திருவருட்பா  30. ஆற்றாப் புலம்பல்

அண்ணாவோ  என்  அருமை  ஐயாவோ  பன்னிரண்டு 
கண்ணாவோ  வேல்பிடித்த  கையாவோ  செம்பவள 
வண்ணாவோ  நற்றணிகை  மன்னாவோஎன்றென்றே 
எண்ணாவோ  துன்பத்  திருங்கடற்குள்  மன்னினனே. 
1
மன்னப்பார்  போற்று  மணியேநின்  பொன்னருளைத் 
துன்னப்பா  ராது  சுழன்றேன்  அருணைகிரி 
தன்னப்பா  நற்றணிகை  தன்னில்  அமர்ந்தருளும் 
என்னப்பா  இன்னும்  இந்த  ஏழைக்  கிரங்காயோ. 
2
காய்நின்ற  நெஞ்சக்  கடையேன்  திருத்தணிகை 
வாய்நின்  றுனதுபுகழ்  வாய்பாடக்  கைகுவித்துத் 
தூய்நின்றே  தாளைத்தொழுதாடித்  துன்பம்எலாம் 
போய்நின்  றடைவேனோ  புண்ணியநின்  பொன்னருளே. 
3
பொன்பிணிக்கும்  நெஞ்சப்  புலையேனை  இவ்வுலகில் 
வன்பிணிக்கோ  பெற்று  வளர்த்தாய்  அறியேனே 
என்பிணைத்தார்  வள்ளற்  கினிமை  பெறும்மணியே 
அன்பிணைத்தோர்  போற்றும்  அருட்டணிகை  மன்னவனே. 
4
வன்நோயும்  வஞ்சகர்தம்  வன்சார்பும்  வன்துயரும் 
என்னோயுங்  கொண்டதனை  எண்ணி  இடிவேனோ 
அன்னோ  முறைபோகி  ஐயா  முறையேயோ 
மன்னோ  முறைதணிகை  வாழ்வே  முறையேயோ. 
5

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com