
மாதர் மணியே மகளேநீ வாய்த்த தவந்தான் யாதறியேன்
வேதர் அனந்தர் மால்அனந்தர் மேவி வணங்கக் காண்பரியார்
நாதர் நடன நாயகனார் நல்லோர் உளத்துள் நண்ணுகின்றோர்
கோதர் அறியாத் தியாகர்தமைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
திருவில் தோன்றும் மகளேநீ செய்த தவந்தான் யார்அறிவார்
மருவில் தோன்றும் கொன்றையந்தார் மார்பர் ஒற்றி மாநகரார்
கருவில் தோன்றும் எங்கள்உயிர் காக்க நினைத்த கருணையினார்
குருவிற் றோன்றும் தியாகர்தமைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
என்னா ருயிர்போல் மகளேநீ என்ன தவந்தான் இயற்றினையோ
பொன்னார் புயனும் மலரோனும் போற்றி வணங்கும் பொற்பதத்தார்
தென்னார் ஒற்றித் திருநகரார் தியாகர் எனும்ஓர் திருப்பெயரார்
கொன்னார் சூலப் படையவரைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
சேலை நிகர்கண் மகளேநீ செய்த தவந்தான் செப்பரிதால்
மாலை அயனை வானவரை வருத்தும் படிக்கு மதித்தெழுந்த
வேலை விடத்தை மிடற்றணிந்தார் வீட்டு நெறியாம் அரசியற்செங்
கோலை அளித்தார் அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
தேனேர் குதலை மகளேநீ செய்த தவந்தான் எத்தவமோ
மானேர் கரத்தார் மழவிடைமேல் வருவார் மருவார் கொன்றையினார்
பானேர் நீற்றர் பசுபதியார் பவள வண்ணர் பல்சடைமேல்
கோனேர் பிறையார் அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
வில்லார் நுதலாய் மகளேநீ மேலை நாட்செய் தவம்எதுவோ
கல்லார் உள்ளம் கலவாதார் காமன் எரியக் கண்விழித்தார்
வில்லார் விசையற் கருள்புரிந்தார் விளங்கும் ஒற்றி மேவிநின்றார்
கொல்லா நெறியார் அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
அஞ்சொற் கிளியே மகளேநீ அரிய தவமே தாற்றினையோ
வெஞ்சொற் புகலார் வஞ்சர்தமை மேவார் பூவார் கொன்றையினார்
கஞ்சற் கரியார் திருஒற்றிக் காவல் உடையார் இன்மொழியால்
கொஞ்சத் தருவார் அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
பூவாய் வாட்கண் மகளேநீ புரிந்த தவந்தான் எத்தவமோ
சேவாய் விடங்கப் பெருமானார் திருமால் அறியாச் சேவடியார்
காவாய்ந் தோங்கும் திருஒற்றிக் காவல் உடையார் எவ்வௌர்க்கும்
கோவாய் நின்றார் அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
மலைநேர் முலையாய் மகளேநீ மதிக்கும் தவமே தாற்றினையோ
தலைநேர் அலங்கல் தாழ்சடையார் சாதி அறியாச் சங்கரனார்
இலைநேர் தலைமுன் றொளிர்படையார் எல்லாம் உடையார் எருக்கின்மலர்க்
குலைநேர் சடையார் அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
மயிலின் இயல்சேர் மகளேநீ மகிழ்ந்து புரிந்த தெத்தவமோ
வெயிலின் இயல்சேர் மேனியினார் வெண் றுடையார் வெள்விடையார்
பயிலின் மொழியாள் பாங்குடையார் பணைசூழ் ஒற்றிப் பதிஅமர்ந்தார்
குயிலிற் குலவி அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.



