திருவருட்பா  82. பேரன்புக் கண்ணி

கற்றதென்றுஞ்  சாகாத  கல்வியென்று  கண்டுகொண்டுன் 
அற்புதச்சிற்  றம்பலத்தி  லன்புவைத்தேன்  ஐயாவே. 
1
ஈடணைகள்  நீக்கிநமக்  கின்பளிக்கு  மென்றுமன்றில் 
ஆடுந்  திருவடிக்கே  ஆசைவைத்தேன்  ஐயாவே. 
2
நானந்த  மெய்தா  நலம்பெறவே  யெண்ணிமன்றில் 
ஆனந்த  நாடகத்துக்  கன்புவைத்தேன்  ஐயாவே. 
3
வாடலறச்  சாகா  வரங்கொடுக்கு  மென்றுமன்றில் 
ஆடலடிப்  பொன்மலர்க்கே  அன்புவைத்தேன்  ஐயாவே. 
4
பொற்புறவே  பொன்றாப்  பொருளளிக்கு  மென்றுமன்றில் 
அற்புதப்பொற்  சேவடிக்கே  அன்புவைத்தேன்  ஐயாவே. 
5
ஈனமறுத்  தென்றும்  இறவாமை  நல்குமென்றே 
ஞானமணி  மன்றிடத்தே  நண்புவைத்தேன்  ஐயாவே. 
6
ஓர்துணைநின்  பொன்னடியென்  றுன்னுகின்றே  னுன்னையன்றி 
ஆர்துணையும்  வேண்டேனென்  அன்புடைய  ஐயாவே. 
7
பூசைசெய்து  பெற்றவுன்றன்  பொன்னடிமே  லன்றியயல் 
ஆசையொன்று  மில்லையெனக்  கன்புடைய  ஐயாவே. 
8
இச்சைநின்மே  லன்றியெனக்  கெள்ளளவும்  வேறுமொன்றில் 
இச்சையிலை  நின்னாணை  யென்னருமை  ஐயாவே. 
9
எப்படிநின்  னுள்ள  மிருக்கின்ற  தென்னளவில் 
அப்படிநீ  செய்கவெனக்  கன்புடைய  ஐயாவே. 
10
எவ்வண்ணம்  நின்கருத்திங்  கென்னளவி  லெண்ணியதோ 
அவ்வண்ணஞ்  செய்கவெனக்  கன்புடைய  ஐயாவே. 
11
தேசுறுநின்  றண்ணருளாந்  தெள்ளமுதங்  கொள்ளவுள்ளே 
ஆசைபொங்கு  கின்றதெனக்  கன்புடைய  ஐயாவே. 
12
மாசறுநின்  பொன்னருளா  மாமணிபெற்  றாடவுள்ளே 
ஆசைபொங்கு  கின்றதெனக்  கன்புடைய  ஐயாவே. 
13
நாசமிலா  நின்னருளாம்  ஞானமருந்  துண்ணவுள்ளே 
ஆசைபொங்கு  கின்றதெனக்  கன்புடைய  ஐயாவே. 
14

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com