திருவருட்பா  69. பெரியநாயகியார் தோத்திரம்

உரிய  நாயகி  யோங்கதி  கைப்பதித் 
துரிய  நாயகி  தூயவீ  ரட்டற்கே 
பிரிய  நாயகி  பேரருள்  நாயகி 
பெரிய  நாயகி  பெற்றியைப்  பேசுவாம். 
1
உலகந்  தழைக்க  உயிர்தழைக்க  உணர்வு  தழைக்க  ஒளிதழைக்க 
உருவந்  தழைத்த  பசுங்கொடியே  உள்ளத்  தினிக்கும்  தெள்ளமுதே 
திலகந்  தழைத்த  நுதற்கரும்பே  செல்வத்  திருவே  கலைக்குருவே 
சிறக்கும்  மலைப்பெண்  மணியேமா  தேவி  இச்சை  ஞானமொடு 
வலகந்  தழைக்குங்  கிரியை  இன்பம்  வழங்கும்  ஆதி  பரைஎன்ன 
வயங்கும்  ஒருபே  ரருளேஎம்  மதியை  விளக்கும்  மணிவிளக்கே 
அலகந்  தழைக்குந்  திருவதிகை  ஐயர்  விரும்பும்  மெய்யுறவே 
அரிய  பெரிய  நாயகிப்பெண்  ணரசே  என்னை  ஆண்டருளே. 
2
தன்னேர்  அறியாப்  பரவெளியில்  சத்தாம்  சுத்த  அநுபவத்தைச் 
சார்ந்து  நின்ற  பெரியவர்க்கும்  தாயே  எமக்குத்  தனித்தாயே 
மின்னே  மின்னேர்  இடைப்பிடியே  விளங்கும்  இதய  மலர்அனமே 
வேதம்  புகலும்  பசுங்கிளியே  விமலக்  குயிலே  இளமயிலே 
பொன்னே  எல்லாம்  வல்லதிரி  புரையே  பரையே  பூரணமே 
புனித  மான  புண்ணியமே  பொற்பே  கற்ப  கப்பூவே 
அன்னே  முன்னே  என்னேயத்  தமர்ந்த  அதிகை  அருட்சிவையே 
அரிய  பெரிய  நாயகிப்பெண்  ணரசே  என்னை  ஆண்டருளே. 
3

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com