திருவருட்பா  14. திருக்கோலச் சிறப்பு

பொன்னென்  றொளிரும்  புரிசடையார்  புனைநூல்  இடையார்  புடைஉடையார் 
மன்னென்  றுலகம்  புகழ்ஒற்றி  வாணர்  பவனி  வரக்கண்டேன் 
மின்னென்  றிலங்கு  மாதரெலாம்  வேட்கை  அடைய  விளங்கிநின்ற(து) 
இன்னென்  றறியேன்  அவரழகை  என்னென்  றுரைப்ப  தேந்திழையே. 
1
அள்ளிக்  கொடுக்கும்  கருணையினார்  அணிசேர்  ஒற்றி  ஆலயத்தார் 
வள்ளிக்  குவந்தோன்  தனைஈன்ற  வள்ளல்  பவனி  வரக்கண்டேன் 
துள்ளிக்  குதித்தென்  மனம்அவரைச்  சூழ்ந்த  தின்னும்  வந்ததிலை 
எள்ளிக்  கணியா  அவரழகை  என்னென்  றுரைப்ப  தேந்திழையே. 
2
அனத்துப்  படிவம்  கொண்டயனும்  அளவா  முடியார்  வடியாத 
வனத்துச்  சடையார்  திருஒற்றி  வாணர்  பவனி  வரக்கண்டேன் 
மனத்துக்  கடங்கா  தாகில்அதை  வாய்கொண்  டுரைக்க  வசமாமோ 
இனத்துக்  குவப்பாம்  அவரழகை  என்னென்  றுரைப்ப  தேந்திழையே. 
3
கொழுதி  அளிதேன்  உழுதுண்ணும்  கொன்றைச்  சடையார்  கூடலுடை 
வழுதி  மருகர்  திருஒற்றி  வாணர்  பவனி  வரக்கண்டேன் 
பழுதில்  அவனாந்  திருமாலும்  படைக்குங்  கமலப்  பண்ணவனும் 
எழுதி  முடியா  அவரழகை  என்னென்  றுரைப்ப  தேந்திழையே. 
4
புன்னை  இதழிப்  பொலிசடையார்  போக  யோகம்  புரிந்துடையார் 
மன்னும்  விடையார்  திருஒற்றி  வாணர்  பவனி  வரக்கண்டேன் 
உன்னும்  உடலம்  குளிர்ந்தோங்க  உவகை  பெருக  உற்றுநின்ற 
என்னை  விழுங்கும்  அவரழகை  என்னென்  றுரைப்ப  தேந்திழையே. 
5
சொல்லுள்  நிறைந்த  பொருளானார்  துய்யர்  உளத்தே  துன்னிநின்றார் 
மல்லல்  வயற்சூழ்  திருஒற்றி  வாணர்  பவனி  வரக்கண்டேன் 
கல்லும்  மரமும்  ஆனந்தக்  கண்ர்  கொண்டு  கண்டதெனில் 
எல்லை  யில்லா  அவரழகை  என்னென்  றுரைப்ப  தேந்திழையே. 
6
நீர்க்கும்  மதிக்கும்  நிலையாக  நீண்ட  சடையார்  நின்றுநறா 
ஆர்க்கும்  பொழில்சூழ்  திருஒற்றி  வாணர்  பவனி  வரக்கண்டேன் 
பார்க்கும்  அரிக்கும்  பங்கயற்கும்  பன்மா  தவர்க்கும்  பண்ணவர்க்கும் 
யார்க்கும்  அடங்கா  அவரழகை  என்னென்  றுரைப்ப  தேந்திழையே. 
7
கலக  அமணக்  கைதவரைக்  கழுவி  லேற்றுங்  கழுமலத்தோன் 
வலகை  குவித்துப்  பாடும்ஒற்றி  வாணர்  பவனி  வரக்கண்டேன் 
உலக  நிகழ்வைக்  காணேன்என்  உள்ளம்  ஒன்றே  அறியுமடி 
இலகும்  அவர்தந்  திருஅழகை  என்னென்  றுரைப்ப  தேந்திழையே. 
8
கண்ணன்  அறியாக்  கழற்பதத்தார்  கண்ணார்  நெற்றிக்  கடவுள்அருள் 
வண்ணம்  உடையார்  திருஒற்றி  வாணர்  பவனி  வரக்கண்டேன் 
நண்ண  இமையார்  எனஇமையா  நாட்டம்  அடைந்து  நின்றனடி 
எண்ண  முடியா  அவரழகை  என்னென்  றுரைப்ப  தேந்திழையே. 
9
மாழை  மணித்தோள்  எட்டுடையார்  மழுமான்  ஏந்தும்  மலர்க்கரத்தார் 
வாழை  வளஞ்சூழ்  ஒற்றியூர்  வாணர்  பவனி  வரக்கண்டேன் 
யாழை  மலைக்கும்  மொழிமடவார்  யாரும்  மயங்கிக்  கலைஅவிழ்ந்தார் 
ஏழை  யேன்நான்  அவரழகை  என்னென்  றுரைப்ப  தேந்திழையே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com