திருவருட்பா  80. முறையீட்டுக் கண்ணி

பற்று  நினைத்தெழுமிப்  பாவிமனத்  தீமையெலாம் 
உற்று  நினைக்கிலெனக்  கூடுருவிப்  போகுதடா. 
1
எள்ளேத  நின்னிடத்தே  எண்ணுகின்ற  தோறுமதை 
உள்ளே  நினைக்கிலெனக்  கூடுருவிப்  போகுதடா. 
2
துன்னுகின்ற  தீமைநின்பாற்  சூழ்ந்துரைக்குந்  தோறுமதை 
உன்னுகின்ற  போதிலெனக்  கூடுருவிப்  போகுதடா. 
3
எள்ளுகின்ற  தீமைநின்பா  லெண்ணுகின்ற  தோறுமதை 
உள்ளுகின்ற  போதிலெனக்  கூடுருவிப்  போகுதடா. 
4
மிக்க  நிலைநிற்க  விரும்பேன்  பிழைகளெலாம் 
ஒக்க  நினைக்கிலெனக்  கூடுருவிப்  போகுதடா. 
5
கோகோ  வெனுங்கொடியேன்  கூறியகுற்  றங்களெலாம் 
ஓகோ  நினைக்கிலெனக்  கூடுருவிப்  போகுதடா. 
6
பித்து  மனக்கொடியேன்  பேசியவன்  சொல்லையெலாம் 
ஒத்து  நினைக்கிலெனக்  கூடுருவிப்  போகுதடா. 
7
தேர்ந்து  தெளியாச்  சிறியவனேன்  தீமையெலாம் 
ஓர்ந்து  நினைக்கிலெனக்  கூடுருவிப்  போகுதடா. 
8
நிறுத்தி  யறியே  நிகழ்த்தியவன்  சொல்லை 
உறுத்தி  நினைக்கிலெனக்  கூடுருவிப்  போகுதடா. 
9
தோன்றி  விரியுமனத்  துட்டனேன்  வன்பிழையை 
ஊன்றி  நினைக்கிலெனக்  கூடுருவிப்  போகுதடா. 
10
எண்ணினைப்ப  தின்றிநினை  யெள்ளி  யுரைத்ததனை 
உண்ணினைக்குந்  தோறுமெனக்  குள்ள  முருகுதடா. 
11
கடையவனேன்  வைதகடுஞ்  சொன்னினைக்குந்  தோறும் 
உடையவனே  யென்னுடைய  வுள்ள  முருகுதடா. 
12
பித்தனெனத்  தீமை  பிதற்றியதெண்  ணுந்தோறும் 
உத்தமனே  யென்னுடைய  வுள்ள  முருகுதடா. 
13
மன்றுடையாய்  நின்னருளை  வைதகொடுஞ்  சொற்பொருளில் 
ஒன்றை  நினைக்கிலெனக்  குள்ள  முருகுதடா. 
14
வெருவாம  லையோ  விளம்பியசொல்  லெல்லாம் 
ஒருவா  நினைக்கிலெனக்  குள்ள  முருகுதடா. 
15
புலைக்கொடியேன்  புன்சொற்  புகன்றதெண்  ணுந்தோறும் 
உலைக்கண்மெழு  காகவென்ற  னுள்ள  முருகுதடா. 
16
ஈடில்பெருந்  தாயி  லினியாய்நின்  றண்ணருட்பால் 
ஊடியசொல்  லுன்னிலெனக்  குள்ள  முருகுதடா. 
17
புரைத்தமன  வஞ்சப்  புலையேன்  றிருவருளை 
உரைத்தபிழை  யெண்ணிலெனக்  குள்ள  முருகுதடா. 
18
நாடி  நினையா  நவையுடையேன்  புன்சொலெலாம் 
ஓடி  நினைக்கிலெனக்  குள்ள  முருகுதடா. 
19
வெப்பில்  கருணை  விளக்கனையா  யென்பிழையை 
ஒப்பி  நினைக்கிலெனக்  குள்ள  முருகுதடா. 
20
அஞ்சலென்றாய்  நின்பால்  அடாதமொழி  பேசியதை 
அஞ்சிநினைக்  கிலெனக்  கஞ்சுங்  கலங்குதடா. 
21
மெய்யோர்  சிறிதுமிலேன்  வீண்மொழியா  லூடியதை 
ஐயோ  நினைக்கிலெனக்  கஞ்சுங்  கலங்குதடா. 
22
இத்தா  ரணிக்குளெங்கு  மில்லாத  தீமைசெய்தேன் 
அத்தா  நினைக்கிலெனக்  கஞ்சுங்  கலங்குதடா. 
23
பொய்யால்  விரிந்த  புலைமனத்தேன்  செய்பிழையை 
ஐயா  நினைக்கிலெனக்  கஞ்சுங்  கலங்குதடா. 
24
இப்பாவி  நெஞ்சா  லிழுக்குரைத்தே  னாங்கதனை 
அப்பாநி  னைக்கிலெனக்  கஞ்சுங்  கலங்குதடா. 
25
எண்ணாக்  கொடுமையெலா  மெண்ணியுரைத்  தேனதனை 
அண்ணா  நினைக்கிலெனக்  கஞ்சுங்  கலங்குதடா. 
26
வெம்மான்  மனத்து  வினையேன்  புகன்றதெலாம் 
அம்மா  நினைக்கிலெனக்  கஞ்சுங்  கலங்குதடா. 
27
எச்சோடு  மில்லா  திழிந்தேன்  பிழைகளெலாம் 
அச்சோநி  னைக்கிலெனக்  கஞ்சுங்  கலங்குதடா. 
28
வந்தோடி  நைமனத்து  வஞ்சகனேன்  வஞ்சமெலாம் 
அந்தோநி  னைக்கிலெனக்  கஞ்சுங்  கலங்குதடா. 
29
ஓவாக்  கொடியே  னுரைத்த  பிழைகளெலாம் 
ஆவா  நினைக்கிலெனக்  கஞ்சுங்  கலங்குதடா. 
30
கரைசேர  வொண்ணாக்  கடையேன்  பிழையை 
அரைசேநி  னைக்கிலெனக்  கஞ்சுங்  கலங்குதடா. 
31
மருளுடையேன்  வஞ்ச  மனத்தீமை  யெல்லாம் 
அருளுடையா  யெண்ணிலெனக்  கஞ்சுங்  கலங்குதடா. 
32
ஈண்டவனேன்  வன்சொல்  இயம்பியதை  யென்னுடைய 
ஆண்டவனே  யெண்ணிலெனக்  கஞ்சுங்  கலங்குதடா. 
33
வற்புதனேன்  வஞ்ச  மனப்பிழையை  மன்றாடும் 
அற்புதனே  யெண்ணிலெனக்  கஞ்சுங்  கலங்குதடா. 
34
துன்புடையேன்  புன்மொழிகள்  தூற்றியதை  யெவ்வுயிர்க்கும் 
அன்புடையா  யெண்ணிலெனக்  கஞ்சுங்  கலங்குதடா. 
35
கொதிக்கின்ற  வன்மொழியாற்  கூறியதை  யையோ 
மதிக்கின்ற  தோறுமுள்ளே  வாளிட்  டறுக்குதடா. 
36
சினங்கொண்ட  போதெல்லாஞ்  செப்பிய  வன்சொல்லை 
மனங்கொள்ளுந்  தோறுமுள்ளே  வாளிட்  டறுக்குதடா. 
37
செய்தநன்றி  யெண்ணாச்  சிறியவனே  னின்னருளை 
வைத்தெண்ணுந்  தோறுமுள்ளே  வாளிட்  டறுக்குதடா. 
38
பொய்த்த  மனத்தேன்  புகன்றகொடுஞ்  சொற்களெலாம் 
வைத்துநினைக்  குந்தோறும்  வாளிட்  டறுக்குதடா. 
39
பொங்குகின்ற  தீமை  புகன்றதெலா  மெண்ணியெண்ணி 
மங்குகின்ற  தோறுமுள்ளே  வாளிட்  டறுக்குதடா. 
40
ஊடுகின்ற  சொல்லா  லுரைத்ததனை  யெண்ணியெண்ணி 
வாடுகின்ற  தோறுமுள்ளே  வாளிட்  டறுக்குதடா. 
41
உயங்குகின்றேன்  வன்சொல்  லுரைத்ததனை  யெண்ணி 
மயங்குகின்ற  தோறுமுள்ளே  வாளிட்  டறுக்குதடா. 
42
சொல்விளைவு  நோக்காதே  சொன்னதெலா  மெண்ணுதொறும் 
வல்வினையே  னுள்ளகத்தே  வாளிட்  டறுக்குதடா. 
43
மேல்விளைவு  நோக்காதே  வேறுசொன்ன  தெண்ணுதொறும் 
மால்வினையே  னுள்ளகத்தே  வாளிட்  டறுக்குதடா. 
44
விஞ்சகத்தா  லந்தோ  விளம்பியதை  யெண்ணுதொறும் 
வஞ்சகத்தே  னுள்ளகத்தே  வாளிட்  டறுக்குதடா. 
45
விலங்குகின்ற  நெஞ்ச  விளைவையெண்  ணுந்தோறும் 
மலங்குகின்றே  னுள்ளகத்தே  வாளிட்  டறுக்குதடா. 
46
தூய்மையிலா  வன்மொழியாற்  சொன்னவெலா  மெண்ணுதொறும் 
வாய்மையிலே  னுள்ளகத்தே  வாளிட்  டறுக்குதடா. 
47
கலிக்கின்ற  வஞ்சகக்  கருத்தைக்  கருதி 
வலிக்கின்ற  தோறுமுள்ளே  வாளிட்  டறுக்குதடா. 
48
நீட்டுகின்ற  வஞ்ச  நெடுஞ்சொலெலா  நெஞ்சகத்தே 
மாட்டுகின்ற  தோறுமுள்ளே  வாளிட்  டறுக்குதடா. 
49
பொருந்துகின்ற  வஞ்சப்  புதுமையெண்ணி  யையோ 
வருந்துகின்ற  தோறுமுள்ளே  வாளிட்  டறுக்குதடா. 
50

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com