
உலகம் புரக்கும் பெருமான்தன் உளத்தும் புயத்தும் அமர்ந்தருளி
உவகை அளிக்கும் பேரின்ப உருவே எல்லாம் உடையாளே
திலகம் செறிவாள் நுதற்கரும்பே தேனே கனிந்த செழுங்கனியே
தெவிட்டா தன்பர் உளத்துள்ளே தித்தித் தெழும்ஓர் தெள்ளமுதே
மலகஞ் சுகத்தேற் கருளளித்த வாழ்வே என்கண் மணியேஎன்
வருத்தந் தவிர்க்க வரும்குருவாம் வடிவே ஞான மணிவிளக்கே
சலகந் தரம்போற் கருணைபொழி தடங்கண் திருவே கணமங்கைத்
தாயே சரணம் சரணம் இது தருணம் கருணை தருவாயே.



