திருவருட்பா  82. அபராத விண்ணப்பம்

உலகம்  பரவும்  பொருளேஎன்  உறவே  என்றன்  உயிர்க்குயிரே 
இலகம்  பரத்தே  பரம்பரமாய்  இன்ப  நடஞ்செய்  எம்இறையே 
கலகம்  பரவும்  மனத்தேனைக்  கைவிட்  டிடநீ  கருதுதியோ 
திலகம்  பரவும்  நுதற்பாகன்  என்ப  தருளின்  திறத்தன்றே. 
1
அன்றோர்  பொருளாய்  அடியேனை  ஆட்கொண்  டருளி  அறிவளித்தாய் 
இன்றோ  சிறியேன்  பிழைகருதி  இரங்கா  தகற்ற  எண்ணுதியோ 
குன்றோர்  அனைய  குறைசெயினும்  கொண்டு  குலம்பே  சுதல்எந்தாய் 
நன்றோ  கருணைப்  பெருங்கடலே  ஆளாய்  இந்த  நாயினையே. 
2
நாய்க்குங்  கடையேன்  பிழைஅனைத்தும்  நாடில்  தவத்தால்  நல்கியநல் 
தாய்க்கும்  கோபம்  உறும்என்னில்  யாரே  யென்பால்  சலியாதார் 
வாய்க்கும்  கருணைக்  கடல்உடையாய்  உன்பால்  அடுத்தேன்  வலிந்தெளிய 
பேய்க்கும்  தயவு  புரிகின்றோய்  ஆள  வேண்டும்  பேதையையே. 
3
பேதைப்  பருவத்  தெனைவலியப்  பிடித்தாட்  கொண்ட  பெருமானே 
போதைக்  கழிப்பான்  வீண்புரியும்  புலையேன்  பிழையைப்  பொறுக்கிலையேல் 
வாதைப்  படும்என்  உயிரைஉன்றன்  மலர்த்தாள்  முன்னர்  மடிவித்தே 
ஓதைக்  கடல்சூழ்  உலகத்தே  பழிசூழ்  விப்பேன்  உரைத்தேனே. 
4
உரைத்தார்  சிலர்சின்  னாள்கழிய  உறுவேம்  என்ன  உரைத்தவரே 
நரைத்தார்  இறந்தார்  அவர்தம்மை  நான்கண்  டிருந்தும்  நாணாமே 
விரைத்தாள்  மலரைப்  பெறலாம்என்  றெண்ணி  வீணே  இளைக்கின்றேன் 
திரைத்தாழ்  கடலிற்  பெரும்பிழையே  செய்தேன்  என்ன  செய்வேனே. 
5
செய்வேன்  தீமை  நலம்ஒன்றும்  தெரியேன்  தெரிந்து  தெளிந்தோரை 
வைவேன்  அன்றி  வாழ்த்தேன்என்  வண்ணம்  இந்த  வண்ணம்எனில் 
உய்வேன்  என்ப  தெவ்வாறென்  உடையாய்  உய்வேன்  உய்வித்தால் 
நைவேன்  அலதிங்  கென்செய்வேன்  அந்தோ  எண்ணி  நலிவேனே. 
6
எண்ணி  நலிவேன்  நின்பாதம்  எந்நாள்  அடைவோம்  எனஎன்பால் 
நண்ணி  நலிவைத்  தவிராயேல்  என்செய்  திடுவேன்  நாயகனே 
கண்ணி  நலியப்  படும்பறவைக்  கால்போல்  மனக்கால்  கட்டுண்ணப் 
பண்ணி  நலஞ்சேர்  திருக்கூட்டம்  புகுத  எனினும்  பரிந்தருளே. 
7
பரியும்  மனத்தால்  கருணைநடம்  பரவுந்  தொண்டர்  பதப்பணியே 
புரியும்  இனத்தா  ரொடுங்கூடிப்  புனித  னாக  வேண்டும்எனத் 
திரியும்  அடிமைச்  சிறியேனுக்  கிரங்கா  திருந்தால்  சின்னாட்பின் 
எரியுங்  கொடுவாய்  நரகத்துக்  கென்செய்  வேன்என்  செய்வேனே. 
8
என்செய்  திடுவேன்  புலைநாயேன்  இயற்றும்  பிழைகள்  எல்லாம்நின் 
பொன்செய்  மலர்த்தாள்  துணைஅந்தோ  பொறுத்துக்  கருணை  புரியாதேல் 
புன்செய்  விளவிப்  பயனிலியாய்ப்  புறத்திற்  கிடத்தி  எனஅடியார் 
வன்செய்  உரையில்  சிரிப்பார்மற்  றதுகண்  டெங்ஙன்  வாழ்வேனே. 
9
வாழா  மனத்தின்  வழிசென்று  வாளா  நாளைக்  கழிக்கின்ற 
பாழாம்  உலகச்  சிறுநடையில்  பாவி  யேனைப்  பதிவித்தாய் 
ஊழாம்  எனில்எம்  பெருமானே  இன்னும்  வினையால்  ஒதிஅனையேன் 
ஏழாம்  நரகுக்  காளாவேன்  அல்லால்  புகல்என்  எளியேற்கே. 
10
எளியேன்  கருணைத்  திருநடஞ்செய்  இணைத்தாள்  மலர்கண்  டிதயமெலாம் 
களியேன்  கருங்கற்  பாறைஎனக்  கிடக்கின்  றேன்இக்  கடையேனை 
அளியே  பெருக  ஆளுதியோ  ஆள்கி  லாயோ  யாதொன்றும் 
தெளியேன்  அந்தோ  அந்தோஎன்  செய்வேன்  விலங்கிற்  சிறியேனே. 
11
சிறியேன்  பிழையைத்  திருவுளத்தே  தேர்ந்திங்  கென்னைச்  சீறுதியோ 
எறியேம்  எனக்கொண்  டிரங்குதியோ  இவ்வா  றவ்வா  றெனஒன்றும் 
அறியேன்  அவலக்  கடல்அழுந்தி  அந்தோ  அழுங்கி  அயர்கின்றேன் 
பிறியேன்  என்னைப்  பிரிக்கினும்பின்  துணையும்  காணேன்  பெருமானே. 
12
காணேன்  நினது  திருவருளைக்  கண்டார்  தமது  கழல்தலைமேல் 
பூணேன்  உலகச்  சிறுநடையில்  போந்து  பொய்யே  புகன்றந்தோ 
வீணே  சுழன்று  மெலிகின்றேன்  என்னே  இன்னல்  மிகச்சுமக்கும் 
தூணே  எனஇங்  கெனைவிதித்தாய்  எந்தாய்  யாது  சூழ்வேனே. 
13
சூழ்வேன்  நினது  கருணைநடம்  சூழும்  பெரியார்  தமைச்சூழ்ந்து 
வாழ்வேன்  எளியேன்  குறிப்பிந்த  வண்ணம்  எனது  மனக்குரங்கோ 
தாழ்வேன்  நினையும்  தாழ்விப்பேன்  அவலக்  கடலில்  சலியாமே 
வீழ்வேன்  என்றால்  எம்பெருமான்  இதற்கென்  செய்கேன்  வினையேனே. 
14
வினையே  பெருக்கிக்  கடைநாயேன்  விடயச்  செருக்கால்  மிகநீண்ட 
பனையே  எனநின்  றுலர்கின்றேன்  பாவி  யேனுக்  கருளுதியோ 
நினையே  நினையாப்  பிழைகருதி  நெகிழ  விடவே  நினைதியோ 
அனையே  அனையாய்  திருக்குறிப்பை  அறியேன்  ஈதென்  றடியேனே. 
15
அடியேன்  முடுகிச்  செயும்பிழைகள்  அனந்தம்  அவற்றை  அந்தோஇக் 
கொடியேன்  நினக்குந்தொறும்உள்ளம்  குமைந்து  நடுங்கிக்  குலைகின்றேன் 
செடியேன்  மனமோ  வினையோநின்  செயலோ  செய்கை  தெரியேன்வெண் 
பொடியே  திகழும்  வடிவுடையாய்  யாது  புரிவேன்  புலையேனே. 
16
புலையே  புரியும்  மனம்போன  போக்கே  அல்லால்  புண்ணியநல் 
நிலையே  அறியேன்  சிறியேனுக்  கருளல்  அழகோ  நிறைந்தகுண 
மலையே  மணியே  மருந்தேஎன்  வாழ்வே  எல்லாம்  வல்லோனே 
கலையே  கருதும்  கழலுடையாய்  அருளா  மையும்நின்  கடன்அன்றே. 
17
கடந்தாழ்  கயம்போல்  செருக்கிமயற்  கடலில்  அழுத்திக்  கடுவினையேன் 
மடந்தாழ்  மனத்தோ  டுலைகின்றேன்  கரைகண்  டேறும்  வகைஅறியேன் 
தொடர்ந்தார்  எடுப்பார்  எனையெடுக்கும்  துணைநின்  மலர்த்தாள்  துணைகண்டாய் 
அடர்ந்தார்  தமக்கும்  அருள்கின்றோய்  ஆணை  ஆணை  அடியேனே. 
18
அடியார்  இன்பம்  அடைகின்றார்  அடியேன்  ஒருவன்  அயர்கின்றேன் 
படியார்  பலரும்  பலபேசிச்  சிரியா  நின்றார்  பரந்திரவும் 
விடியா  நின்ற  தென்புரிவேன்  இன்னுங்  கருணை  விளைத்திலையே 
கொடியார்  பிழையும்  குணமாகக்  கொண்டு  மகிழும்  குணக்குன்றே. 
19
குன்றா  நிலைநின்  றருள்அடைந்தார்  அன்பர்  எல்லாம்  கொடியேன்நான் 
நன்றாம்  நெறிசென்  றறியாதே  மனஞ்செல்  வழியே  நடக்கின்றேன் 
பொன்றா  மணியே  அவர்க்கருளி  என்னை  விடுத்தல்  புகழன்றே 
என்றால்  எனக்கே  நகைதோன்றும்  எந்தாய்  உளத்துக்  கென்னாமே. 
20
என்ஆ  ருயிருக்  குயிர்அனையாய்  என்னைப்  பொருளாய்  எண்ணிமகிழ்ந் 
தந்நாள்  அடிமை  கொண்டளித்தாய்  யார்க்கோ  வந்த  விருந்தெனவே 
இந்நாள்  இரங்கா  திருக்கின்றாய்  எங்கே  புகுவேன்  என்புரிவேன் 
நின்னால்  அன்றிப்  பிறர்தம்மால்  வேண்டேன்  ஒன்றும்  நின்மலனே. 
21
நின்பால்  அடைந்தார்  அன்பாலே  அடியார்  எல்லாம்  நெடுவினையேன் 
வன்பால்  மனப்பேய்  தன்பாலே  வருந்திச்  சுழன்று  மயர்கின்றேன் 
தென்பால்  நோக்கி  இன்பநடம்  செய்யும்  இறைவா  சிறுவனுக்கா 
முன்பால்  அமுதக்  கடல்அளித்த  முதல்வா  என்னை  முன்னுதியே. 
22

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com