
அணிகொள் வேல்உடை அண்ணலே நின்திரு அடிகளை அன்போடும்
பணிகி லேன்அகம் உருகிநின் றாடிலேன் பாடிலேன் மனமாயைத்
தணிகி லேன்திருத் தணிகையை நினைகிலேன் சாமிநின் வழிபோகத்
துணிகி லேன்இருந் தென்செய்தேன் பாவியேன் துன்பமும் எஞ்சேனே.
சேல்பி டித்தவன் தந்தைஆ தியர்தொழும் தெய்வமே சிவப்பேறே
மால்பி டித்தவர் அறியொணாத் தணிகைமா மலைஅமர்ந் திடுவாழ்வே
வேல்பி டித்தருள் வள்ளலே யான்சதுர் வேதமும் காணாநின்
கால்பி டிக்கவும் கருணைநீ செய்யவும் கண்டுகண் களிப்பேனோ.
களித்து நின்திருக் கழலிணை ஏழையேன் காண்பனோ அலதன்பை
ஒளித்து வன்துயர் உழப்பனோ இன்னதென் றுணர்ந்திலேன் அருட்போதம்
தெளித்து நின்றிடும் தேசிக வடிவமே தேவர்கள் பணிதேவே
தளிர்த்த தண்பொழில் தணிகையில் வளர்சிவ தாருவே மயிலோனே.
மயிலின் மீதுவந் தருள்தரும் நின்திரு வரவினுக் கெதிர்பார்க்கும்
செயலி னேன்கருத் தெவ்வணம் முடியுமோ தெரிகிலேன் என்செய்கேன்
அயிலின் மாமுதல் தடிந்திடும் ஐயனே ஆறுமா முகத்தேவே
கயிலை நேர்திருத் தணிகைஅம் பதிதனில் கந்தன்என் றிருப்போனே.
இருப்பு நெஞ்சகக் கொடியனேன் பிழைதனை எண்ணுறேல் இனிவஞ்சக்
கருப்பு காவணம் காத்தருள் ஐயனே கருணைஅம் கடலேஎன்
விருப்புள் ஊறிநின் றோங்கிய அமுதமே வேல்உடை எம்மானே
தருப்பு காஇனன் விலகுறும் தணிகைவாழ் சாந்தசற் குணக்குன்றே.
குன்று நேர்பிணித் துயரினால் வருந்திநின் குரைகழல் கருதாத
துன்று வஞ்சகக் கள்ளனேன் நெஞ்சகத் துயர்அறுத் தருள்செய்வான்
இன்று மாமயில் மீதினில் ஏறிஇவ் வேழைமுன் வருவாயேல்
நன்று நன்றதற் கென்சொல்வார் தணிகைவாழ் நாதநின் அடியாரே.
யாரை யுந்துணை கொண்டிலேன் நின்அடி இணைதுணை அல்லால்நின்
பேரை உன்னிவாழ்ந் திடும்படி செய்வையோ பேதுறச் செய்வாயோ
பாரை யும்உயிர்ப் பரப்பையும் படைத்தருள் பகவனே உலகேத்தும்
சீரை உற்றிடும் தணிகைஅம் கடவுள்நின் திருவுளம் அறியேனே.
உளங்கொள் வஞ்சக நெஞ்சர்தம் இடம்இடர் உழந்தகம் உலைவுற்றேன்
வளங்கொள் நின்பத மலர்களை நாள்தொறும் வாழ்த்திலேன் என்செய்கேன்
குளங்கொள் கண்ணனும் கண்ணனும் பிரமனும் குறிக்கரும் பெருவாழ்வே
தளங்கொள் பொய்கைசூழ் தணிகைஅம் பதியில்வாழ் தனிப்பெரும் புகழ்த்தேவே.
தேவர் நாயகன் ஆகியே என்மனச் சிலைதனில் அமர்ந்தோனே
மூவர் நாயகன் எனமறை வாழ்த்திடும் முத்தியின் வித்தேஇங்
கேவ ராயினும் நின்திருத் தணிகைசென் றிறைஞ்சிடில் அவரேஎன்
பாவ நாசம்செய் தென்றனை ஆட்கொளும் பரஞ்சுடர் கண்டாயே.
கண்ட னேகவா னவர்தொழும் நின்திருக் கழல்இணை தனக்காசை
கொண்ட னேகமாய்த் தெண்டன்இட் டானந்தக் கூத்தினை உகந்தாடித்
தொண்ட னேனும்நின் அடியரில் செறிவனோ துயர்உழந் தலைவேனோ
அண்ட னேதிருத் தணிகைவாழ் அண்ணலே அணிகொள்வேல் கரத்தோனே



