
திவசங்கள் தொறும்கொண்டிடு தீமைப்பிணி தீரும்
பவசங்கடம் அறும்இவ்விக பரமும்புகழ் பரவும்
கவசங்கள்எ னச்சூழ்ந்துறு கண்ணேறது தவிரும்
சிவசண்முக எனவேஅருள் திருநீறணிந் திடிலே.
மால்ஏந்திய குழலார்தரு மயல்போம்இடர் அயல்போம்
கோல்ஏந்திய அரசாட்சியும் கூடும்புகழ் நீடும்
மேல்ஏந்திய வானாடர்கள் மெலியாவிதம் ஒருசெவ்
வேல்ஏந்திய முருகாஎன வெண்றணிந் திடிலே.
தவம்உண்மையொ டுறும்வஞ்சகர் தம்சார்வது தவிரும்
நவம்அண்மிய அடியாரிடம் நல்கும்திறன் மல்கும்
பவனன்புனல் கனல்மண்வெளி பலவாகிய பொருளாம்
சிவசண்முக எனவேஅருள் திருநீறனிந் திடிலே.
துயில்ஏறிய சோர்வும்கெடும் துயரம்கெடும் நடுவன்
கையில்ஏறிய பாசம்துணி கண்டேமுறித் திடுமால்
குயில்ஏறிய பொழில்சூழ்திருக் குன்றேறி நடக்கும்
மயில்ஏறிய மணியேஎன வளர்நீறணிந் திடிலே.
தேறாப்பெரு மனமானது தேறுந்துயர் மாறும்
மாறாப்பிணி மாயும்திரு மருவும்கரு ஒருவும்
வீறாப்பொடு வருசூர்முடி வேறாக்கிட வரும்ஓர்
ஆறாக்கரப் பொருளேஎன அருள்நீறணிந் திடிலே.
அமராவதி இறையோடுநல் அயனுந்திரு மாலும்
தமராகுவர் சிவஞானமுந் தழைக்குங்கதி சாரும்
எமராஜனை வெல்லுந்திறல் எய்தும்புகழ் எய்தும்
குமராசிவ குருவேஎனக் குளிர்நீறணிந் திடிலே.
மேலாகிய உலகத்தவர் மேவித்தொழும் வண்ணம்
மாலாகிய இருள்நீங்கிநல் வாழ்வைப்பெறு வார்காண்
சீலாசிவ லீலாபர தேவாஉமை யவள்தன்
பாலாகதிர் வேலாஎனப் பதிநீறணிந் திடிலே.
அகமாறிய நெறிசார்குவர் அறிவாம்உரு அடைவார்
மிகமாறிய பொறியின்வழி மேவாநல மிகுவார்
சகமாறினும் உயர்வானிலை தாமாறினும் அழியார்
முகமாறுடை முதல்வாஎன முதிர்நீறணிந் திடிலே.
சிந்தாமணி நிதிஐந்தரு செழிக்கும்புவ னமும்ஓர்
நந்தாஎழில் உருவும்பெரு நலனும்கதி நலனும்
இந்தாஎனத் தருவார்தமை இரந்தார்களுக் கெல்லாம்
கந்தாசிவன் மைந்தாஎனக் கனநீறணிந் திடிலே.
எண்ணார்புரம் எரித்தார்அருள் எய்தும்திரு நெடுமால்
நண்ணாததோர் அடிநீழலில் நண்ணும்படி பண்ணும்
பண்ணார்மொழி மலையாள்அருள் பாலாபனி ரண்டு
கண்ணாஎம தண்ணாஎனக் கனநீறணிந் திடிலே.



