திருவருட்பா  11. குறி ஆராய்ச்சி

நந்தி  மகிழ்வாய்த்  தரிசிக்க  நடனம்  புரியும்  நாயகனார் 
அந்தி  நிறத்தார்  திருஒற்றி  அமர்ந்தார்  என்னை  அணைவாரோ 
புந்தி  இலள்என்  றணையாரோ  யாதுந்  தெரியேன்  புலம்புகின்றேன் 
சிந்தை  மகிழக்  குறமடவாய்  தெரிந்தோர்  குறிதான்  செப்புவையே. 
1
தரும  விடையார்  சங்கரனார்  தகைசேர்  ஒற்றித்  தனிநகரார் 
ஒருமை  அளிப்பார்  தியாகர்எனை  உடையார்  இன்று  வருவாரோ 
மருவ  நாளை  வருவாரோ  வாரா  தென்னை  மறப்பாரோ 
கருமம்  அறிந்த  குறமடவாய்  கணித்தோர்  குறிதான்  கண்டுரையே. 
2
ஆழி  விடையார்  அருளுடையார்  அளவிட்  டறியா  அழகுடையார் 
ஊழி  வரினும்  அழியாத  ஒற்றித்  தலம்வாழ்  உத்தமனார் 
வாழி  என்பால்  வருவாரோ  வறியேன்  வருந்த  வாராரோ 
தோழி  அனைய  குறமடவாய்  துணிந்தோர்  குறிநீ  சொல்லுவையே. 
3
அணியார்  அடியார்க்  கயன்முதலாம்  அமரர்க்  கெல்லாம்  அரியர்என்பாம் 
பணியார்  ஒற்றிப்  பதிஉடையார்  பரிந்தென்  முகந்தான்  பார்ப்பாரோ 
தணியாக்  காதல்  தவிர்ப்பாரோ  சார்ந்து  வரவு  தாழ்ப்பாரோ 
குணியா  எழில்சேர்  குறமடவாய்  குறிதான்  ஒன்றும்  கூறுவையே. 
4
பொன்னார்  புயத்துப்  போர்விடையார்  புல்லர்  மனத்துட்  போகாதார் 
ஒன்னார்  புரந்தீ  உறநகைத்தார்  ஒற்றி  எனும்ஓர்  ஊர்அமர்ந்தார் 
என்னா  யகனார்  எனைமருவல்  இன்றோ  நாளை  யோஅறியேன் 
மின்னார்  மருங்குல்  குறமடவாய்  விரைந்தோர்  குறிநீ  விளம்புவையே. 
5
பாலிற்  றெளிந்த  திருநீற்றர்  பாவ  நாசர்  பண்டரங்கர் 
ஆலிற்  றெளிய  நால்வர்களுக்  கருளுந்  தெருளர்  ஒற்றியினார் 
மாலிற்  றெளியா  நெஞ்சகத்தேன்  மருவிக்  கலக்க  வருவாரோ 
சேலிற்  றெளிகட்  குறப்பாவாய்  தெரிந்தோர்  குறிநீ  செப்புகவே. 
6
நிருத்தம்  பயின்றார்  நித்தியனார்  நேச  மனத்தர்  நீலகண்டர் 
ஒருத்தர்  திருவாழ்  ஒற்றியினார்  உம்பர்  அறியா  என்கணவர் 
பொருத்தம்  அறிந்தே  புணர்வாரோ  பொருத்தம்  பாரா  தணைவாரோ 
வருத்தந்  தவிரக்  குறப்பாவாய்  மகிழ்ந்தோர்  குறிதான்  வழுத்துவையே. 
7
கமலன்  திருமால்  ஆதியர்கள்  கனவி  னிடத்துங்  காண்பரியார் 
விமலர்  திருவாழ்  ஒற்றியிடை  மேவும்  பெருமை  வித்தகனார் 
அமலர்  அவர்தாம்  என்மனைக்கின்  றணைகு  வாரோ  அணையாரோ 
தமல  மகன்ற  குறப்பாவாய்  தனித்தோர்  குறிதான்  சாற்றுவையே. 
8
வன்னி  இதழி  மலர்ச்சடையார்  வன்னி  எனஓர்  வடிவுடையார் 
உன்னி  உருகும்  அவர்க்கெளியார்  ஒற்றி  நகர்வாழ்  உத்தமனார் 
கன்னி  அழித்தார்  தமைநானுங்  கலப்பேன்  கொல்லோ  கலவேனோ 
துன்னி  மலைவாழ்  குறமடவாய்  துணிந்தோர்  குறிநீ  சொல்லுவையே. 
9
கற்றைச்  சடைமேல்  கங்கைதனைக்  கலந்தார்  கொன்றைக்  கண்ணியினார் 
பொற்றைப்  பெருவிற்  படைஉடையார்  பொழில்சூழ்  ஒற்றிப்  புண்ணியனார் 
இற்றைக்  கடியேன்  பள்ளியறைக்  கெய்து  வாரோ  எய்தாரோ 
சுற்றுங்  கருங்கட்  குறமடவாய்  சூழ்ந்தோர்  குறிநீ  சொல்லுவையே. 
10
அரவக்  கழலார்  கருங்களத்தார்  அஞ்சைக்  களத்தார்  அரிபிரமர் 
பரவப்  படுவார்  திருஒற்றிப்  பதியில்  அமர்ந்தார்  பாசுபதர் 
இரவு  வருமுன்  வருவாரோ  என்னை  அணைதற்  கிசைவாரோ 
குரவ  மணக்குங்  குறமடவாய்  குறிநீ  ஒன்று  கூறுவையே. 
11

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com