
திருவார் பொன்னம் பலநடுவே தெள்ளார் அமுதத் திரள்அனைய
உருவார் அறிவா னந்தநடம் உடையார் அடியார்க் குவகைநிலை
தருவார் அவர்தம் திருமுகத்தே ததும்பும் இளவெண் ணகைகண்டேன்
இருவா தனைஅற் றந்தோநான் இன்னும் ஒருகால் காண்பேனோ.
பொன்நா யகனும் புரந்தரனும் பூவாழ் பவனும் புகழ்ந்தேத்த
மின்னார் பொன்னம் பலநடுவே விளங்கும் கருணை விழிவழங்கும்
அன்னார் அறிவா னந்தநடம் ஆடும் கழல்கண் டகங்குளிர்ந்தேன்
என்நா யகனார் அவர்கழலை இன்னும் ஒருகால் காண்பேனோ.
தாயிற் பெரிய கருணையினார் தலைமா லையினார் தாழ்சடையார்
வாயிற் கினிய புகழுடைய வள்ளல் அவர்தந் திருஅழகைக்
கோயிற் கருகே சென்றுமனம் குளிரக் கண்டேன் பிரிவுற்றேன்
ஈயில் சிறியேன் அவர் அழகை இன்னும் ஒருகால் காண்பேனோ.
புன்கண் அகற்றும் மெய்யடியார் போற்றும் பொன்னம் பலநடுவே
வன்கண் அறியார் திருநடஞ்செய் வரதர் அமுதத் திருமுகத்தை
முன்கண் உலகில் சிறியேன்செய் முழுமா தவத்தால் கண்டேன்நான்
என்கண் அனையார் அவர்முகத்தை இன்னும் ஒருகால் காண்பேனோ.
அன்புற் றடியார் தொழுதேத்த அணியார் மணிப்பொன் அம்பலத்தே
வன்புற் றழியாப் பெருங்கருணை மலையார் தலையார் மாலையினார்
மன்புற் றரவார் கச்சிடையின் வயங்க நடஞ்செய் வதுகண்டேன்
இன்புற் றடியேன் அவர்நடத்தை இன்னும் ஒருகால் காண்பேனோ.
இம்மா நிலத்தில் சிவபதமீ தென்னும் பொன்னம் பலநடுவே
அம்மால் அறியா அடிகள்அடி அசைய நடஞ்செய் வதுகண்டேன்
எம்மால் அறியப் படுவதல என்என் றுரைப்பேன் ஏழையன்யான்
எம்மான் அவர்தந் திருநடத்தை இன்னும் ஒருகால் காண்பேனோ.
சிறியேன் தவமோ எனைஈன்றாள் செய்த தவமோ யான்அறியேன்
மறியேர் கரத்தார் அம்பலத்தே வாழும் சிவனார் தமைக்கண்டேன்
பிறியேன் எனினும் பிரிந்தேன்நான் பேயேன் அந்தப் பிரிவினைக்கீழ்
எறியேன் அந்தோ அவர்தம்மை இன்னும் ஒருகால் காண்பேனோ.
அருளே வடிவாய் அம்பலத்தே ஆடும் பெருமான் அடிகள்தமைத்
தெருளே வடிவாம் அடியவர்போல் சிறியேன் கண்டேன் சீர்உற்றேன்
மருளே வடிவேன் ஆதலினால் மறந்தே பிரிந்தே மதிகெட்டேன்
இருளேர் மனத்தேன் அவர்தமைநான் இன்னும் ஒருகால் காண்பேனோ.
அன்னோ திருஅம் பலத்தேஎம் ஐயர் உருக்கண் டேன்அதுதான்
பொன்னோ பவளப் பொருப்பதுவோ புதுமா ணிக்க மணித்திரளோ
மின்னோ விளக்கோ விரிசுடரோ மேலை ஒளியோ என் உரைப்பேன்
என்னோ அவர்தந் திருஉருவை இன்னும் ஒருகால் காண்பேனோ.
பொன்என் றுரைக்கும் அம்பலத்தே புனித னார்தம் அழகியலை
உன்என் றுரைப்பேன் என்னேஎன் உள்ளம் சிறிதும் உணர்ந்ததிலை
மின்என் றுரைக்கும் படிமூன்று விளக்கும் மழுங்கும் எனில்அடியேன்
என்என் றுரைப்பேன் அவர்அழகை இன்னும் ஒருகால் காண்பேனோ.



