
மின்னிடையாள் காண விளங்குமன்றி லாடுகின்றாய்
என்னுடையா யுன்ற னிணையடிதான் நோவாதா.
வன்னமுதே யின்ப மலியமன்றி லாடுகின்றாய்
என்னமுதே யுன்ற னிணையடிதான் நோவாதா.
நண்ணியமெய் யன்பர் நயக்கமன்றி லாடுகின்றாய்
புண்ணியனே யுன்றனது பொன்னடிதான் நோவாதா.
அன்பரின்பங் கொள்ளநட மம்பலத்தே யாடுகின்றாய்
இன்புருவா முன்ற னிணையடிதான் நோவாதா.
நூலுணர்வா நுண்ணுணர்வி னோக்கநட மாடுகின்றாய்
மாலறியா வுன்றன் மலர்ப்பாதம் நோவாதா.
எள்ளலற வம்பலத்தே யின்பநட மாடுகின்றாய்
வள்ளலே யுன்றன் மலரடிதான் நோவாதா.
சைவ நிலைத்துத் தழைத்தோங்க வாடுகின்றாய்
தெய்வ மணியே திருவடிதான் நோவாதா.
எல்லாரு மின்புற் றிருக்கநட மாடுகின்றாய்
வல்லாரின் வல்லாய் மலர்ப்பாதம் நோவாதா.
அவமே கழிந்தின்ப மன்பர்கொள வாடுகின்றாய்
சிவமே நினது திருவடிதான் நோவாதா.
தற்பரமா மன்றிற் றனிநடன மாடுகின்றாய்
சிற்பரமே யுன்றன் திருமேனி நோவாதா.
வில்வவேர் மாலை மிளிர்ந்தசைய வாடுகின்றாய்
செல்வமே யுன்றன் திருமேனி நோவாதா.



