
ஊணே உடையே பொருளேஎன் றுருகி மனது தடுமாறி
வீணே துயரத் தழுந்துகின்றேன் வேறோர் துணைநின் அடிஅன்றிக்
காணேன் அமுதே பெருங்கருணைக் கடலே கனியே கரும்பேநல்
சேணேர் தணிகை மலைமருந்தே தேனே ஞானச் செழுஞ்சுடரே.
பாரும் விசும்பும் அறியஎனைப் பயந்த தாயும் தந்தையும்நீ
ஒரும் போதிங் கெனில்எளியேன் ஒயாத் துயருற் றிடல்நன்றோ
யாரும் காண உனைவாதுக் கிழுப்பேன் அன்றி என்செய்கேன்
சேரும் தணிகை மலைமருந்தே தேனே ஞானச் செழுஞ்சுடரே.
கஞ்சன் துதிக்கும் பொருளேஎன் கண்ணே நின்னைக் கருதாத
வஞ்சர் கொடிய முகம்பார்க்க மாட்டேன் இனிஎன் வருத்தம்அறுத்
தஞ்சல் எனவந் தருளாயேல் ஆற்றேன் கண்டாய் அடியேனே
செஞ்சந் தனம்சேர் தணிகைமலைத் தேனே ஞானச் செழுஞ்சுடரே.
மின்நேர் உலக நடைஅதனால் மேவும் துயருக் காளாகிக்
கல்நேர் மனத்தேன் நினைமறந்தென் கண்டேன் கண்டாய் கற்பகமே
பொன்னே கடவுள் மாமணியே போதப் பொருளே பூரணமே
தென்னேர் தணிகை மலைஅரசே தேவே ஞானச் செழுஞ்சுடரே.
வளைத்தே வருத்தும் பெருந்துயரால் வாடிச் சவலை மகவாகி
இளைத்தேன் தேற்றும் துணைகாணேன் என்செய் துய்கேன் எந்தாயே
விளைத்தேன் ஒழுகும் மலர்த்தருவே விண்ணே விழிக்கு விருந்தேசீர்
திளைத்தோர் பரவும் திருத்தணிகைத் தேவே ஞானச் செழுஞ்சுடரே.
அடுத்தே வருத்தும் துயர்க்கடலில் அறியா தந்தோ விழுந்திட்டேன்
எடுத்தே விடுவார் தமைக்காணேன் எந்தாய் எளியேன் என்செய்கேன்
கடுத்தேர் கண்டத் தெம்மான்தன் கண்ணே தருமக் கடலேஎன்
செடித்தீர் தணிகை மலைப்பொருளே தேனே ஞானச் செழுஞ்சுடரே.
உண்டால் குறையும் எனப்பசிக்கும் உலுத்தர் அசுத்த முகத்தைஎதிர்
கண்டால் நடுங்கி ஒதுங்காது கடைகாத் திரந்து கழிக்கின்றேன்
கொண்டார் அடியர் நின்அருளை யானோ ஒருவன் குறைபட்டேன்
திண்டார் அணிவேல் தணிகைமலைத் தேவே ஞானச் செழுஞ்சுடரே.
வேட்டேன் நினது திருஅருளை வினையேன் இனிஇத் துயர்பொறுக்க
மாட்டேன் மணியே அன்னேஎன் மன்னே வாழ்க்கை மாட்டுமனம்
நாட்டேன் அயன்மால் எதிர்வரினும் நயக்கேன் எனக்கு நல்காயோ
சேட்டேன் அலரும் பொழில்தணிகைத் தேவே ஞானச் செழுஞ்சுடரே.
கல்லா நாயேன் எனினும்எனைக் காக்கும் தாய்நீ என்றுலகம்
எல்லாம் அறியும் ஆதலினால் எந்தாய் அருளா திருத்திஎனில்
பொல்லாப் பழிவந் தடையும்உனக் கரசே இனியான் புகல்வதென்னே
செல்லார் பொழில்சூழ் திருத்தணிகைத் தேவே ஞானச் செழுஞ்சுடரே.
அன்னே அப்பா எனநின்தாட் கார்வம் கூர்ந்திங் கலைகின்றேன்
என்னே சற்றும் இரங்கிலைநீ என்நெஞ் சோநின் நல்நெஞ்சம்
மன்னே ஒளிகொள் மாணிக்க மணியே குணப்பொன் மலையேநல்
தென்னேர் பொழில்சூழ் திருத்தணிகைத் தேவே ஞானச் செழுஞ்சுடரே.
நடைஏய் துயரால் மெலிந்து நினை நாடா துழலும் நான்நாயில்
கடையேன் எனினும் காத்தல்என்றன் கண்ணே நினது கடன்அன்றோ
தடையேன் வருவாய் வந்துன்அருள் தருவாய் இதுவே சமயம்காண்
செடிதீர்த் தருளும் திருத்தணிகைத் தேவே ஞானச் செழுஞ்சுடரே.



