
இரண்டே காற்கை முகந்தந்தீர் இன்ப நடஞ்செய் பெருமானீர்
இரண்டே காற்கை முகங்கொண்டீர் என்னே அடிகள் என்றுரைத்தேன்
இரண்டே காற்கை முகம்புடைக்க இருந்தாய் எனைக்கென் றிங்கேநீ
இரண்டே காற்கை முகங்கொண்டாய் என்றார் மன்றில் நின்றாரே.
இரண்டே காற்கை முகங்கொண்டீர் என்னை உடையீர் அம்பலத்தீர்
இரண்டே காற்கை முகந்தந்தீர் என்னை இதுதான் என்றுரைத்தேன்
இரண்டே காற்கை முகங்கொண்டிங் கிருந்த நீயும் எனைக்கண்டே
இரண்டே காற்கை முகங்கொண்டாய் என்றார் தோழி இவர்வாழி.
ஆடுங் கருணைத் திருநடத்தீர் ஆடும் இடந்தான் யாதென்றேன்
பாடுந் திருவுஞ் சவுந்தரமும் பழமுங் காட்டும் இடமென்றார்
நாடும் படிநன் கருளுமென்றேன் நங்காய் முன்பின் ஒன்றேயாய்
ஈடுந் தியபன் னடுவுளதால் என்றார் தோழி இவர்வாழி.



