திருவருட்பா  74. திருப்புகற் பதிகம்

வேகமுறு  நெஞ்ச  மெலிவும்  எளியேன்றன் 
தேக  மெலிவும்  தெரிந்தும்  இரங்காயேல் 
மாக  நதியும்  மதியும்  வளர்சடைஎம் 
ஏக  இனிமற்  றெனக்கார்  இரங்குவரே. 
1
கள்ள  மனத்துக்  கடையோர்பால்  நாணுறும்என் 
உள்ள  மெலிவும்  உடல்மெலிவும்  கண்டிருந்தும் 
எள்ளின்  அளவும்  இரங்கி  அருளாயேல் 
எள்ளும்  உலகில்  எனக்கார்  இரங்குவரே. 
2
பொன்னை  வளர்ப்பாரைப்  போற்றாமல்  எம்பெருமான் 
உன்னைமதித்  துன்னுறும்என்  உள்ளம்  அறிந்திருந்தும் 
அன்னையினும்  சால  அருள்வோய்  அருளாயேல் 
என்னை  முகம்பார்த்  தெனக்கார்  இரங்குவரே. 
3
துன்னுடைய  வியாக்கிரமத்  தோலுடையான்  தானிருக்கப் 
பொன்னுடையார்  பக்கம்  புகுவானேன்  என்றிருப்பேன் 
தன்னுடைய  துன்பம்  தவிர்த்திங்  கருளாயேல் 
என்னுடையாய்  மற்றிங்  கெனக்கார்  இரங்குவரே. 
4
வன்கண்ணர்  தம்மை  மதியாதுன்  பொன்னடியின் 
தன்கண்  அடியேன்தன்  சஞ்சலவன்  நெஞ்சகத்தின் 
புன்கண்  உழல்வைப்  புகல்கின்றேன்  காத்திலையேல் 
என்கண்  அனையாய்  எனக்கார்  இரங்குவரே. 
5
தோன்றுவதும்  மாய்வதும்ஆம்  சூழ்ச்சியிடைப்  பட்டலைந்து 
மான்றுகொளும்  தேவர்  மரபை  மதியாமே 
சான்றுகொளும்  நின்னைச்  சரணடைந்தேன்  நாயேனை 
ஏன்றுகொளாய்  என்னில்  எனக்கார்  இரங்குவரே. 
6
தீதுமுற்றும்  நாளும்  செயினும்  பொறுத்தருளும் 
சாதுமுற்றும்  சூழ்ந்த  தயாநிதிநீ  என்றடைந்தேன் 
கோதுமுற்றும்  தீரக்  குறியாயேல்  நன்மைஎன்ப 
தேதும்அற்ற  பாவிக்  கெவர்தான்  இரங்குவரே. 
7
துன்றியமா  பாதகத்தோன்  சூழ்வினையை  ஓர்கணத்தில் 
அன்றுதவிர்த்  தாண்ட  அருட்கடல்நீ  என்றடுத்தேன் 
கன்றுறும்என்  கண்கலக்கம்  கண்டும்  இரங்காயேல் 
என்றும்உளாய்  மற்றிங்  கெவர்தான்  இரங்குவரே. 
8
கோடாமே  பன்றிதரும்  குட்டிகட்குத்  தாயாகி 
வாடா  முலைகொடுத்த  வள்ளல்என  நான்அடுத்தேன் 
வாடாஎன்  றுன்அருளில்  வாழ்வான்  அருளிலையேல் 
ஈடாரும்  இல்லாய்  எனக்கார்  இரங்குவரே. 
9
கல்லா  நடையேன்  கருணையிலேன்  ஆனாலும் 
நல்லார்  புகழும்  நமச்சிவா  யப்பெயரே 
அல்லாது  பற்றொன்  றறியேன்  அருளாயேல் 
எல்லாம்  உடையாய்  எனக்கார்  இரங்குவரே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com