
ஓணம் உடையான் தொழுதேத்தும் ஒற்றி நகர்வாழ் உத்தமர்பால்
மாண வலியச் சென்றென்னை மருவி அணைவீர் என்றேநான்
நாணம் விடுத்து நவின்றாலும் நாமார் நீயார் என்பாரேல்
ஏண விழியாய் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
காதம் மணக்குங் கடிமலர்ப்பூங் காவார் ஒற்றிக் கண்நுதலார்
போதம் மணக்கும் புனிதர்அவர் பொன்னம் புயத்தைப் புணரேனேல்
சீதம் மணக்குங் குழலாய்என் சிந்தை மயங்கித் தியங்குமடி
ஏதம் மணக்கும் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
பண்ணார் மொழியார் உருக்காட்டும் பணைசூழ் ஒற்றிப் பதியினர்என்
கண்ணார் மணிபோன் றென்உயிரில் கலந்து வாழும் கள்வர்அவர்
நண்ணார் இன்னும் திருஅனையாய் நான்சென் றிடினும் நலம்அருள
எண்ணார் ஆயின் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
ஊர்என் றுடையீர் ஒற்றிதனை உலக முடையீர் என்னைஅணை
வீர்என் றவர்முன் பலர்அறிய வெட்கம் விடுத்துக் கேட்டாலும்
சேர்என் றுரைத்தால் அன்றிஅவர் சிரித்துத் திருவாய் மலர்ந்தெனைநீ
யார்என் றுரைத்தால் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
சோமன் நிலவுந் தூய்ச்சடையார் சொல்லிற் கலந்த சுவையானார்
சேமம் நிலவுந் திருஒற்றித் தேவர் இன்னும் சேர்ந்திலர்நான்
தாமம் அருள்வீர் என்கினும்இத் தருணத் திசையா தென்பாரேல்
ஏம முலையாய் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
வில்லை மலையாய்க் கைக்கொண்டார் விடஞ்சூழ் கண்டர் விரிபொழில்சூழ்
தில்லை நகரார் ஒற்றியுளார் சேர்ந்தார் அல்லர் நான்அவர்பால்
ஒல்லை அடைந்து நின்றாலும் உன்னை அணைதல் ஒருபோதும்
இல்லை எனிலோ என்செய்கேன் என்னை மடவார் இகழாரோ.
திருந்தால் அமர்ந்தார் திருப்புலியூர்ச் சிற்றம் பலத்தில் திருநடம்செய்
மருந்தார் ஒற்றி வாணர்இன்னும் வந்தார் அல்லர் நான்போய்என்
அருந்தாழ் வகல அருள்வீரென் றாலும் ஒன்றும் அறியார்போல்
இருந்தால் அம்மா என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
அசையா தமர்ந்தும் அண்டமெலாம் அசையப் புலியூர் அம்பலத்தே
நசையா நடிக்கும் நாதர்ஒற்றி நாட்டார் இன்னும் நண்ணிலர்நான்
இசையால் சென்றிங் கென்னைஅணை வீர்என் றுரைப்பேன் எனில்அதற்கும்
இசையார் ஆகில் என்செய்கேன் என்னை மடவார் இகழாரோ.
மாற்கா தலிக்கும் மலர்அடியார் மாசற் றிலங்கும் மணிஅனையார்
சேற்கா தலிக்கும் வயல்வளஞ்சூழ் திருவாழ் ஒற்றித் தேவர்அவர்
பாற்கா தலித்துச் சென்றாலும் பாவி அடிநீ யான்அணைதற்
கேற்காய் என்றால் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
மாழை மலையைச் சிலையாக வளைத்தார் அன்பர் தமைவருத்தும்
ஊழை அழிப்பார் திருஒற்றி ஊரார் இன்னும் உற்றிலர்என்
பாழை அகற்ற நான்செலினும் பாரா திருந்தால் பைங்கொடியே
ஏழை அடிநான் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.



