதர் தெய்வச் சபாநாதர் வருவார்
சிந்தை களிக்கக்கண்டு சிவானந்த மதுவுண்டு
தெளிந்தோர்எல் லாரும்தொண்டு செய்யப் பவுரிகொண்டு
இந்த வெளியில்நட மிடத்துணிந் தீரேஅங்கே
இதைவிடப் பெருவெளி இருக்குதென் றால்இங்கே வருவார்
இடுக்கி லாமல்இருக்க இடமுண்டு நடஞ்செய்ய
இங்கம் பலம்ஒன்றங்கே எட்டம் பலம்உண்டைய
ஒடுக்கில் இருப்பதென்ன உளவுகண்டு கொள்வீர்என்னால்
உண்மைஇது வஞ்சமல்ல உம்மேல் ஆணை என்றுசொன்னால் வருவார்
மெல்லியல் சிவகாம வல்லி யுடன்களித்து
விளையா டவும்எங்கள் வினைஓ டவும்ஒளித்து
எல்லையில் இன்பந்தரவும் நல்லசம யந்தானிது
இங்குமங்கும் நடமாடி இருக்கலாம் என்றபோது
வருவார ழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே
வந்தாற் பெறலாம்நல்ல வரமே.




