திருவருட்பா  111. நெஞ்சொடு கிளத்தல்

அடங்குநாள்  இல்லா  தமர்ந்தானைக்  காணற்கே 
தொடங்குநாள்  நல்லதன்  றோ  -  நெஞ்சே 
தொடங்குநாள்  நல்லதன்  றோ. 
1
வல்லவா  றெல்லாமும்  வல்லானைக்  காணற்கே 
நல்லநாள்  எண்ணிய  நாள்  -  நெஞ்சே 
நல்லநாள்  எண்ணிய  நாள். 
2
காலங்  கடந்த  கடவுளைக்  காணற்குக் 
காலங்  கருதுவ  தேன்  -  நெஞ்சே 
காலங்  கருதுவ  தேன். 
3
ஆலம்  அமுதாக்கும்  அண்ணலைக்  காணற்குக் 
காலங்  கருதுவ  தேன்  -  நெஞ்சே 
காலங்  கருதுவ  தேன். 
4
தடையாதும்  இல்லாத்  தலைவனைக்  காணற்கே 
தடையாதும்  இல்லைகண்  டாய்  -  நெஞ்சே 
தடையாதும்  இல்லைகண்  டாய். 
5
கையுள்  அமுதத்தை  வாயுள்  அமுதாக்கப் 
பையுள்  உனக்கென்னை  யோ  -  நெஞ்சே 
பையுள்  உனக்கென்னை  யோ. 
6
என்னுயிர்  நாதனை  யான்கண்  டணைதற்கே 
உன்னுவ  தென்னைகண்  டாய்  -  நெஞ்சே 
உன்னுவ  தென்னைகண்  டாய். 
7
நான்பெற்ற  செல்வத்தை  நான்பற்றிக்  கொள்ளற்கே 
ஏன்பற்று  வாயென்ப  தார்  -  நெஞ்சே 
ஏன்பற்று  வாயென்ப  தார். 
8
தத்துவா  தீதத்  தலைவனைக்  காணற்குத் 
தத்துவ  முன்னுவ  தேன்  -  நெஞ்சே 
தத்துவ  முன்னுவ  தேன். 
9
ஒக்க  அமுதத்தை  உண்டோம்  இனிச்சற்றும் 
விக்கல்  வராதுகண்  டாய்  -  நெஞ்சே 
விக்கல்  வராதுகண்  டாய். 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com