திருவருட்பா  50. போற்றித் திருவிருத்தம்

கங்கையஞ்  சடைசேர்  முக்கட்  கரும்பருள்  மணியே  போற்றி 
அங்கையங்  கனியே  போற்றி  அருட்பெருங்  கடலே  போற்றி 
பங்கையன்  முதலோர்  போற்றும்  பரம்பரஞ்  சுடரே  போற்றி 
சங்கைதீர்த்  தருளும்  தெய்வச்  சரவண  பவனே  போற்றி. 
1
பனிப்பற  அருளும்  முக்கட்  பரஞ்சுடர்  ஒளியே  போற்றி 
இனிப்புறு  கருணை  வான்தேன்  எனக்கருள்  புரிந்தாய்  போற்றி 
துனிப்பெரும்  பவந்தீர்த்  தென்னைச்  சுகம்பெற  வைத்தோய்  போற்றி 
தனிப்பெருந்  தவமே  போற்றி  சண்முகத்  தரசே  போற்றி. 
2
மணப்புது  மலரே  தெய்வ  வான்சுவைக்  கனியே  போற்றி 
தணப்பற  அடியர்க்  கின்பம்  தரும்ஒரு  தருவே  போற்றி 
கணப்பெருந்  தலைவர்  ஏத்தும்  கழற்பதத்  தரசே  போற்றி 
குணப்பெருங்  குன்றே  போற்றி  குமரசற்  குருவே  போற்றி. 
3
தவம்பெறு  முனிவருள்ளத்  தாமரை  அமர்ந்தோய்  போற்றி 
பவம்பெறுஞ்  சிறியேன்  தன்னைப்  பாதுகாத்  தளித்தோய்  போற்றி 
நவம்பெறு  நிலைக்கும்  மேலாம்  நண்ணிய  நலமே  போற்றி 
சிவம்பெறும்  பயனே  போற்றி  செங்கதிர்  வேலோய்  போற்றி. 
4
மூவடி  வாகி  நின்ற  முழுமுதற்  பரமே  போற்றி 
மாவடி  அமர்ந்த  முக்கண்  மலைதரு  மணியே  போற்றி 
சேவடி  வழுத்தும்  தொண்டர்  சிறுமைதீர்த்  தருள்வோய்  போற்றி 
தூவடி  வேல்கைக்  கொண்ட  சுந்தர  வடிவே  போற்றி 
5
விண்ணுறு  சுடரே  என்னுள்  விளங்கிய  விளக்கே  போற்றி 
கண்ணுறு  மணியே  என்னைக்  கலந்தநற்  களிப்பே  போற்றி 
பண்ணுறு  பயனே  என்னைப்  பணிவித்த  மணியே  போற்றி 
எண்ணுறும்  அடியார்  தங்கட்  கினியதெள்  அமுதே  போற்றி. 
6
மறைஎலாம்  பரவ  நின்ற  மாணிக்க  மலையே  போற்றி 
சிறைஎலாம்  தவிர்ந்து  வானோர்  திருவுறச்  செய்தோய்  போற்றி 
குறைஎலாம்  அறுத்தே  இன்பம்  கொடுத்தஎன்  குருவே  போற்றி 
துறைஎலாம்  விளங்கு  ஞானச்  சோதியே  போற்றி  போற்றி. 
7
தாருகப்  பதகன்  தன்னைத்  தடிந்தருள்  செய்தோய்  போற்றி 
வேருகச்  சூர  மாவை  வீட்டிய  வேலோய்  போற்றி 
ஆருகச்  சமயக்  காட்டை  அழித்தவெங்  கனலே  போற்றி 
போருகத்  தகரை  ஊர்ந்த  புண்ணிய  மூர்த்தி  போற்றி. 
8
சிங்கமா  முகனைக்  கொன்ற  திறலுடைச்  சிம்புள்  போற்றி 
துங்கவா  ரணத்தோன்  கொண்ட  துயர்தவிர்த்  தளித்தாய்  போற்றி 
செங்கண்மால்  மருக  போற்றி  சிவபிரான்  செல்வ  போற்றி 
எங்கள்ஆர்  அமுதே  போற்றி  யாவர்க்கும்  இறைவ  போற்றி. 
9
முத்தியின்  முதல்வ  போற்றி  மூவிரு  முகத்த  போற்றி 
சத்திவேற்  கரத்த  போற்றி  சங்கரி  புதல்வ  போற்றி 
சித்திதந்  தருளும்  தேவர்  சிகாமணி  போற்றி  போற்றி 
பத்தியின்  விளைந்த  இன்பப்  பரம்பர  போற்றி  போற்றி. 
10
தெருளுடை  யோர்க்கு  வாய்த்த  சிவானந்தத்  தேனே  போற்றி 
பொருளுடை  மறையோர்  உள்ளம்  புகுந்தபுண்  ணியமே  போற்றி 
மருளுடை  மனத்தி  னேனை  வாழ்வித்த  வாழ்வே  போற்றி 
அருளுடை  அரசே  எங்கள்  அறுமுகத்  தமுதே  போற்றி. 
11
பொய்யனேன்  பிழைகள்  எல்லாம்  பொறுத்திடல்  வேண்டும்  போற்றி 
கையனேன்  தன்னை  இன்னும்  காத்திடல்  வேண்டும்  போற்றி 
மெய்யனே  மெய்யர்  உள்ளம்  மேவிய  விளைவே  போற்றி 
ஐயனே  அப்ப  னேஎம்  அரசனே  போற்றி  போற்றி 
12
முருகநின்  பாதம்  போற்றி  முளரியங்  கண்ணற்  கன்பாம் 
மருகநின்  கழல்கள்  போற்றி  வானவர்  முதல்வ  போற்றி 
பெருகருள்  வாரி  போற்றி  பெருங்குணப்  பொருப்பே  போற்றி 
தருகநின்  கருணை  போற்றி  சாமிநின்  அடிகள்  போற்றி. 
13
கோதிலாக்  குணத்தோய்  போற்றி  குகேசநின்  பாதம்  போற்றி 
தீதிலாச்  சிந்தை  மேவும்  சிவபரஞ்  சோதி  போற்றி 
போதில்நான்  முகனும்  காணாப்  பூரண  வடிவ  போற்றி 
ஆதிநின்  தாள்கள்  போற்றி  அநாதிநின்  அடிகள்  போற்றி. 
14
வேதமும்  கலைகள்  யாவும்  விளம்பிய  புலவ  போற்றி 
நாதமும்  கடந்து  நின்ற  நாதநின்  கருணை  போற்றி 
போதமும்  பொருளும்  ஆகும்  புனிதநின்  பாதம்  போற்றி 
ஆதரம்  ஆகி  என்னுள்  அமர்ந்தஎன்  அரசே  போற்றி. 
15

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com