திருவருட்பா  73. பிரார்த்தனைப் பதிகம்

அப்பார்  மலர்ச்சடை  ஆரமு  தேஎன்  அருட்டுணையே 
துப்பார்  பவள  மணிக்குன்ற  மேசிற்  சுகக்கடலே 
வெப்பார்  தருதுய  ரால்மெலி  கின்றனன்  வெற்றடியேன் 
இப்பார்  தனில்என்னை  அப்பாஅஞ்  சேல்என  ஏன்றுகொள்ளே. 
1
ஏன்றுகொள்  வான்நம  தின்னுயிர்  போல்முக்கண்  எந்தைஎன்றே 
சான்றுகொள்  வாய்நினை  நம்பிநின்  றேன்இத்  தமிஅடியேன் 
மான்றுகொள்  வான்வரும்  துன்பங்கள்  நீக்க  மதித்திலையேல் 
ஞான்றுகொள்  வேன்அன்றி  யாதுசெய்  வேன்இந்த  நானிலத்தே. 
2
நிலத்தே  சிறுவர்செய்  குற்றங்கள்  யாவும்  நினைத்தறவோர் 
சலத்தே  உளத்தை  விடார்என்பர்  ஆதலின்  தாதையென்றே 
குலத்தேவர்  போற்றும்  குணக்குன்ற  மேஎங்  குலதெய்வமே 
புலத்தே  இழிதகை  யேன்பிழை  யாவும்  பொறுத்தருளே. 
3
அருளார்  அமுதப்  பெருங்கட  லேதில்லை  அம்பலத்தில் 
பொருளார்  நடம்புரி  புண்ணிய  னேநினைப்  போற்றுகிலேன் 
இருளார்  மனத்தின்  இடர்உழந்  தேன்இனி  யாதுசெய்கேன் 
மருளார்  மலக்குடில்  மாய்ந்திடில்  உன்அருள்  வாய்ப்பதற்கே. 
4
வாயார  நின்பொன்  மலர்த்தாள்  துணையே  வழுத்துகிலேன் 
ஓயா  இடர்உழந்  துள்நலி  கின்றனன்  ஓகெடுவேன் 
பேயாய்ப்  பிறந்திலன்  பேயும்ஒவ்  வேன்புலைப்  பேறுவக்கும் 
நாயாய்ப்  பிறந்திலன்  நாய்க்கும்  கடைப்பட்ட  நான்இங்ஙனே. 
5
நான்செய்த  குற்றங்கள்  எல்லாம்  பொறுத்துநின்  நல்லருள்நீ 
தான்செய்  தனைஎனில்  ஐயாமுக்  கட்பெருஞ்  சாமிஅவற் 
கேன்செய்  தனைஎன  நிற்றடுப்  பார்இலை  என்அரசே 
வான்செய்த  நன்றியை  யார்தடுத்  தார்இந்த  வையகத்தே. 
6
வையகத்  தேஇடர்  மாக்கடல்  மூழ்கி  வருந்துகின்ற 
பொய்யகத்  தேனைப்  புரந்தரு  ளாமல்  புறம்பொழித்தால் 
நையகத்  தேன்எது  செய்வேன்அந்  தோஉள்  நலிகுவன்காண் 
மெய்யகத்  தேநின்  றொளிர்தரும்  ஞான  விரிசுடரே. 
7
விரிதுய  ரால்தடு  மாறுகின்  றேன்இந்த  வெவ்வினையேன் 
பெரிதுய  ராநின்ற  நல்லோர்  அடையும்நின்  பேரருள்தான் 
அரிதுகண்  டாய்அடை  வேன்எனல்  ஆயினும்  ஐயமணிப் 
புரிதுவர்  வார்சடை  யாய்நீ  உவப்பில்  புரியில்உண்டே. 
8
உண்டோஎன்  போல்துய  ரால்அலை  கின்றவர்  உத்தமநீ 
கண்டோர்  சிறிதும்  இரங்குகி  லாய்இக்  கடையவனேன் 
பண்டோர்  துணைஅறி  யேன்நின்னை  யன்றிநிற்  பற்றிநின்றேன் 
எண்டோள்  மணிமிடற்  றெந்தாய்  கருணை  இருங்கடலே. 
9
கடலே  அனைய  துயர்மிகை  யால்உட்  கலங்கும்என்னை 
விடலே  அருளன்  றெடுத்தாளல்  வேண்டும்என்  விண்ணப்பமீ 
தடல்ஏ  றுவந்த  அருட்கட  லேஅணி  அம்பலத்துள் 
உடலே  மருவும்  உயிர்போல்  நிறைஒற்றி  யூரப்பனே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com