
பொன்னஞ் சிலையால் புரம்எறித்தார் பொழில்சூழ் ஒற்றிப் புண்ணியனார்
முன்நஞ் சருந்தும் முக்கணனார் மூவர் அறியா முதல்வர்அவர்
இன்னஞ் சிலநாள் சென்றிடுமோ இலதேல் இன்று வருவாரோ
உன்னஞ் சிறந்தீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
பெற்றி அறியாப் பிரமனுக்கும் பெரிய மாற்கும் பெறஅறியார்
புற்றின் அரவார் கச்சைஉடைப் புனிதர் என்னைப் புணரும்இடம்
தெற்றி மணிக்கால் விளங்குதில்லைச் சிற்றம் பலமோ அன்றிஇந்த
ஒற்றி நகரோ சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
அளித்து மூன்று பிள்ளைகளால் அகிலம் நடக்க ஆட்டுவிப்பார்
தெளித்து நதியைச் சடைஇருத்தும் தேவர் திருவாழ் ஒற்றியுளார்
களித்து மாலை கொடுப்பாரோ கள்ளி எனவே விடுப்பாரோ
ஒளித்தொன் றுரையீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
எண்தோள் இலங்கும் நீற்றணிய ரியார்க்கும் இறைவர் எனைஉடையார்
வண்டோ லிடும்பூங் கொன்றைஅணி மாலை மார்பர் வஞ்சமிலார்
தண்தோய் பொழில்சூழ் ஒற்றியினார் தமக்கும் எனக்கும் மணப்பொருத்தம்
உண்டோ இலையோ சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
தவர்தாம் வணங்கும் தாளுடையார் தாய்போல் அடியர் தமைப்புரப்பார்
பவர்தாம் அறியாப் பண்புடையார் பணைசூழ் ஒற்றிப் பதிஅமர்ந்தார்
அவர்தாம் மீண்டுற் றணைவாரோ அன்றி நான்போய் அணைவேனோ
உவர்தாம் அகற்றும் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
பைத்த அரவப் பணிஅணிவார் பணைசூழ் ஒற்றிப் பதிமகிழ்வார்
மைத்த மிடற்றார் அவர்தமக்கு மாலை இடவே நான்உளத்தில்
வைத்த கருத்து முடிந்திடுமோ வறிதே முடியா தழிந்திடுமோ
உய்த்த மதியால் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
தக்க விதியின் மகத்தோடும் தலையும் அழித்தார் தண்அளியார்
மிக்க வளஞ்சேர் திருவொற்றி மேவும் பரமர் வினையேன்தன்
துக்கம் அகலச் சுகம்அளிக்கும் தொடர்பும் உண்டோ இலையோதான்
ஒக்க அறிந்தீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
வெண்மை நீற்றர் வெள்ளேற்றர் வேத கீதர் மெய்உவப்பார்
வண்மை உடையார் ஒற்றியினார் மருவ மருவி மனமகிழ்ந்து
வண்மை அகலா தருட்கடல்நீ ராடு வேனோ ஆடேனோ
உண்மை அறிந்தீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
ஆர்த்து மலிநீர் வயல்ஒற்றி அமர்ந்தார் மதியோ டரவைமுடிச்
சேர்த்து நடிப்பார் அவர்தமைநான் தேடி வலியச் சென்றிடினும்
பார்த்தும் பாரா திருப்பாரோ பரிந்து வாஎன் றுரைப்பாரோ
ஓர்த்து மதிப்பீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
அள்ள மிகும்பேர் அழகுடையார் ஆனை உரியார் அரிக்கரியார்
வெள்ள மிகும்பொன் வேணியினார் வியன்சேர் ஒற்றி விகிர்தர் அவர்
கள்ள முடனே புணர்வாரோ காத லுடனே கலப்பாரோ
உள்ளம் அறியேன் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.



