திருவருட்பா  8. குறைஇரந்த பத்து

சீர்பூத்த  அருட்கடலே  கரும்பே  தேனே 
செம்பாகே  எனதுகுலத்  தெய்வ  மேநல் 
கூர்பூத்த  வேல்மலர்க்கை  அரசே  சாந்த 
குணக்குன்றே  தணிகைமலைக்  கோவே  ஞானப் 
பேர்பூத்த  நின்புகழைக்  கருதி  ஏழை 
பிழைக்கஅருள்  செய்வாயோ  பிழையை  நோக்கிப் 
பார்பூத்த  பவத்தில்உற  விடில்என்  செய்கேன் 
பாவியேன்  அந்தோவன்  பயம்தீ  ரேனே. 
1
தீராத  துயர்க்கடலில்  அழுந்தி  நாளும் 
தியங்கிஅழு  தேங்கும்இந்தச்  சேய்க்கு  நீகண் 
பாராத  செயல்என்னே  எந்தாய்  எந்தாய் 
பாவிஎன  விட்டனையோ  பன்னா  ளாக 
ஏராய  அருள்தருவாய்  என்றே  ஏமாந் 
திருந்தேனே  என்செய்கேன்  யாரும்  இல்லேன் 
சீராருந்  தணிகைவரை  அமுதே  ஆதி 
தெய்வமே  நின்கருத்தைத்  தெளிந்தி  லேனே. 
2
தெளிக்குமறைப்  பொருளேஎன்  அன்பே  என்றன் 
செல்வமே  திருத்தணிகைத்  தேவே  அன்பர் 
களிக்கும்மறைக்  கருத்தேமெய்ஞ்  ஞான  நீதிக் 
கடவுளே  நின்அருளைக்  காணேன்  இன்னும் 
சுளிக்கும்மிடித்  துயரும்யமன்  கயிறும்  ஈனத் 
தொடர்பும்மலத்  தடர்பும்மனச்  சோர்வும்  அந்தோ 
அளிக்கும்எனை  என்செயுமோ  அறியேன்  நின்றன் 
அடித்துணையே  உறுதுணைமற்  றன்றி  உண்டோ. 
3
உண்டாய  உலகுயிர்கள்  தம்மைக்  காக்க 
ஒளித்திருந்தவ்  வுயிர்வினைகள்  ஒருங்கே  நாளும் 
கண்டாயே  இவ்வேழை  கலங்கும்  தன்மை 
காணாயோ  பன்னிரண்டு  கண்கள்  கொண்டோய் 
தண்டாத  நின்அருட்குத்  தகுமோ  விட்டால் 
தருமமோ  தணிகைவரைத்  தலத்தின்  வாழ்வே 
விண்டாதி  தேவர்தொழும்  முதலே  முத்தி 
வித்தேசொற்  பதம்கடந்த  வேற்கை  யானே. 
4
கையாத  அன்புடையார்  அங்கை  மேவும் 
கனியேஎன்  உயிரேஎன்  கண்ணே  என்றும் 
பொய்யாத  பூரணமே  தணிகை  ஞானப் 
பொருளேநின்  பொன்அருள்இப்  போதியான்  பெற்றால் 
உய்யாத  குறைஉண்டோ  துயர்சொல்  லாமல் 
ஓடுமே  யமன்பாசம்  ஓய்ந்து  போம்என் 
ஐயாநின்  அடியரொடு  வாழ்கு  வேன்இங் 
கார்உனைஅல்  லால்எனக்கின்  றருள்செய்  வாயே. 
5
வாய்க்கும்உன  தருள்என்றே  அந்தோ  நாளும் 
வழிபார்த்திங்  கிளைக்கின்றேன்  வருத்தும்  பொல்லா 
நோய்க்கும்உறு  துயர்க்கும்இலக்  கானேன்  மாழ்கி 
நொந்தேன்நின்  அருள்காணேன்  நுவலும்  பாசத் 
தேய்க்கும்அவன்  வரில்அவனுக்  கியாது  சொல்வேன் 
என்செய்கேன்  துணைஅறியா  ஏழை  யேனே 
து‘ய்க்குமர  குருவேதென்  தணிகை  மேவும் 
சோதியே  இரங்காயோ  தொழும்பா  ளர்க்கே. 
6
ஆளாயோ  துயர்அளக்கர்  வீழ்ந்து  மாழ்கி 
ஐயாவோ  எனும்முறையை  அந்தோ  சற்றும் 
கேளாயோ  என்செய்கேன்  எந்தாய்  அன்பர் 
கிளத்தும்உன  தருள்எனக்குக்  கிடையா  தாகில் 
நாளாய்ஓர்  நடுவன்வரில்  என்செய்  வானோ 
நாயினேன்  என்சொல்வேன்  நாணு  வேனோ 
தோளாஓர்  மணியேதென்  தணிகை  மேவும் 
சுடரேஎன்  அறிவேசிற்  சுகங்கொள்  வாழ்வே. 
7
வாழ்வேநற்  பொருளேநல்  மருந்தே  ஞான 
வாரிதியே  தணிகைமலை  வள்ள  லேயான் 
பாழ்வேலை  எனுங்கொடிய  துயருள்  மாழ்கிப் 
பதைத்தையா  முறையோநின்  பதத்துக்  கென்றே 
தாழ்வேன்ஈ  தறிந்திலையே  நாயேன்  மட்டும் 
தயவிலையோ  நான்பாவி  தானோ  பார்க்குள் 
ஆழ்வேன்என்  றயல்விட்டால்  நீதி  யேயோ 
அச்சோஇங்  கென்செய்கேன்  அண்ணால்  அண்ணால். 
8
அண்ணாவே  நின்அடியை  அன்றி  வேறோர் 
ஆதரவிங்  கறியேன்நெஞ்  சழிந்து  துன்பால் 
புண்ணாவேன்  தன்னைஇன்னும்  வஞ்சர்  பாற்போய்ப் 
புலந்துமுக  வாட்டம்உடன்  புலம்பி  நிற்கப் 
பண்ணாதே  யாவன்இவன்  பாவிக்  குள்ளும் 
படுபாவி  என்றென்னைப்  பரிந்து  தள்ள 
எண்ணாதே  யான்மிகவும்  ஏழை  கண்டாய் 
இசைக்கரிய  தணிகையில்வீற்  றிருக்கும்  கோவே. 
9
கோவேநல்  தணிகைவரை  அமர்ந்த  ஞான 
குலமணியே  குகனேசற்  குருவே  யார்க்கும் 
தேவேஎன்  விண்ணப்பம்  ஒன்று  கேண்மோ 
சிந்தைதனில்  நினைக்கஅருள்  செய்வாய்  நாளும் 
பூவேயும்  அயன்திருமால்  புலவர்  முற்றும் 
போற்றும்எழில்  புரந்தரன்எப்  புவியும்  ஓங்கச் 
சேவேறும்  பெருமான்இங்  கிவர்கள்  வாழ்த்தல் 
செய்துவக்கும்  நின்இரண்டு  திருத்தாள்  சீரே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com