திருவருட்பா  67. பழமலைப் பதிகம்

திருமால்  கமலத்  திருக்கண்மலர்  திகழு  மலர்த்தாட்  சிவக்கொழுந்தைக் 
கருமா  லகற்றுந்  தனிமருந்தைக்  கனக  சபையிற்  கலந்தஒன்றை 
அருமா  மணியை  ஆரமுதை  அன்பை  அறிவை  அருட்பெருக்கைக் 
குருமா  மலையைப்  பழமலையிற்  குலவி  யோங்கக்  கண்டேனே. 
1
வான  நடுவே  வயங்குகின்ற  மவுன  மதியை  மதிஅமுதைத் 
தேனை  அளிந்த  பழச்சுவையைத்  தெய்வ  மணியைச்  சிவபதத்தை 
ஊனம்  அறியார்  உளத்தொளிரும்  ஒளியை  ஒளிக்கும்  ஒருபொருளை 
ஞான  மலையைப்  பழமலைமேல்  நண்ணி  விளங்கக்  கண்டேனே. 
2
தவள  நிறத்துத்  திருநீறு  தாங்கு  மணித்தோள்  தாணுவைநம் 
குவளை  விழித்தாய்  ஒருபுறத்தே  குலவ  விளங்கும்  குருமணியைக் 
கவள  மதமா  கரியுரிவைக்  களித்த  மேனிக்  கற்பகத்தைப் 
பவள  மலையைப்  பழமலையிற்  பரவி  ஏத்திக்  கண்டேனே. 
3
இளைத்த  இடத்தில்  உதவிஅன்பர்  இடத்தே  இருந்த  ஏமவைப்பை 
வளைத்த  மதின்மூன்  றெரித்தருளை  வளர்த்த  கருணை  வாரிதியைத் 
திளைத்த  யோகர்  உளத்தோங்கித்  திகழுந்  துரியா  தீதமட்டுங் 
கிளைத்த  மலையைப்  பழமலையிற்  கிளர்ந்து  வயங்கக்  கண்டேனே. 
4
மடந்தை  மலையாண்  மனமகிழ  மருவும்  பதியைப்  பசுபதியை 
அடர்ந்த  வினையின்  தொடக்கைஅறுத்  தருளும்  அரசை  அலைகடன்மேல் 
கிடந்த  பச்சைப்  பெருமலைக்குக்  கேடில்  அருள்தந்  தகம்புறமும் 
கடந்த  மலையைப்  பழமலைமேற்  கண்கள்  களிக்கக்  கண்டேனே. 
5
துனியும்  பிறவித்  தொடுவழக்குஞ்  சோர்ந்து  விடவுந்  துரியவெளிக் 
கினியும்  பருக்குங்  கிடையாத  இன்பம்  அடைந்தே  இருந்திடவும் 
பனியுந்  திமய  மலைப்பச்சைப்  படர்ந்த  பவளப்  பருப்பதத்தைக் 
கனியுஞ்  சிலையுங்  கலந்தஇடம்  எங்கே  அங்கே  கண்டேனே. 
6
கருணைக்  கடலை  அக்கடலிற்  கலந்த  அமுதை  அவ்வமுதத் 
தருணச்  சுவையை  அச்சுவையிற்  சார்ந்த  பயனைத்  தனிச்சுகத்தை 
வருணப்  பவளப்  பெருமலையை  மலையிற்  பச்சை  மருந்தொருபால் 
பொருணச்  சுறவே  பழமலையிற்  பொருந்தி  யோங்கக்  கண்டேனே. 
7
என்னார்  உயிரிற்  கலந்துகலந்  தினிக்கும்  கரும்பின்  கட்டிதனைப் 
பொன்னார்  வேணிக்  கொழுங்கனியைப்  புனிதர்உளத்தில்  புகுங்  களிப்பைக் 
கன்னார்  உரித்துப்  பணிகொண்ட  கருணைப்  பெருக்கைக்  கலைத்தெளிவைப் 
பன்னா  கப்பூண்  அணிமலையைப்  பழைய  மலையிற்  கண்டேனே. 
8
நல்ல  மனத்தே  தித்திக்க  நண்ணும்  கனியை  நலம்புரிந்தென் 
அல்லல்  அகற்றும்  பெருவாழ்வை  அன்பால்  இயன்ற  அருமருந்தைச் 
சொல்ல  முடியாத்  தனிச்சுகத்தைத்  துரிய  நடுவே  தோன்றுகின்ற 
வல்ல  மலையைப்  பழமலையில்  வயங்கி  யோங்கக்  கண்டேனே. 
9
ஆதி  நடுவு  முடிவுமிலா  அருளா  னந்தப்  பெருங்கடலை 
ஓதி  உணர்தற்  கரியசிவ  யோகத்  தெழுந்த  ஒருசுகத்தைப் 
பாதி  யாகி  ஒன்றாகிப்  படர்ந்த  வடிவைப்  பரம்பரத்தைச் 
சோதி  மலையைப்  பழமலையிற்  சூழ்ந்து  வணங்கிக்  கண்டேனே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com